எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ப்ரெண்ட் ஹகெட்கட்டுரைகள்

வானவில்களும் தேவனின் வாக்குகளும்

நயாகரா நீர்வீழ்ச்சியின் அற்புதமான ஆற்றலை நான் பார்த்துக் கொண்டிருந்த போது, ​​மற்ற சுற்றுலாப் பயணிகள் திடீரென புகைப்படம் எடுக்கத் தொடங்கியதைக் கவனித்தேன். அதே திசையில் பார்த்தபோது, ​​ஒரு வானவில் தோன்றியதைக் கண்டேன் , அது ஆற்றின் குறுக்கே வளைந்திருந்தது. இது குதிரைக் குளம்பு வடிவ கனேடிய நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் தொடங்கி, அமெரிக்க நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் முடிவடைவது போல் தோன்றியது.

உண்மையில், வானவில்லுக்கு முடிவே இல்லை. வானவில் என்பது ஒரு முழு வட்டம், நான் ஒருமுறை மட்டுமே பார்த்திருக்கிறேன். நான் விமானத்தின் ஜன்னலில் பார்த்துக் கொண்டிருந்தேன், சூரியன் சரியான திசையில் பிரகாசித்து, மேகங்களுக்கு மேலே ஒரு முழு வட்ட வானவில்லை வெளிக்காட்டியது. விமானம் திரும்பி, வட்டம் மறையும் வரை, இந்த  காட்சியால் பரவசமாக அமர்ந்திருந்தேன்.

நான் சிந்திக்கும்படி, அந்த வானவில் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது. தேவனுக்கு ஆரம்பமும் முடிவும் இல்லை, நாம் எங்கிருந்தாலும் அவர் தம் வாக்குத்தத்தங்களை நமக்கு வெளிப்படுத்துகிறார். முடிவில்லாத, நம் நித்திய தேவன் "[அவரது] வில்லை மேகத்தில் வைத்(தார்)தேன்" (ஆதியாகமம் 9:13). "எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு" (வ.15) அது வாக்குத்தத்தமாக இருந்தது. இன்றும் கூட, நம் சிருஷ்டிகர் அந்த வாக்குத்தத்தத்தின் நினைவூட்டலை அவருடைய படைப்பாகிய நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் (வ.13-16).

ஏசாயா 40:28, “பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன்.... அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது” என்கிறது. என்ன ஒரு அற்புதமான சிந்தனை! தம் வாக்குத்தத்தத்தைக் காப்பவரைப் பற்றி அறிந்துகொள்ள நமக்கு நித்தியமே இருக்கும், மேலும் அவருடைய புத்தியின் ஆழத்தை நாம் ஒருபோதும் அடைய மாட்டோம்.

 

வேதவசனங்கள் வெளிப்படுத்துவது என்ன

ஏப்ரல் 1817 இல், இங்கிலாந்தின் க்ளௌசெஸ்டர்ஷையரில் ஒரு தன்னிலையிழந்த இளம் பெண், அயல்நாட்டு ஆடைகளை அணிந்துகொண்டு, புரியாத பாஷையில் பேசிக்கொண்டிருந்தாள். அவளைப்  பிச்சைக்காரி என்று கருதி, அதிகாரிகள் அவளைச் சிறையில் அடைத்தனர். இருப்பினும், அவள் ஜாவாசு தீவைச் சேர்ந்த இளவரசி கராபூ என்று சிறை அதிகாரிகளை நம்ப வைத்தாள். உண்மையில் அவள் மேரி வில்காக்ஸ் என்ற பணிப்பெண் என்பதை விருந்தினர் மாளிகை பணியாளர் ஒருவர் வெளிப்படுத்தும் வரை சமூகம் அவளை ராணிபோல பத்து வாரங்கள்  நடத்தியது.

