Archives: நவம்பர் 2021

யாராலும் பிரிக்கமுடியாது

பிரிஸ்ஸின் தகப்பனார் ஒரு போதகர். அவர் தேவனுடைய அழைப்பை ஏற்று இந்தோனேஷியாவின் சிறிய தீவு ஒன்றில் ஊழியம் செய்யப் புறப்பட்டார். பிரிஸ்ஸின் குடும்பம் ஒரு காலத்தில் விலங்குகளின் தங்குமிடமாயிருந்த ஒரு குடிசையில் தங்க நேரிட்டது. குடிசையில் மழைத்தண்ணீர் ஒழுக, பிரிஸ்ஸின் குடும்பம் தரையில் அமர்ந்து கிறிஸ்மஸைக் கொண்டாடிய தருணத்தை பிரிஸ் நினைவுகூருகிறாள். ஆனால் அவளுடைய தகப்பனார், “பிரிஸ், நாம் ஏழையாய் இருப்பதினால், நம் தேவன் நம்மை நேசிக்கவில்லை என்று அர்த்தம் கிடையாது” என்று அவளுக்கு நினைவுபடுத்தினாராம். 

ஐசுவரியம், ஆரோக்கியம் மற்றும் நீடித்த ஆயுள் ஆகியவைகள் மட்டுமே தேவனுடைய ஆசீர்வாதத்திற்கான அடையாளம் என்று சிலர் நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் பாடுகள் வரும்போது, தேவன் நம்மை நேசிக்கிறாரா என்று அவர்கள் கேள்வியெழுப்பக்கூடும். ஆனால் ரோமர் 8:31-39ல், உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மை பிரிக்கமுடியாது என்கிறார் (வச. 36). இதுவே மெய்யாய் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையின் அடித்தளம்: தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை நம்முடைய பாவங்களுக்காக மரிக்க ஒப்புக்கொடுத்து தன்னுடைய அன்பை பிரதிபலித்துள்ளார் (வச. 32). கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருந்து நமக்காகப் பரிந்துபேசிக்கொண்டிருக்கிறார் (வச. 34). 

நம்முடைய உபத்திரவத்தின் நாட்களில், கிறிஸ்து நமக்காக செய்த தியாகத்தைக் குறித்த ஆறுதலான சத்தியத்தில் நாம் நம்மை பலமாய் ஸ்தாபித்துக்கொள்வோம். “மரணமானாலும், ஜீவனானாலும்... வேறெந்தச் சிருஷ்டியானாலும்” கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மை பிரிக்க மாட்டாது (வச. 38-39). நம்முடைய சூழ்நிலைகள் எதுவாயினும், நம்முடைய பாடுகள் எதுவாயினும், தேவன் நம்மோடு இருக்கிறார் என்பதையும், அவருடைய அன்பிலிருந்து நாம் பிரிக்கப்படுவதில்லை என்பதையும் நினைவில்கொள்வோம். 

தேவனின் ஆச்சரியமான படைப்பு

நானும் எனது மனைவியும் ஒரு சாதாரண இயற்கை நடைபயணம் மேற்கொள்ள துவங்கினோம். எங்கள் ஊரில் இருந்த நதியோரமாய் நாங்கள் போன அந்த பயணம் எங்களுக்கு மறக்க முடியாத ஒரு அனுபவமாய் மாறியது. சிதறிய தண்ணீரில் எங்களுக்கு பழக்கப்பட்ட சில நண்பர்களான 5 அல்லது 6 ஆமைகள் சூரிய ஒளியில் மின்னுவதைப் பார்த்தோம். பல மாதங்களாய் நாங்கள் பார்க்கத் தவறின இந்த ஆச்சரியமான உயிரினங்களைப் பார்த்து நாங்கள் புன்னகைத்தோம். அவைகள் வந்தது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. தேவனுடைய இந்த அற்புதமான படைப்பில் நாங்கள் ஒரு கணம் மகிழ்ச்சியை கொண்டாடினோம். 

தேவன் யோபுவையும் ஒரு இயற்கை நடை பயணம் கூட்டிச்செல்லுகிறார் (யோபு 38ஐ காண்க). இக்கட்டில் இருக்கும் இந்த மனிதனுக்கு அவனுடைய நிலைமையைக் குறித்து, சிருஷ்டிகரிடத்திலிருந்து பதில் தேவைப்படுகிறது (வச. 1). தேவனோடு நேரிட்ட இந்த நடைபயணம் இந்த மனிதனுக்குத் தேவையான உற்சாகத்தை அளித்தது. 

இந்த உலகத்தின் நேர்த்தியான வடிவமைப்பை யோபுவுக்கு விவரிக்கும்போது யோபுவின் ஆச்சரியத்தை சற்று கற்பனை செய்யுங்கள். இந்த உலகத்தைப்பற்றி அதை உண்டாக்கியவரிடமிருந்து நேரடியாய் யோபு கேட்கிறான்: “அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்? அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே” (வச. 6-7). சமுத்திரத்தின் வரையறையைக் குறித்த பூகோளவியல் பாடத்தை தேவன் யோபுவுக்கு கற்றுக்கொடுக்கிறார் (வச. 11). 

