அன்பின் சிறந்த பரிசு
என் மகன் ஜெஃப் ஒரு கடையை விட்டு வெளியே வந்தபோது, அங்கே தரையில் ஒரு நடைப்பயிற்சி சட்டகம் (வாக்கர்) கிடந்ததைப் பார்த்தான். யாரோ அதை தவறவிட்டிருக்கிறார்கள் என்று ஊகித்து, அங்கே யாருக்காவது ஏதாவது உதவி தேவைப்படுமோ என்று அந்தக் கட்டிடத்திற்கு பின்னால் சென்று பார்த்தபோது அங்கு ஒரு ஆதரவற்ற நபர் நடைபாதையில் மயங்கிக் கிடந்ததைப் பார்த்தான்.
ஜெஃப் அவரை எழுப்பி நன்றாக இருக்கிறாரா என்று விசாரித்தான். “நான் இறந்து போவதற்காகக் குடித்தேன். என்னுடைய கூடாரம் புயலில் சிதைந்துவிட்டது. எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். நான் வாழ விரும்பவில்லை" என்று அவர் வேதனையுடன் கூறினார்.
ஜெஃப் ஒரு கிறிஸ்தவ மறுவாழ்வு மையத்தை தொடர்புகொண்டான். தன் வீட்டிற்கு உடனே ஓடிப்போய் தன்னுடைய முகாமிடும் கூடாரத்தை எடுத்துக் கொண்டு வந்தான். அந்த மனிதரிடம் “உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டபோது, அவரும் “ஜெஃப்ரி” என்றார். ஜெஃப் தன்னுடைய பெயரும் அதுதான் என்பதை அவரிடம் சொல்லவில்லை. ஆனால் “அப்பா, அது நானாகக் கூட இருக்கலாம்” என்று பின்பு என்னிடம் கூறினான்.
ஜெஃப் ஒரு காலத்தில் போதைப் பொருளுக்கு அடிமையாயிருந்தவன். தேவனிடமிருந்து அவன் பெற்ற இரக்கத்தினால் தான் அந்த மனிதருக்கு உதவி செய்ய முன்வந்தான். ஏசாயா தீர்க்கதரிசி “நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழி தப்பித் திரிந்து அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம் எல்லாருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் விழப்பண்ணினார்," (ஏசாயா 53:6) என்று தேவன் நம்மீது வைத்த இரக்கத்தைப் பற்றி எடுத்துரைக்கிறார். கிறிஸ்து நம் மீட்பர்; நம்மை விரக்தியில் தொலைந்து போகவோ, தனிமையாகவோ, நம்பிக்கை இழக்கவோ அனுமதிக்கவில்லை. அவர் நம்மை அடையாளங்கண்டு தம்முடைய அன்பிலே தூக்கியெடுத்து, நாம் மீட்பைப் பெற்று அவருக்குள் புதிதான வாழ்க்கையைத் தொடர நம்மை தேர்ந்தெடுத்திருக்கிறார். இதை விட பெரிய பரிசு வேறெதுவும் இல்லை.
புயலை எதிர்கொள்ளுங்கள்
ஏப்ரல் 3, 1968 அன்று மாலை அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் அமைந்திருந்த மெம்பிஸ் என்ற நகரத்தை ஒரு பயங்கரமான புயல் தாக்கியது. டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், உடல் நலமின்மையால் சோர்ந்திருந்தார். எனவே அவர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சொற்பொழிவை திருச்சபையில் நிகழ்த்த தீர்மானிக்கவில்லை. அவருடைய பேச்சைக் கேட்க ஒரு பெரிய கூட்டம் வந்திருந்தனர். எனவே அவர் அங்கு சென்று நாற்பது நிமிடங்கள் சொற்பொழிவாற்றினார். “நான் மலையுச்சியிலிருந்து” என்று தலைப்பிடப்பட்ட அந்த சொற்பொழிவே அவரின் மிகச்சிறந்த சொற்பொழிவாகக் கருதப்படுகிறது.
மறுநாள் லூதர் கிங் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். ஆனாலும் அவருடைய சொற்பொழிவு வருத்தப்பட்ட மக்களுக்கு வாக்களிக்கப்பட்ட தேசத்தைக் குறித்த நம்பிக்கையைக் கொடுத்தது. எபிரெயர் நிருபம், யூத விசுவாசிகள் கிறிஸ்துவின் மீது வைத்த விசுவாசத்திற்காக அச்சுறுத்தல்களை சந்தித்தபோது, அவர்களை உற்சாகப்படுத்த எழுதப்பட்டது. “ஆகையினால், நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி (எபிரெயர் 12:12) என்று அவர்களை உற்சாகப்படுத்துகிறது. அவர்கள் யூதர்கள் என்பதினால் அந்த ஏவுதல் உண்மையிலேயே ஏசாயா தீர்க்கதரிசியிடத்திலிருந்து வருகிறது என்று அறிவர் (ஏசாயா 35:3). ஆனால் இப்பொழுது கிறிஸ்துவின் சீஷர்களாய் நாம் “விசுவாசத்தை துவக்கிறவரும் முடிக்கிற வருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓட” அழைக்கப்பட்டிருக்கிறோம் (எபிரெயர் 12:1-2).
