காலங்களை மீட்டெடுத்தல்
பருவகாலத்தைமீட்பதற்கான வழியை கண்டுபிடிக்க லெய்சா விரும்பினாள். ஆகையினால் அவள் கண்காட்சியில் பார்த்த பெரும்பாலான அலங்காரங்கள் பயங்கரமான மற்றும் கொடூரமான வழிகளில் மரணத்தை கொண்டாடுவதாக காணப்பட்டது.
அந்த மரண இருளை சுலபமான வழியில் எதிர்கொள்ள எண்ணிய லெய்சா, ஒரு பூசணிக்காயை எடுத்து அதில் அழியாத எழுதுகோலினால் எழுத ஆரம்பித்தாள். “சூரியஒளி” என்று முதலில் எழுதினாள். பார்வையாளர்கள் தொடர்ந்து அதில் எழுத ஆரம்பித்தனர். சிலர் விசித்திரமான காரியங்களையும் அதில் எழுதினர்: உதாரணத்திற்கு “கிறுக்குதல்” போன்ற வார்த்தைகள். சிலர் நடைமுறைக் காரியங்களையும் எழுதினர்: “அழகான வீடு,” “ஓடும் கார்.” மரித்த தங்களுடைய நேசத்திற்குரிய நபர்களின் பெயர்களையும் எழுதி சிலர் தங்கள் வருத்தத்தையும் தெரிவித்திருந்தனர். அந்த பூசணிக்காயைச் சுற்றி மக்களின் நன்றியுணர்வு என்னும் சங்கிலி தொடர ஆரம்பித்தது.
நாம் எளிதில் பார்வையிடக்கூடிய வாழ்க்கையின் காரியங்களைக் குறித்து சங்கீதம் 104 தேவனுக்கு நன்றி சொல்லுகிறது. “அவர் பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறார்” என்று சங்கீதக்காரன் பாடுகிறார் (வச. 10). “பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார்” (வச. 14). இருளையும் நன்மையாகவும் நோக்கத்தோடும் சிருஷ்டித்ததாக அறிவிக்கிறார். “நீர் இருளைக் கட்டளையிடுகிறீர், இராக்காலமாகும் ; அதிலே சகல காட்டு ஜீவன்களும் நடமாடும்” (வச. 20). அதற்கு பின்பாக, “சூரியன் உதிக்கையில்... அப்பொழுது மனுஷன் சாயங்காலமட்டும் தன் வேலைக்கும், தன் பண்ணைக்கும் புறப்படுகிறான்” (வச. 22-23). கடைசியாக இவைகள் எல்லாவற்றிற்காகவும், “நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்” (வச. 33) என்று முடிக்கிறார்.
மரணத்தை எவ்வாறு கையாளுவது என்பதை அறியாத இந்த உலகத்தில், சின்ன சின்ன விஷயங்களுக்காக நாம் சிருஷ்டிகருக்கு நன்றி சொல்லி பழகும்போது ஒரு நம்பிக்கையை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
புதிய அழைப்பு
ஒரு அடாவடி இளைஞர் கும்பலின் தலைவன் கேசியும் அவனுடைய கூட்டமும் வீடுகள், கார்கள், கடைகள் என்று கொள்ளையடிப்பதையும் மற்ற அடாவடி கும்பலுடன் சண்டையிடுவதையுமே வாடிக்கையாய் கொண்டிருந்தனர். அதின் விளைவாய் கேசி கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டான். அங்கே சிறைக் கலவரத்தின்போது கத்திகளை விநியோகித்த நபராய் மாறினான்.
