மெய்சன் என்னும் பதினெட்டு மாத குழந்தை தன் தாயின் குரலைக் கேட்டதேயில்லை. மருத்துவர்கள் அவனுக்கு முதன்முதலாய் செயற்கைக் காது கேட்கும் கருவியைப் பொருத்தினர். அதைப் பொருத்தியவுடன், அவன் தாய் லாரின், அவனிடம் “என் குரல் கேட்கிறதா?” என்றார். அந்தக் குழந்தையின் கண்கள் ஒளிர்ந்தது, “ஹாய் பேபி” என்று லாரினின் பேச்கைக் கேட்டு, மென்மையாய் புன்னகைத்த மெய்சன் தன் மென்மையான குரலால் பதிலளித்தான். லாரின் கண்ணீருடன் அந்த அற்புதத்தை சாட்சியிட்டார். ஒரு பிரச்சனையில் அவரை சிலர் துப்பாக்கியால் மூன்று முறை சுட்டதால், லாரின் மெய்சனை உரிய காலத்திற்கு முன்னரே பெற்றெடுத்தார். ஒரு பவுண்ட் எடை மட்டுமே இருந்த மெய்சன் தீவிர சிகிச்சைப் பிரிவில் 158 நாட்கள் இருந்தான். அவன் பிழைப்பான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் கேட்கும் திறனை மட்டும் இழந்துவிட்டான்.

அந்த மனதை உருகச்செய்யும் சம்பவம் எனக்கு தேவன் செவிகொடுக்கிறவர் என்பதை நினைவுப்படுத்தியது. மக்களின் கடினமான காலங்களில் சாலமோன் ராஜா தேவனின் செவிகளில் கேட்கும்படி ஆர்வத்துடன் ஜெபித்தார். “மழை பெய்யாதிருக்கும்போது” (1 இராஜாக்கள் 8:35), “பஞ்சம் அல்லது கொள்ளை நோய்,” வாதை அல்லது வியாதி, (வச. 37), யுத்தம் (வச. 44), பாவம், ஆகிய இவற்றில் “பரலோகத்திலிருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு அவர்கள் நியாயத்தை விசாரிப்பீராக” (வச. 45) என்று வேண்டிக்கொண்டார்.

தேவன் பதில் அளித்ததை நினைக்கும்போது நம் இருதயங்கள் அசைகிறது. “என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்” (2 நாளாகமம் 7:14). பரலோகம் தூரத்தில் இருக்கலாம்; ஆனால் இயேசு அவரை நம்பிக்கையோடு தேடுகிறவர்களின் கூடவே இருக்கிறார். தேவன் நம் வேண்டுதல்களைக் கேட்டருளி பதில் கொடுப்பவராயிருக்கிறார்.