நாம் அவ்வாறு செய்யும்போது இளைப்புள்ளவர்களாய் நம்முடைய ஆத்துமாக்களில் சோர்ந்துபோகமாட்டோம் (வச. 3). புயல், பெருங்காற்று, மழை ஆகியவைகள் நம்முடைய வாழ்க்கையிலும் வீசும். ஆனால் நாம் இயேசுவில் நிலைப்பதின் மூலம் வாழ்வின் கடும்புயலைக் கடக்கமுடியும்.
இருளும் ஒளியும்
நான் நீதிமன்றத்தில் இருந்தபோது, உலகத்தினால் உடைக்கப்பட்ட பல பிரச்சனைகளை பார்த்திருக்கிறேன்: தாயிடமிருந்து பிரிந்த மகள்; அன்பைத் தொலைத்துவிட்டு கசப்பை மட்டுமே பகிரும் கணவன் மனைவி; பிள்ளைகளுடன் மீண்டும் இணைய மனைவியுடன் சமரசமாக ஏங்கும் கணவன். தேவனுடைய அன்பு மேம்பட அவர்களுக்கு மாற்றப்பட்ட இருதயங்களும், சுகமாகிய தழும்புகளும் தேவைப்படுகிறது.
சில நேரங்களில், நம்மைச் சுற்றியுள்ள உலகம் இருளையும், சோர்வையும் பற்றியிருக்கும்போது நாமும் நம்பிக்கையின்மையில் வாழ்கிறோம். இயேசு அந்த முறிவிற்காகவும் வலிக்காகவும் தான் மரித்தார் என்னும் உயரிய சத்தியத்தை அந்த தருணங்களில் பரிசுத்த ஆவியானவர் (யோவான் 14:17) நமக்கு விளங்கப்பண்ணுகிறார். இயேசு மனிதராய் இந்த உலகத்திற்கு வந்தபோது அவர் இருளிலே ஒளியைக் கொண்டுவந்தார் (1:4-5; 8:12). இயேசுவுக்கும் நிக்கொதேமுக்கும் நடைபெற்ற உரையாடலில் இதை நாம் காணமுடியும். நிக்கொதேமு இருளின் மறைவிலே இரகசியமாக வந்து ஒளியை உணர்ந்துகொண்டான் (3:1-2; 19:38-40).
இயேசு நிக்கொதேமுவுக்கு, “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” என்று போதிக்கிறார் (3:16).
இயேசு ஒளியையும் அன்பையும் இவ்வுலகிற்கு கொண்டுவந்தாலும், பலர் பாவ இருளில் தொலைந்துவிட்டனர் (வச. 19-20). நாம் அவரைப் பின்பற்றினால், இருளை அழிக்கும் ஒளி நம்மிடம் இருக்கம். தேவன் நம்மை அவரின் அன்பின் கலங்கரை விளக்கமாக உருவாக்க நாம் நன்றியுடன் ஜெபிப்போம் (மத்தேயு 5:14-16).
மரணத்தின் மூலம் வாழ்வு
கார்ல் என்பவர் புற்றுநோயுடன் போராடினார். அவருக்கு இரண்டு நுரையீரல் மாற்று சிகிச்சை தேவைப்பட்டது. அவர் தேவனிடம் புதிய நுரையீரல் தருமாறு ஜெபித்தார். ஆனால் அவ்வாறு ஜெபிப்பது அவருக்கு சற்று விசித்திரமாய் தோன்றியது. ஏனெனில் “நான் உயிர்வாழ யாரோ ஒருவர் இறக்க வேண்டும்,” என்பதை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது.
கார்லினின் இக்கட்டான நிலை, வேதாகமத்தின் ஓர் அடிப்படைச் சத்தியத்தை வெளிப்படுத்துகிறது. தேவன் மரணத்தின் மூலம் புதிய வாழ்க்கையைத் தருகிறார். இதை யாத்திராகமத்தில் காண்கிறோம். அடிமைத்தனத்தில் பிறந்த இஸ்ரவேலர்கள், எகிப்தியர்களின் அடக்குமுறையால் சோர்ந்துபோயினர். தேவன் தனிப்பட்ட தீர்வைக் கொடுக்காவிட்டால் பார்வோன் தன் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கமாட்டான். ஒவ்வொரு குடும்பமும் ஒரு பழுதற்ற ஆட்டுக்குட்டியை அடித்து அந்த இரத்தத்தை வீட்டுவாசலின் நிலைக்கால்கள் சட்டத்தில் தெளித்தால் மட்டுமே, வீட்டின் தலைச்சன் பிள்ளைகள் உயிருடன் இருக்கும், இல்லையேல் மரித்துவிடும் என்ற நிலையை தேவன் அனுமதிக்கிறார் (யாத்திராகமம் 12:6-7).