இந்த இளம் பெண் எப்படி ஒரு முழு சமூகத்தையும் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு ஏமாற்றினார் என்று நாம் ஆச்சரியப்படலாம். ஆனால், 2 யோவான் புத்தகம் ஏமாற்றுவது ஒன்றும் புதிதல்ல என்று நம்மை எச்சரிக்கிறது, அது குறிப்பிடுவது போல் "அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்” (1:7). இவர்கள், இயேசு கிறிஸ்து "மாம்சத்தில்" வந்தார் என்பதை மறுப்பவர்கள் (வ.7), அல்லது கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிறவர்கள் (வ.9)  வேதாகமம் இன்று நமக்குப் போதுமானதாக இல்லை என்று அறிவிக்கிறார்கள். இந்த இரண்டு வகையான வஞ்சகர்களும் நாம் நம் "செய்கைகளின் பலனை" (வ.8) இழந்துபோகும்படி செய்யலாம் மற்றும் அவர்களின் துர்க்கிரியைகளுக்குப் பங்குள்ளவனாயிருக்கும்படி நம்மை ஏமாற்றலாம் (வ.11).

யாரும் ஏமாற்றப்படுவதை விரும்புவதில்லை. க்ளௌசெஸ்டர்ஷையர் மக்கள், சில ஆடைகள் மற்றும் உணவுகள் தவிர அதிகம் இழக்கவில்லை. ஆனால் பாவம் மற்றும் வஞ்சகத்தின் விளைவுகள் நம்மை அச்சுறுத்திக்கொண்டே இருக்கின்றன என்று வேதாகமம் சொல்கிறது. நாம் வேதாகமத்தில் ஈடுபாடு கொள்ளுகையில், ​​“அவருடைய கற்பனைகளின்படி நடப்ப(தால்)தே” (வ.6) வஞ்சகத்திற்குத் தப்பிக்கத் தேவன் நமக்கு உதவுவார்.

தேவனுடைய வாக்குகளால் ஊக்கமடைதல்

மருத்துவமனையில் நீண்ட நாள் அது. இளமையில் ஜொலித்த அந்த பத்தொன்பது வயது இளைஞனைப் பாதித்த நோய்க்கு இன்னும் பதில் இல்லை. வீட்டிற்குத் திரும்பிய குடும்பத்தினர் தளர்ந்திருந்தனர். அவர்களுக்கு ஆச்சரியமாக, அழகாக அலங்கரிக்கப்பட்ட ஒரு பெட்டியின் முன்புறத்தில் ஏசாயா 43:2 அச்சிடப்பட்டு, படியில் வைக்கப்பட்டிருந்தது. உள்ளே, நண்பர்கள் கையால் எழுதப்பட்ட பலதரப்பட்ட ஊக்கமளிக்கும் வேதாகம வசனங்கள் இருந்தன. அடுத்த மணிநேரம் வேதவசனங்களாலும், குடும்ப நண்பர்களின் சிந்தனையாக்கச் செயலாலும் உற்சாகம் உண்டானது.

கடினமான நேரங்கள் அல்லது குடும்ப பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள்,  எப்போதும் ஒரு ஆத்மார்த்தமான ஊக்கத்தை உபயோகிக்கலாம். அதுதான் வேத வசனங்கள். ஒரு நீண்ட பகுதியோ அல்லது ஒரே வசனமோ; உங்களை, ஒரு நண்பரை அல்லது குடும்ப உறுப்பினரை ஊக்குவிக்கும். தனிநபருக்காகவோ அல்லது அனைவருக்குமென்றோ பெறக்கூடிய உற்சாக துளிகளால் ஏசாயா 43 நிறைந்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில சிந்தனைகளை அதிலே கவனியுங்கள்: கர்த்தர் " உன்னைச் சிருஷ்டித்தவர்", "உன்னை உருவாக்கினவர்", "உன்னை மீட்டவர்" மற்றும் "உன்னைப் பேர்சொல்லி அழைத்தவர்" (வ.1). கர்த்தர் "உன்னோடு இருப்பார்" (வ. 2), அவர் "இஸ்ரவேலின் பரிசுத்தர்" மற்றும் அவர் நமது "இரட்சகர்" (வ. 3).

