ஒரு மதியீனமான முதலீடு
ஐடா ஸ்கட்டர், தமிழ்நாட்டிலுள்ள வேலூர் கிராமத்தில் மருத்துவ சிகிச்சை கொடுப்பதற்கு ஒரு சிறிய இடத்தை வாங்கினார். அவர்களுடைய இந்த முயற்சி மதியீனமானது என்று பலர் கருதினர். இளமையான, திருமணமாகாத ஐடா ஸ்கட்டர், அமெரிக்காவிலிருந்த தன்னுடைய சொந்த வீட்டின் சுகத்தை விட்டுவிட்டு, தற்போது கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை என்று அறியப்படுகிற நிறுவனத்தை ஸ்தாபிக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால் வீணாய் கருதப்பட்ட, அவர்களின் நேரம், மூலதனம், மற்றும் முயற்சிகள், இன்று மருத்துவ சிகிச்சையின் முன்னோடியாகவும், இந்திய சுகாதார அமைப்பிற்கு ஓர் கலங்கரை விளக்காகவும் திகழ்கிறது.
தேவன் எரேமியாவிடம் முற்றிலும் மதியீனமான ஒரு முதலீட்டைச் செய்யும்படிக்கு கட்டளையிடுகிறார்: “பென்யமீன் நாட்டு ஆனத்தோத் ஊரில் உள்ள நிலத்தை வாங்கிக்கொள்ளும்” (எரேமியா 32:8). அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனை எருசலேமை முற்றிக்கை போட்டிருந்தது (வச. 2). எரேமியா நிலத்தை வாங்கினாலும் அது கூடிய சீக்கிரத்திலேயே பாபிலோனுக்குச் சொந்தமாகிவிடும். எல்லாம் இழக்கப் போகிற நேரத்தில் எந்த முட்டாளாவது முதலீடு செய்வானா?
தேவனுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கிற ஒரு நபர், எதிர்காலத்தைக் குறித்து எவருக்கும் இல்லாத ஒரு பார்வையோடு இருப்பார். “ஏனெனில் இனி இந்த தேசத்தில் வீடுகளும் நிலங்களும் திராட்சத்தோட்டங்களும் கொள்ளப்படும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றேன்” (வச. 15). தேவன் அழிவை விட அதிகமான நன்மையைக் காண்கிறார். தேவன் மீட்பு, சுகம் மற்றும் மறுசீரமைப்பு ஆகியவற்றை நம்முடைய வாழ்க்கையில் கொண்டுவருவதாக வாக்குப் பண்ணுகிறார். தேவனுடைய ஊழியத்திலோ அல்லது தனிப்பட்ட உறவுகளிலோ நாம் செய்யும் மதியீனமான முதலீடுகள் வீணாய் போவதில்லை. மற்றவர்களுடைய வாழ்க்கையில் தேவனுடைய நடத்துதலின் பேரில் நாம் செய்யும் மதியீனமான முதலீடுகள் இவ்வுலகத்திலேயே அர்த்தமுள்ளதாய் மாறும்.
பரலோகத்திலிருந்து செவிகொடுப்பவர்
மெய்சன் என்னும் பதினெட்டு மாத குழந்தை தன் தாயின் குரலைக் கேட்டதேயில்லை. மருத்துவர்கள் அவனுக்கு முதன்முதலாய் செயற்கைக் காது கேட்கும் கருவியைப் பொருத்தினர். அதைப் பொருத்தியவுடன், அவன் தாய் லாரின், அவனிடம் “என் குரல் கேட்கிறதா?" என்றார். அந்தக் குழந்தையின் கண்கள் ஒளிர்ந்தது, “ஹாய் பேபி” என்று லாரினின் பேச்கைக் கேட்டு, மென்மையாய் புன்னகைத்த மெய்சன் தன் மென்மையான குரலால் பதிலளித்தான். லாரின் கண்ணீருடன் அந்த அற்புதத்தை சாட்சியிட்டார். ஒரு பிரச்சனையில் அவரை சிலர் துப்பாக்கியால் மூன்று முறை சுட்டதால், லாரின் மெய்சனை உரிய காலத்திற்கு முன்னரே பெற்றெடுத்தார். ஒரு பவுண்ட் எடை மட்டுமே இருந்த மெய்சன் தீவிர சிகிச்சைப் பிரிவில் 158 நாட்கள் இருந்தான். அவன் பிழைப்பான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் கேட்கும் திறனை மட்டும் இழந்துவிட்டான்.
அந்த மனதை உருகச்செய்யும் சம்பவம் எனக்கு தேவன் செவிகொடுக்கிறவர் என்பதை நினைவுப்படுத்தியது. மக்களின் கடினமான காலங்களில் சாலமோன் ராஜா தேவனின் செவிகளில் கேட்கும்படி ஆர்வத்துடன் ஜெபித்தார். “மழை பெய்யாதிருக்கும்போது" (1 இராஜாக்கள் 8:35), “பஞ்சம் அல்லது கொள்ளை நோய்," வாதை அல்லது வியாதி, (வச. 37), யுத்தம் (வச. 44), பாவம், ஆகிய இவற்றில் “பரலோகத்திலிருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு அவர்கள் நியாயத்தை விசாரிப்பீராக" (வச. 45) என்று வேண்டிக்கொண்டார்.
தேவன் பதில் அளித்ததை நினைக்கும்போது நம் இருதயங்கள் அசைகிறது. “என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்” (2 நாளாகமம் 7:14). பரலோகம் தூரத்தில் இருக்கலாம்; ஆனால் இயேசு அவரை நம்பிக்கையோடு தேடுகிறவர்களின் கூடவே இருக்கிறார். தேவன் நம் வேண்டுதல்களைக் கேட்டருளி பதில் கொடுப்பவராயிருக்கிறார்.