இன்று நீங்களும் நானும் பாவத்தின் அடிமைத்தனத்தில் பிறந்துள்ளோம். தேவன் தனிப்பட்ட தீர்வு காண தம் பழுதற்ற ஒரேபேறான குமாரனை சிலுவையில் இரத்தம் சிந்த ஒப்புக்கொடுத்தார்.
அவருடன் சேர்ந்துகொள்ள இயேசு நமக்கு அழைப்பு கொடுக்கிறார். “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்” (கலாத்தியர் 2:20) என்று பவுல் அறிவிக்கிறார். நாம் தேவனின் பழுதற்ற ஆட்டுக்குட்டியானவரின் மீது விசுவாசம் வைக்கும்போது, நம் பாவத்திற்கு மரித்து அவருடனே கூட நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் உயிர்த்தெழுவோம் (ரோமர் 6:4-5). நாம் ஒவ்வொருமுறையும் பாவத்தின் கட்டுகளுக்கு மறுத்து தெரிவித்து, கிறிஸ்துவின் மீட்பை அங்கீகரித்து நம் விசுவாசத்தை வெளிப்படுத்துவோம். நாம் இயேசுவுடன் மரித்தபோதுதான் மெய்யாகவே பிழைத்திருக்கிறோம்.
சொல்லுகிறபடி செய்யுங்கள்
என்னுடைய இளைய மகன் சேவியர், கிண்டர்கார்டனில் படிக்கும்போது நான் என் மகன்களுக்கு வேதாகமத்தை வாசித்துக் காண்பிக்கத் தொடங்கினேன். எங்கள் சூழ்நிலைகளுக்கேற்ப வசனங்களைப் பகிரவும், என்னோடு சேர்ந்து ஜெபிக்கவும் அவர்களை ஊக்குவித்தேன். சேவியர் வேதாகமத்தை எளிதாய் மனனம் செய்தான். நாங்கள் இக்கட்டான தருணங்களில் இருக்கும்போது சத்தியத்தை மிளிரச்செய்யும் அவன் நினைவில் வைத்திருக்கும் வேதாகமவசனங்களைக் கூறி எங்களை உற்சாகப்படுத்துவான்.
ஒரு நாள் எனக்கு கோபம் வந்து கடினமாய் பேசினேன். என் மகன் என்னைக் கட்டியணைத்துக் கொண்டு “நீங்கள் சொல்லுகிறபடி செய்யுங்கள் அம்மா,” என்றான்.
சேவியர் சொன்ன இந்த வார்த்தைகள், யூத விசுவாசிகளுக்கு போதனை செய்த யாக்கோபின் ஞானமான ஆலோசனையை எதிரொலிக்கிறது (யாக்கோபு 1:1). நாம் இயேசுவின் சாட்சிகளாய் இருக்கும்போது, பாவம் பல்வேறு வழிகளில் நம்முடைய வாழ்க்கையில் குறுக்கிடும் என்பதை வெளிப்படுத்தி, அவர்களை, “உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் இருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக் கொள்ளுங்கள்" (வச. 21) என்று ஊக்கமளிக்கிறார். திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவர்கள், கண்ணாடியிலே தங்கள் முகத்தைப் பார்த்து, அதை உடனே மறந்துவிடுகிறவர்கள் போன்றவர்கள் (வச. 23-24). இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் நாம் தேவனுடன் ஒப்புரவாக்கப்பட்டு, அவர் சாயலைத் தரித்தவர்களுக்கென்று கிடைக்கும் சலுகைகளை நாம் இழக்க நேரிடலாம்.
சுவிசேஷத்தை பறைசாற்றுவதற்கு விசுவாசிகளுக்கு கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆவியானவர் நம்மை மாற்றுகிறார். ஆளுமையைத் தருகிறார். நாம் நற்செய்தியைப் பரப்பும் தூதர்களாகவும் முன்னேறுவோம். தேவன் நம்மை எங்கெல்லாம் அனுப்புகிறாரோ அங்கேயெல்லாம் நம்முடைய அன்பான தேவனின் சத்தியத்தையும் அன்பையும் வெளிச்சமாய் பிரதிபலிப்போம். நாம் பிரசங்கிப்பதை வாழ்க்கையில் வாழ்ந்தால் மற்றவர்களை இயேசுவிடம் அழைத்துச் செல்லலாம்.