சில நாட்களுக்கு பின் தனி சிறையில் அடைக்கப்பட்டான். ஓரு நாள் அவனுடைய அறையில் கனவு காணும்போது, அதில் அவனுடைய வாழ்க்கையின் முக்கிய சம்பவங்களையும், இயேசு சிலுவையிலறையப்படுதலையும், அத்துடன் இயேசு இவனைப் பார்த்து “இதை உனக்காகவே செய்தேன்” என்று சொல்லுவதாகவும் கண்டான். கண்டமாத்திரத்தில், தரையில் முகங்குப்புற விழுந்து, தன் பாவத்தை அறிக்கையிட்டு அழ ஆரம்பித்தான். பின்பாக ஒருநாள் அதை அங்கிருந்த சிற்றாலய ஊழியரிடம் சொல்ல, அவர் அவனுக்கு இயேசுவைக் குறித்து சொல்லி, வேதாகமத்தை பரிசாகக் கொடுத்தார். “அது தான் என்னுடைய விசுவாச பயணத்தின் துவக்கம்” என்று கேசி சொல்லுகிறான். அவனுடைய தனிமையான சிறையிலிருந்து மீண்டும் பிரதான சிறைக்கு மாற்றப்பட்டான். அங்கே அவனுடைய விசுவாசத்தினிமித்தம் தவறாக நடத்தப்பட்டாலும், அங்குள்ள மற்ற கைதிகளுக்கு இயேசுவைக் குறித்து சொல்லுவதின் மூலம் தான் புதிய அழைப்பைப் பெற்றுக்கொண்டதாக மகிழ்ச்சியடைந்தான்.
தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதிய நிருபத்தில், வாழ்க்கையை மாற்றும் கிறிஸ்துவின் வல்லமையைக் குறித்து பேசுகிறார்: பாவ வாழ்க்கையிலிருந்த நம்மை தேவன் அழைத்து கிறிஸ்துவை பின்பற்றவும் அவருக்கே ஊழியம் செய்யும்படியாகவும் ஏற்படுத்துகிறார் (2 தீமோத்தேயு 1:9). அவரை நாம் விசுவாசித்து ஏற்றுக்கொண்டால், கிறிஸ்துவின் அன்பின் ஜீவனுள்ள சாட்சிகளாய் நாம் மாறுகிறோம். உபத்திரவத்தின் மத்தியிலும் சுவிசேஷத்தை பகிர்ந்துகொள்ளும்படிக்கு பரிசுத்த ஆவியானவர் நம்மை உற்சாகப்படுத்துகிறார் (வச.8). கேசியைப் போலவே நம்முடைய புதிய அழைப்பின் ஜீவியத்தை வாழுவோம்.
நம்மேல் தேவனின் களிகூறுதல்
எங்களுக்கு முதல் ஆண் குழந்தை பிறந்து பதினேழு மாதங்கள் கழித்து பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பெண் குழந்தையைக் குறித்து நான் அதிக மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் ஆண் குழந்தையை பராமரிப்பது குறித்து எனக்கு ஓரளவு தெரியும், பெண் குழந்தையைக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்பதினால் எனக்கு சிறிய தயக்கம் இருந்தது. நாங்கள் அவளுக்கு சாரா என்று பெயரிட்டோம். அவளைத் தூங்க வைக்கும் பொறுப்பை நான் ஏற்றதால் என் மனைவி சற்று ஓய்வெடுத்தார். ஏன் என்று தெரியவில்லை, ஆனால் அவளை தூங்கப்பண்ணும்பொருட்டு நான் “நீரே என் சூர்யோதயம்” என்ற பாடலை தேர்ந்தெடுத்து பாடினேன்.அவளை என் தோள்மீது போட்டுக்கொண்டு அப்பாடலை ரசித்துப் பாடினேன். தற்போது அவளுக்கு 20 வயதாகிறது. இன்னும் அவளை சூர்யோதயம் என்றே அழைப்பது வழக்கம்.
நாம் தூதர்கள் பாடி களிகூருவார்கள் என்பதை அறிந்திருக்கிறோம். ஆனால் தேவன் களிகூர்ந்தார் என்பதை நீங்கள் கடைசியாய் கேள்விப்பட்டது எப்போது? அதிலும் அவர் உங்களைக் குறித்து களிகூர்ந்தார் என்பதை எப்போதாவது கேள்விப்பட்டதுண்டா? எருசலேமுக்கான செப்பனியாவின் செய்தியில், “அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார் ; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்” (3:17) என்று கூறுகிறார். இது எருசலேமுக்கு உரைக்கப்பட்ட செய்தியாயினும், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நம் பேரிலும் தேவன் கெம்பீரமாய் களிகூருவார். அவர் எந்த பாடலைப் பாடுவார்? வேதம் அதற்கு பதில் சொல்லவில்லை. ஆனால் அந்த பாடல் நிச்சயமாய் அவருடைய அன்பிலிருந்தே உதயமாகும். எனவே அதை உண்மையானது, ஒழுக்கமானது, நீதியுள்ளது, கற்புள்ளது, அன்புள்ளது மற்றும் நற்கீர்த்தியுள்ளது என்று நம்பலாம் (பிலிப்பியர் 4:8).