தேவனின் வாக்குகளை நீங்கள் கருத்தில் கொள்ளும்போது, ​​அவை உங்களை ஊக்குவிக்கட்டும். உங்களுக்குத் தேவையானதை அவர் வழங்குகையில், நீங்கள் வேறொருவரை ஊக்குவிக்கலாம். அந்த வசனப் பெட்டியைச் செய்ய அதிகம் செலவாகவில்லை, ஆனால் அதன் தாக்கம் விலையேறப்பெற்றது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும், அந்த வசன அட்டைகளில் சில இன்னும் அந்த குடும்பத்தால் போற்றப்படுகின்றன.

மறுபடியும் பிறந்தீர்களா?

"மறுபடியும் பிறப்பதா? அதற்கு என்ன பொருள்? "நான் இதற்கு முன்பு அந்த வார்த்தையைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை" அடக்க ஆராதனையின் இயக்குநர் கேட்டார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மரித்தவரின் மகன், யோவான் 3-ம் அதிகாரத்தின் வார்த்தைகளின் மூலம் அதன் அர்த்தம் என்ன என்பதை விளக்கினார்.

"இது, நாம் அனைவரும் இந்த உலகில் ஒரு முறை பிறந்தோம் என்ற நிஜத்தைப் பற்றியது. நமது நல்ல செயல்களைத் தீய செயல்களுக்கு எதிராக எடைபோட, தேவனிடம் எந்த ஒரு மந்திர தராசும் இல்லை. நாம் ஆவியினால் பிறக்க வேண்டும் என்று தேவன் கோருகிறார். அதனால்தான் இயேசு சிலுவையில் மரித்தார்; அவர் நம்முடைய பாவங்களுக்கான கிரயத்தைச் செலுத்தினார், மேலும் அவருடன் நித்திய ஜீவனைப் பெறுவதைச் சாத்தியமாக்கினார். இதை நமது சுயத்தால் செய்ய முடியாது" என்று அவர் கூறினார்.

யோவான் 3 இல், நிக்கொதேமு உண்மையில் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டாரா என்று சந்தேகிக்கத் தொடங்கினார். வேத வாக்கியங்களில் தேறின போதகர் அவர் (வ. 1), இயேசு வித்தியாசமானவர் என்பதையும் அவருடைய போதனைக்கு அதிகாரம் இருப்பதையும் அவர் ஒப்புக்கொண்டார் (வ. 2). இதை அவர் சோதிக்க விரும்பினார், எனவே அவர் ஒரு இரவு கிறிஸ்துவை அணுகி காரியத்தைக் கண்டுகொண்டார். "நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டுமென்று" (வ. 7) என்ற இயேசுவின் கூற்றை நிக்கொதேமு ஏற்றுக்கொண்டு விசுவாசித்திருக்க வேண்டும், ஏனெனில் சிலுவையில் அறையப்பட்ட பிறகு (19:39) இரட்சகரின் உடலை அடக்கம் செய்ய அவர் உதவினார்.

ஆறுதல் கூட்டத்தை நடத்தியவர்  வீட்டிற்குச் சென்று யோவானின் நற்செய்தியின் மூன்றாவது அத்தியாயத்தைப் படிக்க ஒப்புக்கொண்டார். அவரிடம் பேசிய மகனைப் போல, இயேசுவின் வார்த்தைகளை இதயத்தில் ஏற்று, அவர் நமக்கு உதவும்போது பிறருடன் பகிர்ந்து கொள்வோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவன் நம் கதைகளை உபயோகிக்கிறார்