தப்பிப்பதா அல்லது சமாதானமா?
“தப்பித்தல் (ESCAPE)” என்று பெயரிடப்பட்ட சுடுதண்ணீர் தொட்டி விற்கும் கடையின் விளம்பர பலகையை பார்த்தோம். என் மனைவியும் நானும் ஒரு நாள் அந்த தொட்டியை வாங்க வேண்டும் என்று பேசிக்கொண்டோம். அதை வீட்டின் கொல்லைப் புறத்திலே வைத்துக்கொண்டால் விடுமுறை கொண்டாடுவது போல் இருக்கும் என்று யோசித்தோம். ஆனால் அதை அவ்வப்போது சுத்தம் செய்யவேண்டும், அதற்கான மின் கட்டணத்தை செலுத்தவேண்டும். அதை நான் யோசித்துக்கொண்டிருக்கும்போது, “தப்பித்தல்” என்ற கடையின் பெயரானது, நான் சில காரியங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணத் தூண்டியது. அந்த வார்த்தை நமக்குத் தேவையான நிவாரணம், ஆறுதல், பாதுகாப்பு மற்றும் தப்பித்தல் ஆகியவற்றை வாக்களிக்கிறது. ஓய்வெடுப்பதிலேயோ அல்லது அழகான இடத்தை சுற்றிப்பார்ப்பதிலேயோ எந்த தவறும் இல்லை. ஆனால் வாழ்க்கையின் கடினங்களில் இருந்து தப்பிப்பதற்கும் அவற்றின் மத்தியில் தேவனைச் சார்ந்து வாழ்வதற்கும் வித்தியாசம் உண்டு.
யோவான் 16ல், இயேசு தன் சீஷர்களிடம் அவர்களின் வாழ்க்கையில் விசுவாசப் போராட்டங்கள் உண்டு என்கிறார், “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன்” (வச. 33) என்ற வாக்குறுதியையும் கொடுத்துள்ளார். தம்முடைய சீஷர்கள் சோர்ந்துபோவதை இயேசு விரும்பவில்லை. அதற்கு பதிலாக சீஷர்கள் தம் மீது விசுவாசம் வைக்குமாறும், “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்கு சொன்னேன்," என்கிற இளைப்பாறுதலை அறிய வேண்டும் என்றும் அவர் விரும்பினார் (வச. 33). இயேசு வேதனையில்லா வாழ்வை வாக்களிக்கவில்லை. நாம் அவர் மேல் விசுவாசம் வைத்து இளைப்பாறுதலை அனுபவிக்கும்போது, இந்த உலகம் விற்கும் “தப்பிக்கும்” வழிகளை விட நாம் திருப்தியான சமாதானத்தைப் பெறமுடியும் என்று வாக்களிக்கிறார்.
வெண்மையாக்கும் மன்னிப்பு
அந்த சிறிய சிவப்பு மாயாஜால செவ்வகப் பெட்டி அற்புதமான ஒன்று. என் சிறுவயதில் அதை வைத்துக்கொண்டு மணிக்கணக்காய் விளையாடுவேன். ஒரு குமிழைத் திருகினால், அதின் திரையில் நேர்க்கோடு தோன்றும். அடுத்த குமிழைத்திருகினால் செங்குத்தான கோட்டை வரைய முடியும். இரு குமிழ்களையும் சேர்த்துத் திருகினால் வரிகள், வட்டங்கள், அழகான மற்ற வடிவங்களை உருவாக்கமுடியும். ஆனால் அந்த மாயாஜால சிவப்புப் பெட்டியை தலைகீழாய் திருப்பி, மேலும் கீழுமாய் அசைக்கும்போதே நிஜமான மாயாஜாலம் தோன்றியது. ஒரு வெற்றுத்திரை தோன்றி, ஒரு புதிய படைப்பை உருவாக்க எனக்கு சந்தர்ப்பம் அளித்தது.
தேவனின் மன்னிப்பு இந்த பெட்டி போன்றது தான். தேவன் நம் பாவங்களை நீக்கி வெண்மையாக மாற்றுகிறார். நாம் செய்த தவறுகளை நாம் நினைவுகூர்ந்தாலும், தேவன் அவற்றை நினைவுகூர்வதில்லை. அவர் நம் பாவங்களை முற்றிலுமாய் கழுவி, அப்புறப்படுத்துகிறார். அவர் நம்முடைய பாவங்களுக்குத் தக்கதாக நமக்குச் செய்யாமல் (சங்கீதம் 103:10), கிருபையாக நம்மை மன்னிக்கிறார். நாம் முற்றிலும் தூய்மையாக்கப்பட்ட ஒரு வெற்றுப்பலகை. அவரிடம் மன்னிப்பைத் தேடும்போது, நமக்காய் ஒரு புது வாழ்வு காத்திருக்கிறது.
மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் (வச. 12) என்று சங்கீதக்காரன் நமக்கு நினைவுபடுத்துகிறார். தேவனுடைய கண்களில் நம் பாவங்கள் கருஞ்சிவப்பான எழுத்தாகவோ அல்லது ஒரு மோசமான ஓவியமாகவோ தென்படுவதில்லை. அவற்றை நமக்கு எட்டாத தூரத்திற்கு அனுப்பிவிடுகிறார். அதுதான் நம்முடைய மகிழ்ச்சிக்கான காரணம். அவருடைய அற்புதமான கிருபைக்காகவும் இரக்கத்திற்காகவும் நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம்.