தேவன் கேட்கிறாரா?
எங்களுடைய திருச்சபை ஆராதனைக் குழுவில் நான் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது, என்னுடைய வேலை என்னவெனில், ஆராதனை நேரத்தில் அட்டைகளில் எழுதிக் கொடுத்த ஜெபக்குறிப்புகளுக்காய் நாங்கள் ஜெபிக்கவேண்டும். அத்தையின் சுகத்திற்காக, தம்பதியினரின் பணத்தேவைக்காய், தன் பேரப்பிள்ளை தேவனை அறிந்துகொள்வதற்காய் என்று எழுதப்பட்டிருக்கும். இந்த ஜெபத்திற்கான பதில்களைக் குறித்த சாட்சிகளை நான் அரிதாகவே கேட்க நேர்ந்தது. அதிலும் பெரும்பாலும் யார் என்றும் என்ன விண்ணப்பம் என்றும் எனக்கு தெரிவதில்லை. தேவன் அவர்களுக்கு எப்படி பதில்கொடுக்கிறார் என்பதைக் குறித்து எனக்கு தெரியவில்லை. சில வேளைகளில், அவர் என் ஜெபத்தைக் கேட்கிறாரா? என் ஜெபத்தின் விளைவாய் ஏதாகிலும் பலன் இருக்கிறதா? என்று நானே கேட்டுக்கொள்வேன்.
நம்மில் அநேகர், “கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்கிறாரா?”என்ற கேள்வியை வாழ்நாளில் பலமுறை கேட்டிருக்கிறோம். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் அன்னாளைப்போல பிள்ளைக்காய் தேவ சமூகத்தில் விண்ணப்பித்து, ஆண்டுகளாய் என் விண்ணப்பத்திற்கு பதில் இல்லை. ஆயினும் என்னுடைய விண்ணப்பத்தில் என் தந்தை தேவனை விசுவாசிக்க துவங்கினார். எனினும் அதை வெளிப்படையாய் பிரதிபலிக்காமல் இறந்துவிட்டார்.
நூற்றாண்டுகளாய் நடந்தேறிய வேதத்தின் சம்பவங்களில் தேவன் பல விண்ணப்பங்களுக்கு செவிசாய்த்துள்ளார்: இஸ்ரவேல் அடிமைத்தனத்திலிருந்து தேவனை நோக்கிக் கூப்பிட்டபோது (யாத். 2:24) ;சீனாய் மலையில் மோசேக்கு (உபாகமம் 9:19) ; கில்காலில் யோசுவாவுக்கு (யோசுவா 10:14) ; பிள்ளைக்கான அன்னாளின் வேண்டுதலின் போது (1 சாமுவேல் 1:10-17) ; சவுலிடத்திலிருந்து தப்பிப் பிழைப்பதற்கு தாவீது விண்ணப்பித்தபோது (2 சாமுவேல் 22:7) என்று பல விண்ணப்பங்களுக்கு தேவன் பதிலளித்துள்ளார்.
1 யோவான் 5:14ன்படி, நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார். செவிகொடுக்கிறார் என்றால், கூர்ந்து கவனித்து கேட்டதற்கேற்றபடி பதில் கொடுக்கிறார் என்று அர்த்தம்.
கர்த்தர் செவிகொடுக்கிறவர் என்று சரித்திரத்தில் தேவ ஜனத்திற்கு இருந்த நம்பிக்கையை இன்று நாம் தேவ சமுகத்திற்கு போகும்போது தரித்துக்கொள்வோம். அவர் நம் விண்ணப்பத்திற்கு செவிகொடுக்கிறவர்.