எங்களுக்கு முதல் ஆண் குழந்தை பிறந்து பதினேழு மாதங்கள் கழித்து பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பெண் குழந்தையைக் குறித்து நான் அதிக மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் ஆண் குழந்தையை பராமரிப்பது குறித்து எனக்கு ஓரளவு தெரியும், பெண் குழந்தையைக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்பதினால் எனக்கு சிறிய தயக்கம் இருந்தது. நாங்கள் அவளுக்கு சாரா என்று பெயரிட்டோம். அவளைத் தூங்க வைக்கும் பொறுப்பை நான் ஏற்றதால் என் மனைவி சற்று ஓய்வெடுத்தார். ஏன் என்று தெரியவில்லை, ஆனால் அவளை தூங்கப்பண்ணும்பொருட்டு நான் “நீரே என் சூர்யோதயம்” என்ற பாடலை தேர்ந்தெடுத்து பாடினேன்.அவளை என் தோள்மீது போட்டுக்கொண்டு அப்பாடலை ரசித்துப் பாடினேன். தற்போது அவளுக்கு 20 வயதாகிறது. இன்னும் அவளை சூர்யோதயம் என்றே அழைப்பது வழக்கம்.

நாம் தூதர்கள் பாடி களிகூருவார்கள் என்பதை அறிந்திருக்கிறோம். ஆனால் தேவன் களிகூர்ந்தார் என்பதை நீங்கள் கடைசியாய் கேள்விப்பட்டது எப்போது? அதிலும் அவர் உங்களைக் குறித்து களிகூர்ந்தார் என்பதை எப்போதாவது கேள்விப்பட்டதுண்டா? எருசலேமுக்கான செப்பனியாவின் செய்தியில், “அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார் ; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்” (3:17) என்று கூறுகிறார். இது எருசலேமுக்கு உரைக்கப்பட்ட செய்தியாயினும், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நம் பேரிலும் தேவன் கெம்பீரமாய் களிகூருவார். அவர் எந்த பாடலைப் பாடுவார்? வேதம் அதற்கு பதில் சொல்லவில்லை. ஆனால் அந்த பாடல் நிச்சயமாய் அவருடைய அன்பிலிருந்தே உதயமாகும். எனவே அதை உண்மையானது, ஒழுக்கமானது, நீதியுள்ளது, கற்புள்ளது, அன்புள்ளது மற்றும் நற்கீர்த்தியுள்ளது என்று நம்பலாம் (பிலிப்பியர் 4:8).