என்னுடைய இளைய மகன் சேவியர், கிண்டர்கார்டனில் படிக்கும்போது நான் என் மகன்களுக்கு வேதாகமத்தை வாசித்துக் காண்பிக்கத் தொடங்கினேன். எங்கள் சூழ்நிலைகளுக்கேற்ப வசனங்களைப் பகிரவும், என்னோடு சேர்ந்து ஜெபிக்கவும் அவர்களை ஊக்குவித்தேன். சேவியர் வேதாகமத்தை எளிதாய் மனனம் செய்தான். நாங்கள் இக்கட்டான தருணங்களில் இருக்கும்போது சத்தியத்தை மிளிரச்செய்யும் அவன் நினைவில் வைத்திருக்கும் வேதாகமவசனங்களைக் கூறி எங்களை உற்சாகப்படுத்துவான். 

ஒரு நாள் எனக்கு கோபம் வந்து கடினமாய் பேசினேன். என் மகன் என்னைக் கட்டியணைத்துக் கொண்டு “நீங்கள் சொல்லுகிறபடி செய்யுங்கள் அம்மா,” என்றான்.

சேவியர் சொன்ன இந்த வார்த்தைகள், யூத விசுவாசிகளுக்கு போதனை செய்த யாக்கோபின் ஞானமான ஆலோசனையை எதிரொலிக்கிறது (யாக்கோபு 1:1). நாம் இயேசுவின் சாட்சிகளாய் இருக்கும்போது, பாவம் பல்வேறு வழிகளில் நம்முடைய வாழ்க்கையில் குறுக்கிடும் என்பதை வெளிப்படுத்தி, அவர்களை, “உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் இருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக் கொள்ளுங்கள்” (வச. 21) என்று ஊக்கமளிக்கிறார். திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவர்கள், கண்ணாடியிலே தங்கள் முகத்தைப் பார்த்து, அதை உடனே மறந்துவிடுகிறவர்கள் போன்றவர்கள் (வச. 23-24). இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் நாம் தேவனுடன் ஒப்புரவாக்கப்பட்டு, அவர் சாயலைத் தரித்தவர்களுக்கென்று கிடைக்கும் சலுகைகளை நாம் இழக்க நேரிடலாம். 

சுவிசேஷத்தை பறைசாற்றுவதற்கு விசுவாசிகளுக்கு கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆவியானவர் நம்மை மாற்றுகிறார். ஆளுமையைத் தருகிறார். நாம் நற்செய்தியைப் பரப்பும் தூதர்களாகவும் முன்னேறுவோம். தேவன் நம்மை எங்கெல்லாம் அனுப்புகிறாரோ அங்கேயெல்லாம் நம்முடைய அன்பான தேவனின் சத்தியத்தையும் அன்பையும் வெளிச்சமாய் பிரதிபலிப்போம். நாம் பிரசங்கிப்பதை வாழ்க்கையில் வாழ்ந்தால் மற்றவர்களை இயேசுவிடம் அழைத்துச் செல்லலாம்.