மேலும் தேவன் யோபுவுக்கு, ஒளி, பனி, மழை என்று தன்னுடைய சிருஷ்டிப்புகளை ஏன் சிருஷ்டித்தார் என்று அறிவிக்கிறார் (வச. 19-28). ஆகாயத்தில் மிதப்பவரிடமிருந்து விண்மீண்களைக் குறித்து யோபு கேட்டறிகிறான் (வச. 31-32).

கடைசியாக, “தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர்” (42:2) என்று யோபு ஒப்புக்கொள்கிறான். இந்த இயற்கையை நாம் அனுபவிக்கும்போது, நம்முடைய ஞானமுள்ள அற்புதமான சிருஷ்டிகரை நினைத்து பூரிக்கலாம். 

நற்செய்தி

1941இல் ஜரோப்பிய கண்டம் முழுவதும் ஹிட்லரின் ஆளுகை விரிவடைந்துகொண்டிருந்த தருணம், நாவலாசிரியர் ஜான் ஸ்டெயின்பெக் (அமெரிக்க எழுத்தாசிரியர்) அந்த யுத்தத்திற்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். யுத்தகளத்தில் முன்பாக நின்று யுத்தம் செய்வதற்காக அல்ல மாறாக, ஒரு நாவல் ஒன்றை எழுதும்படிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதின் விளைவாக “சந்திரன் கீழே உள்ளது” என்ற தலைப்பில், அமைதியாய் இளைப்பாறிய தேசம் சத்துருக்களினால் கைப்பற்றப்பட்டதை விவரிக்கும் நாவல் எழுதப்பட்டது. இரகசியமாய் அச்சிடப்பட்டு, கைப்பற்றப்பட்ட தேசங்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அதின் செய்தி: உங்களின் கூட்டாளிகள் வந்துகொண்டிருக்கிறார்கள், நாவலில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களின் செய்கைகளை பின்பற்றினால் நாம் சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்பதே. “சந்திரன் கீழே உள்ளது” என்ற நாவலின் மூலமாக ஜெர்மானிய ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த நாடுகளுக்கு அவர்களின் விடுதலை சமீபமாயிருக்கிறது என்னும் செய்தி தொடர்புகொள்ளப்பட்டது. 

அந்த நாவலில் இடம்பெற்ற கதாபாத்திரங்களைப் போன்று, முதலாம் நூற்றாண்டில் யூதர்களும் ரோம ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தனர். ஆனால் நூற்றாண்டுகளுக்கு முன்பதாகவே, தேவன் அவர்களுக்கு உதவிசெய்ய மீட்பரை அனுப்புவதாகவும், அவர் உலகத்திற்கு சமாதானத்தைக் கொண்டுவருவார் என்றும் வாக்குப்பண்ணப்பட்டிருந்தது (ஏசாயா 11). அந்த மீட்பர் வந்தவுடன் மகிழ்ச்சி வந்தது! நாங்களும் உங்களுக்கு நற்செய்தியை அறிவிக்கிறோம் என்று பவுல் சொல்லுகிறார். “இயேசுவை எழுப்பினதினாலே தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார்” (அப். 13:32-33). இயேசுவின் உயிர்த்தெழுதல் மூலமாயும் அவருடைய மன்னிப்பின் மூலமாயும் உலகத்தை மறுசீரமைக்கும் பணி துவங்கியது (வச. 38-39; ரோமர் 8:21). 

அன்றிலிருந்து இந்த மீட்பின் செய்தி உலகெங்கும் பரவி, சென்ற இடமெல்லாம் இளைப்பாறுதலையும் விடுதலையையும் ஏற்படுத்தியது. இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார். பாவத்திலிருந்தும் தீமையிலிருந்துமான நம்முடைய மீட்புப் பணி துவங்கியது. அவரில் நாம் சுதந்திரவாளிகளாக்கப்பட்டோம். 

நீங்கள் தனியாய் இல்லை

“உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி!” “உங்களையும் தான்” “நீங்கள் இங்கிருப்பது மகிழ்ச்சி!” இந்த வாழ்த்துக்கள் மென்மையாகவும் வரவேற்கக்கூடியதாகவும் இருந்தது. ஒரு ஊரில் இருந்த ஊழியர்கள் தங்கள் மாலை நேர நிகழ்ச்சிக்கு முன்பு ஆன்லைனில் சந்தித்தார்கள். அவர்களின் தலைவர் அவர்களை வரவேற்றபோது, மற்றவர்கள் வீடியோ காலில் இணைவதை நான் பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கிருப்பவர்கள் யாரையும் எனக்குத் தெரியாது என்பதினால், நான் என்னை வேற்று நபராக எண்ணினேன். திடீரென்று ஒரு வீடியோ தோன்றியது, அதில் என்னுடைய போதகரை பார்த்தேன். வேறொரு வீடியோ இணைந்தது. அதில் என் நீண்ட நாள் திருச்சபை நண்பர் இணைந்தார். அவர்களைப் பார்த்தமாத்திரத்தில் நான் தனிமையாய் உணர்வதிலிருந்து விடுபட்டேன். தேவன் எனக்கு ஆதரவை அருளினார் என்று நம்பினேன். 

