“தப்பித்தல் (ESCAPE)” என்று பெயரிடப்பட்ட சுடுதண்ணீர் தொட்டி விற்கும் கடையின் விளம்பர பலகையை பார்த்தோம். என் மனைவியும் நானும் ஒரு நாள் அந்த தொட்டியை வாங்க வேண்டும் என்று பேசிக்கொண்டோம். அதை வீட்டின் கொல்லைப் புறத்திலே வைத்துக்கொண்டால் விடுமுறை கொண்டாடுவது போல் இருக்கும் என்று யோசித்தோம். ஆனால் அதை அவ்வப்போது சுத்தம் செய்யவேண்டும், அதற்கான மின் கட்டணத்தை செலுத்தவேண்டும். அதை நான் யோசித்துக்கொண்டிருக்கும்போது, “தப்பித்தல்” என்ற கடையின் பெயரானது, நான் சில காரியங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணத் தூண்டியது. அந்த வார்த்தை நமக்குத் தேவையான நிவாரணம், ஆறுதல், பாதுகாப்பு மற்றும் தப்பித்தல் ஆகியவற்றை வாக்களிக்கிறது. ஓய்வெடுப்பதிலேயோ அல்லது அழகான இடத்தை சுற்றிப்பார்ப்பதிலேயோ எந்த தவறும் இல்லை. ஆனால் வாழ்க்கையின் கடினங்களில் இருந்து தப்பிப்பதற்கும் அவற்றின் மத்தியில் தேவனைச் சார்ந்து வாழ்வதற்கும் வித்தியாசம் உண்டு.

யோவான் 16ல், இயேசு தன் சீஷர்களிடம் அவர்களின் வாழ்க்கையில் விசுவாசப் போராட்டங்கள் உண்டு என்கிறார், “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன்” (வச. 33) என்ற வாக்குறுதியையும் கொடுத்துள்ளார். தம்முடைய சீஷர்கள் சோர்ந்துபோவதை இயேசு விரும்பவில்லை. அதற்கு பதிலாக சீஷர்கள் தம் மீது விசுவாசம் வைக்குமாறும், “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்கு சொன்னேன்,” என்கிற இளைப்பாறுதலை அறிய வேண்டும் என்றும் அவர் விரும்பினார் (வச. 33). இயேசு வேதனையில்லா வாழ்வை வாக்களிக்கவில்லை. நாம் அவர் மேல் விசுவாசம் வைத்து இளைப்பாறுதலை அனுபவிக்கும்போது, இந்த உலகம் விற்கும் “தப்பிக்கும்” வழிகளை விட நாம் திருப்தியான சமாதானத்தைப் பெறமுடியும் என்று வாக்களிக்கிறார்.