நான் நினைவுகளுக்காக சேமித்தவற்றின் பெட்டியைத் திறந்து, பத்து வாரக் கருவில் இருக்கும் குழந்தையின் கால்களின் சரியான அளவு மற்றும் வடிவத்தைக் கொண்ட ஒரு சிறிய, வெள்ளி சட்டகத்தை வெளியே எடுத்தேன். பத்து சிறு கால்விரல்களைத் தடவியபடியே, எனது முதல் கருச்சிதைவையும், நான் “அதிர்ஷ்டசாலி, அவ்வளவாய் துன்பப்பட வேண்டியதில்லை” என்று சொன்னவர்களையும் நினைவு கூர்ந்தேன். என் வயிற்றில் ஒருமுறை துடித்த இதயம் போல என் குழந்தையின் பாதங்கள் உண்மையானவை என்பதை அறிந்து நான் துக்கமடைந்தேன். என்னை மனச்சோர்விலிருந்து விடுவித்ததற்காகவும், குழந்தையை இழந்து வருந்தும் மற்றவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காகவும் எனது கதையைப் பயன்படுத்தியதற்காகத் தேவனுக்கு நன்றி தெரிவித்தேன். என் கருச்சிதைவுக்கு இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு, நானும் என் கணவரும் இழந்த குழந்தைக்குக் காய் என்று பெயரிட்டோம், சில மொழிகளில் “மகிழ்ச்சி” என்று பொருள். எனது இழப்பால் நான் இன்னும் வேதனைப்பட்டாலும், என் இதயத்தைக் குணப்படுத்தியதற்காகவும், மற்றவர்களுக்கு உதவ எனது கதையைப் பயன்படுத்தியதற்காகவும் தேவனுக்கு நன்றி கூறுகிறேன்.

107-ம் சங்கீதத்தை எழுதியவர், தேவனுடைய மாறாத தன்மையால் களிகூர்ந்து இவ்வாறு பாடினார்: “கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது.” (வ.1). “கர்த்தரால்.. மீட்கப்பட்(டவர்கள்)டு” “அப்படிச் சொல்லக்கடவர்கள்” (வ. 2 ,3), “அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக” (வ. 9) என்று அவர் வலியுறுத்தினார். தேவன் ஒருவரே “தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று” (வ. 8) என்ற வாக்குத்தத்தத்துடன் அவர் நம்பிக்கை அளித்தார்.

கிறிஸ்துவின் சிலுவை பலியின் மூலம் மீட்கப்பட்டவர்களாயினும் கூட, துக்கத்திலிருந்தும் துன்பங்களிலிருந்தும் எவரும் தப்ப இயலாது. எவ்வாறாயினும், தேவனின் இரக்கத்தை நாம் அனுபவிக்க முடியும், ஏனெனில் அவர் நம் கதைகளைப் பயன்படுத்தி மற்றவர்களை தமது மீட்கும் அன்பிற்கு நேராய் நடத்துகிறார். 

 

கிறிஸ்துவைப்போல ஒரு மறுஉத்தரவு

சந்தோஷ், கரோலினாவின் கோடை வெயில் உஷ்ணத்தில் கட்டிட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அருகில் வசித்த ஒருவர் அவர் வேலை செய்து கொண்டிருந்த முற்றத்திற்குச் சென்றார். தெளிவாகக் கோபமாக, அண்டை வீட்டுக்காரர் கட்டிடத் திட்டத்தைக் குறித்தும், அது செய்யப்படுகிற விதம் குறித்தும் அனைத்தையும் குறைவாக பேசி, சபிக்கவும் விமர்சிக்கவும் தொடங்கினார். கோபமான பக்கத்து வீட்டுக்காரர் கத்துவதை நிறுத்தும் வரை சந்தோஷ் பதில் சொல்லாமல் வாய்மொழியின் அடிகளைப் பெற்றுக்கொண்டாா். பின்னர் அவர் மெதுவாக, “உங்களுக்கு இன்று மிகவும் மோசமான நாள், இல்லையா?” என்று பதிலளித்தார். திடீரென்று, கோபமடைந்த அண்டை வீட்டாரின் முகம் மென்மையாகி, அவரது தலை குனிந்து, “நான் உங்களிடம் பேசிய விதத்திற்காக வருந்துகிறேன்” என்றார். சந்தோஷின் அன்புச்செயல் அண்டை வீட்டாரின் கோபத்தைத் தணித்தது.

நாம் திருப்பித் தாக்க விரும்பும் நேரங்கள் உண்டு. வையப்படுகையில் வையவும், அவமானத்திற்கு அவமானப்படுத்தவும் விரும்புகின்றோம். அதற்கு மாறாக நம்முடைய பாவங்களின் விளைவுகளை இயேசு தாங்கியதைப் போல மிகச் சரியாகக் காணப்பட்ட கருணையையே சந்தோஷ் முன்மாதிரியாகக் காட்டினார், “அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்” (1 பேதுரு 2:23).