யெசபேல் மற்றும் ஆகாபினால் எலியாவுக்கு நேரிட்ட பிரச்சனையில், “நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்” என்று சொன்ன எலியாவும் தனிமையாயில்லை (1 இராஜ. 19:10). 40 பகல், 40 இரவுகள் வனாந்திரத்தில் பயணம் மேற்கொண்டு, எலியா ஓரெப் கன்மலையில் தன்னை ஒளித்துக்கொள்ளுகிறான். ஆனால் தேவன், “நீ தமஸ்குவின் வழியாய் வனாந்தரத்திற்குத் திரும்பிப்போய், ஆசகேலைச் சீரியாவின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, பின்பு நிம்சியின் குமாரனாகிய யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, ஆபேல்மேகொலா ஊரானான சாப்பாத்தின் குமாரன் எலிசாவை உன் ஸ்தானத்தில் தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு” (வச. 15-16) என்று கட்டளையிடுகிறார். 

“ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன்” என்று கர்த்தர் எலியாவுக்கு உறுதியளித்தார் (வச. 18). தேவனுக்கு ஊழியம் செய்யும்போது நாம் தனித்து இருப்பதில்லை என்பதை எலியா கற்றுக்கொண்டான். தேவன் நமக்கு உதவிசெய்யும்போது, நாம் இணைந்து அவரை சேவிப்போம். 

இயேசுவின் உண்மையான சீஷன்

ஒரு ஓவிய சேகரிப்பாளர் வான் காகின் ஓவியங்களை (பிரபலமான மேற்கத்திய ஓவியர்), ஓவிய நிபுணர் ஒருவரிடம் காண்பித்தபோது, அந்த நிபுணர் அதை ஒரு பார்வை பார்த்துவிட்டு இது உண்மையான ஓவியம் அல்ல என்று நிராகரித்துவிட்டாராம். எனவே அந்த ஓவிய சேகரிப்பாளர் அதை கொண்டுபோய் ஒரு ஓவியக்கிடங்கில் மறைத்து வைத்துவிட்டாராம். அங்கே அது ஐம்பது ஆண்டுகள் இருந்தது. அவருடைய மரணத்திற்கு பின்னர், அந்த ஓவியத்தை மீண்டும் எடுத்து நாற்பது ஆண்டுகளாக மதிப்பீடு செய்தனர். ஒவ்வொரு முறையும் அது பொய்யான ஓவியம் என்றே நிராகரிக்கப்பட்டது. 2012ல் கணினி நிபுணர் ஓருவர் தீர்க்கமாய் ஆய்வு செய்து, அந்த ஓவியம் வரையப்பட்ட கேன்வாஸ் துணியின் ஒவ்வொரு நூலாக ஆய்வுசெய்தபோது, அந்த கேன்வாஸ் வான் காகின் மற்றொரு ஓவியத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட உண்மையைக் கண்டறிந்தார். இறந்த அந்த ஓவிய சேகரிப்பாளர் தன் வாழ்நாள் முழுதும் வான்காகின் உண்மையான ஓவியத்தையே வைத்திருந்தார். 

நீங்கள் போலியாக எண்ணுகிறீர்களா? ஜனங்கள் உங்களை ஆய்வுசெய்யும்போது, உங்களின் கொஞ்சமான ஜெபவாழ்க்கையையும், கொடுக்கும் மனப்பான்மையையும், சாதாரண ஊழியத்தையும் அறியக்கூடும் என்று அஞ்சுகிறீர்களா? ஜெபிக்கிற கண்களிலிருந்து மறைந்து, உங்கள் அறையில் ஒளிந்துகொள்ள தூண்டப்படுகிறீர்களா? 

உங்கள் வாழ்க்கையை மேற்பூச்சான நிறங்களில் அல்லாமல் சற்று ஆழமாய் பாருங்கள். உங்களுடைய பாவ வழிகளிலிருந்து திரும்பி, இயேசுவை விசுவாசித்தால், நீங்களும் அவரும் ஒரே கேன்வாஸ் துணியைப்போல் இருப்பீர்கள். “நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள்” என்று இதை இயேசு சித்தரிக்கிறார் (யோவான் 15:5). நீங்களும் இயேசுவும் இணைந்து ஒரு முழுமையை அடைகிறீர்கள். 

இயேசுவில் இளைப்பாறுவது அவருடைய மெய்யான சீஷனாய் உங்களை மாற்றுகிறது. உங்கள் ஓவியத்தை மேம்படுத்துவதற்கு அது ஒன்றே வழி. “ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” (வச. 5).