ஐடா ஸ்கட்டர், தமிழ்நாட்டிலுள்ள வேலூர் கிராமத்தில் மருத்துவ சிகிச்சை கொடுப்பதற்கு ஒரு சிறிய இடத்தை வாங்கினார். அவர்களுடைய இந்த முயற்சி மதியீனமானது என்று பலர் கருதினர். இளமையான, திருமணமாகாத ஐடா ஸ்கட்டர், அமெரிக்காவிலிருந்த தன்னுடைய சொந்த வீட்டின் சுகத்தை விட்டுவிட்டு, தற்போது கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை என்று அறியப்படுகிற நிறுவனத்தை ஸ்தாபிக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால் வீணாய் கருதப்பட்ட, அவர்களின் நேரம், மூலதனம், மற்றும் முயற்சிகள், இன்று மருத்துவ சிகிச்சையின் முன்னோடியாகவும், இந்திய சுகாதார அமைப்பிற்கு ஓர் கலங்கரை விளக்காகவும் திகழ்கிறது. 

தேவன் எரேமியாவிடம் முற்றிலும் மதியீனமான ஒரு முதலீட்டைச் செய்யும்படிக்கு கட்டளையிடுகிறார்: “பென்யமீன் நாட்டு ஆனத்தோத் ஊரில் உள்ள நிலத்தை வாங்கிக்கொள்ளும்” (எரேமியா 32:8). அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனை எருசலேமை முற்றிக்கை போட்டிருந்தது (வச. 2). எரேமியா நிலத்தை வாங்கினாலும் அது கூடிய சீக்கிரத்திலேயே பாபிலோனுக்குச் சொந்தமாகிவிடும். எல்லாம் இழக்கப் போகிற நேரத்தில் எந்த முட்டாளாவது முதலீடு செய்வானா?

தேவனுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கிற ஒரு நபர், எதிர்காலத்தைக் குறித்து எவருக்கும் இல்லாத ஒரு பார்வையோடு இருப்பார். “ஏனெனில் இனி இந்த தேசத்தில் வீடுகளும் நிலங்களும் திராட்சத்தோட்டங்களும் கொள்ளப்படும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றேன்” (வச. 15). தேவன் அழிவை விட அதிகமான நன்மையைக் காண்கிறார். தேவன் மீட்பு, சுகம் மற்றும் மறுசீரமைப்பு ஆகியவற்றை நம்முடைய வாழ்க்கையில் கொண்டுவருவதாக வாக்குப் பண்ணுகிறார். தேவனுடைய ஊழியத்திலோ அல்லது தனிப்பட்ட உறவுகளிலோ நாம் செய்யும் மதியீனமான முதலீடுகள் வீணாய் போவதில்லை. மற்றவர்களுடைய வாழ்க்கையில் தேவனுடைய நடத்துதலின் பேரில் நாம் செய்யும் மதியீனமான முதலீடுகள் இவ்வுலகத்திலேயே அர்த்தமுள்ளதாய் மாறும்.