நாம் அனைவரும் தவறாகப் புரிந்து கொள்ளப்படும், தவறாகச் சித்தரிக்கப்படும் அல்லது தவறாகத் தாக்கப்படும் தருணங்களைச் சந்திப்போம். நாம் அன்பாகப் பதிலளிக்க விரும்பாமல் இருக்கலாம், ஆனால் இயேசு நம்மை அன்பாக இருக்கவும், சமாதானத்தைத் தொடரவும், புரிதலைக் காட்டவும் அழைக்கிறாா். இன்று அவர் நமக்கு உதவுவதால், மோசமான நாளைத் கடக்கும் ஒருவரை ஆசீர்வதிக்கத் தேவன் நம்மைப் பயன்படுத்தக்கூடும். 

 

விசுவாசத்தால் ஆம் என்பது

வேலையில் ஒரு புதிய பொறுப்பை ஏற்கக்கூடுமா என்று கேட்டபோது, நான் மாட்டேன் என்று சொல்ல விரும்பினேன். நான் தடைகளைப் பற்றி யோசித்து, அவற்றைக் கையாள நான் தகுதியானவனல்ல என்று உணர்ந்தேன். ஆனால் நான் ஜெபித்து, வேதாகமம் மற்றும் பிற விசுவாசிகளிடமிருந்தும் வழிகாட்டுதலை நாடியபோது, ஆம் என்று சொல்லத் தேவன் என்னை அழைக்கிறார் என்பதை உணர்ந்தேன். வேதாகமத்தின் மூலம், அவருடைய உதவி எனக்கும் உறுதியளிக்கப்பட்டது. எனவே, நான் பணியை ஏற்றுக்கொண்டேன், ஆனால் இன்னும் கொஞ்சம் பயமிருந்தது.

இஸ்ரவேலர்களிலும், கானானைச் சுதந்தரிப்பதிலிருந்து பின்வாங்கிய பத்து வேவுக்காரர்களிலும் நான் என்னைக் காண்கிறேன் (எண் 13:27-29, 31-33; 14:1-4). அவர்களும் கஷ்டங்களைக் கண்டு, எவ்வாறு தேசத்தில் உள்ள பலசாலிகளைத் தோற்கடித்து, அவர்களுடைய அரணான பட்டணங்களைக் கைப்பற்றுவது என்று யோசித்தார்கள். “நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம்” (13:33) என்று வேவுக்காரர் கூறினர், மேலும் இஸ்ரவேலர்கள், “நாங்கள் பட்டயத்தால் மடியும்படிக்கும்.. கர்த்தர் எங்களை இந்த தேசத்துக்குக் கொண்டுவந்தது என்ன?” (14:3) என்று முறுமுறுத்தார்கள்.

கானானைத் தம்முடைய மக்களுக்குக் கொடுப்பதாக தேவன் ஏற்கனவே வாக்களித்திருந்ததை காலேபும் யோசுவாவும் மட்டுமே நினைவு கூர்ந்தனர் (ஆதியாகமம் 17:8; எண்ணாகமம் 13:2). அவருடைய வாக்குத்தத்தத்திலிருந்து அவர்கள் நம்பிக்கை பெற்றனர், எனவே தேவனின் பிரசன்னம் மற்றும் உதவியின் வெளிச்சத்தில் வரவிருக்கும் சிரமங்களை முன்னோக்கினர். அவருடைய வல்லமை, பாதுகாப்பு மற்றும் போஷிப்பில் அவர்கள் எதிரியின் எதிர்ப்பை எதிர்கொள்வார்கள், அவர்களுடைய சுயத்தில் அல்ல (எண்ணாகமம் 14:6-9).

தேவன் எனக்குக் கொடுத்த பணியும் எளிதானது அல்ல; ஆனால் அதினுடே அவர் எனக்கு உதவினார். அவருடைய நிர்ணயங்களில் நாம் எப்போதும் சிரமங்களைத் தவிர்க்க முடியாது என்றாலும், காலேப் மற்றும் யோசுவாவைப் போல, “கர்த்தர் நம்மோடே இருக்கிறார்” (வ.9) என்பதை அறிந்து நாம் அவற்றை எதிர்கொள்ள முடியும்.