பிரிஸ்ஸின் தகப்பனார் ஒரு போதகர். அவர் தேவனுடைய அழைப்பை ஏற்று இந்தோனேஷியாவின் சிறிய தீவு ஒன்றில் ஊழியம் செய்யப் புறப்பட்டார். பிரிஸ்ஸின் குடும்பம் ஒரு காலத்தில் விலங்குகளின் தங்குமிடமாயிருந்த ஒரு குடிசையில் தங்க நேரிட்டது. குடிசையில் மழைத்தண்ணீர் ஒழுக, பிரிஸ்ஸின் குடும்பம் தரையில் அமர்ந்து கிறிஸ்மஸைக் கொண்டாடிய தருணத்தை பிரிஸ் நினைவுகூருகிறாள். ஆனால் அவளுடைய தகப்பனார், “பிரிஸ், நாம் ஏழையாய் இருப்பதினால், நம் தேவன் நம்மை நேசிக்கவில்லை என்று அர்த்தம் கிடையாது” என்று அவளுக்கு நினைவுபடுத்தினாராம். 

ஐசுவரியம், ஆரோக்கியம் மற்றும் நீடித்த ஆயுள் ஆகியவைகள் மட்டுமே தேவனுடைய ஆசீர்வாதத்திற்கான அடையாளம் என்று சிலர் நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் பாடுகள் வரும்போது, தேவன் நம்மை நேசிக்கிறாரா என்று அவர்கள் கேள்வியெழுப்பக்கூடும். ஆனால் ரோமர் 8:31-39ல், உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மை பிரிக்கமுடியாது என்கிறார் (வச. 36). இதுவே மெய்யாய் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையின் அடித்தளம்: தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை நம்முடைய பாவங்களுக்காக மரிக்க ஒப்புக்கொடுத்து தன்னுடைய அன்பை பிரதிபலித்துள்ளார் (வச. 32). கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருந்து நமக்காகப் பரிந்துபேசிக்கொண்டிருக்கிறார் (வச. 34). 

நம்முடைய உபத்திரவத்தின் நாட்களில், கிறிஸ்து நமக்காக செய்த தியாகத்தைக் குறித்த ஆறுதலான சத்தியத்தில் நாம் நம்மை பலமாய் ஸ்தாபித்துக்கொள்வோம். “மரணமானாலும், ஜீவனானாலும்… வேறெந்தச் சிருஷ்டியானாலும்” கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மை பிரிக்க மாட்டாது (வச. 38-39). நம்முடைய சூழ்நிலைகள் எதுவாயினும், நம்முடைய பாடுகள் எதுவாயினும், தேவன் நம்மோடு இருக்கிறார் என்பதையும், அவருடைய அன்பிலிருந்து நாம் பிரிக்கப்படுவதில்லை என்பதையும் நினைவில்கொள்வோம்.