Archives: ஜூலை 2021

தேவனுக்காய் ஏங்குதல்

ரோஹன் மற்றும் ரீனா தம்பதியினர் வீட்டைக் காலி செய்து ஐந்து மைல் தூரத்திலிருந்த வேறொரு வீட்டிற்கு குடிபோனார்கள். அவர்களின் அந்த இடமாற்றத்தை விரும்பாத “பகீரா” என்னும் அவர்களின் பூனை திடீரென்று காணாமல் போனது. ஒருநாள் சமூக வலைதளம் ஒன்றில் தங்கள் பழைய வீட்டைக் காணநேர்ந்தது. அதில் பகீரா இருந்ததைக் கண்டனர். 

இந்த தம்பதியினர் மகிழ்ச்சியுடன் போய் அவர்களின் பூனையை மீட்டுக்கொண்டு வந்தனர். பகீரா மீண்டும் ஓடியது. எங்கு போனது என்று தெரியுமா? இந்த முறை அவர்களின் பழைய வீட்டை வாங்கின அந்த குடும்பமே பகீராவை தங்கள் பொறுப்பில் வைத்து பாதுகாத்துக் கொள்வதாக ஒத்துக்கொண்டனர். இது திரும்பிப்போவதை அவர்களால் தடுக்கமுடியவில்லை. பகீரா எப்போதும் தன்னுடைய சொந்த வீட்டிற்கு திரும்பிவிடுகிறது.  

நெகேமியா, சூசாவின் ராஜ அரண்மனையில் வேலை செய்துகொண்டிருந்தான். ஆனால் அவனுடைய இருதயம் அங்கே இல்லை. அவன் தன்னுடைய “பிதாக்களின் கல்லறை” இருக்கும் நகரம் பாழாவதைக் குறித்த செய்தியைக் கேள்விப்படுகிறான் (நெகேமியா 2:3). ஆகையினால் நெகேமியா ஜெபிக்கும்போது, “நீங்கள் என்னிடத்தில் திரும்பி, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், உங்களிலே தள்ளுண்டு போனவர்கள் வானத்தின் கடையாந்தரத்தில் இருந்தாலும், நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து, என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்துகொண்ட ஸ்தலத்துக்கு அவர்களைக் கொண்டுவருவேன் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தையை நினைத்தருளும்” (1:8-9) என்று ஜெபிக்கிறான்.

என் வீடு எங்கேயோ என் இருதயமும் அங்கே இருக்கும். நெகேமியா விஷயத்தில் வீட்டிற்காய் ஏங்குவது என்பது புவியியல் அமைப்பிற்கு அப்பாற்பட்ட ஒரு ஏக்கம். ஆம்! தான் அதிகம் நேசிக்கிற தன் தேவனோடுள்ள உறவு. “என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்துகொண்ட ஸ்தலம்” என்பது எருசலேம் நகரம். 

நம்மை சீரமைக்கும் இயேசு

காரை வடிவமைக்கும் பிரிவில் வேலை செய்துகொண்டிருந்த அசோக், தவறு ஏதும் செய்யாதபோதிலும் அவனுடைய வேலையை இழக்க நேரிட்டது. மற்ற துறையில் செய்யப்பட்ட தவறினால், இவர்கள் வடிவமைத்த கார்களில் பிரச்சனை ஏற்பட்டது. பல விபத்துகளைச் சந்தித்த அவர்களுடைய வாகனங்களைக் குறித்து வெளியான செய்திகளினால், அவர்களுடைய கார்களை வாங்குவதை மக்கள் தவிர்த்தனர். அதினால், கம்பெனி நிர்வாகம் அசோக்கை வேலையை விட்டு நிறுத்தியது. அது அவனுக்கு ஏற்பட்ட நியாயமில்லாத சேதாரம். அது எப்போதுமே நியாயமற்றது. 

வரலாற்றின் முதல் சேதாரம், முதன்முதலில் மனிதன் பாவம் செய்தவுடனேயே நிகழ்ந்தது. தங்கள் நிர்வாணத்தைக் குறித்து ஆதாமும் ஏவாளும் வெட்கப்பட்டதினால், தேவன் அவர்களுக்கு “தோல் உடைகளை” உண்டாக்கிக் கொடுத்தார் (ஆதியாகமம் 3:21). இதை கற்பனை செய்வது சற்றுக் கடினம். ஆனால் அதற்காக, தோட்டத்தில் சுற்றித்திரிந்த ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட விலங்குகள் அடிக்கப்பட்டு, தோலுரிக்கப்பட்டிருக்க வேண்டும். 

அத்துடன் அது நிற்கவில்லை. தேவன் இஸ்ரவேலைப் பார்த்து, “தினந்தோறும் ஒரு வயதான பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியைக் கர்த்தருக்குத் தகனபலியாகப் படைக்கக்கடவாய்; காலைதோறும் அதைப் படைக்கவேண்டும்” (எசேக்கியேல் 46:13) என்று கட்டளையிட்டார். “தினந்தோறும்” அதை செய்யவேண்டுமாம். மனுஷர்களுடைய பாவங்களினால் எத்தனை ஆயிரம் விலங்குகள் இதுவரை பலியிடப்பட்டுள்ளது? 

தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசுகிறிஸ்து வந்து அதை மாற்றும்வரை நம்முடைய பாவங்களை கழுவுவதற்கு விலங்குகள் பலியிடப்படவேண்டியிருந்தது (யோவான் 1:29). இதனை “சீரமைக்கப்பட்ட சேதாரம்” எனலாம். ஆதாமின் பாவம் நம்மை கொன்றதுபோல, கடைசி ஆதாமாகிய இயேசுவின் கீழ்ப்படிதல் அவரை விசுவாசிப்பவர்களின் வாழ்க்கையை சீரமைக்கிறது (ரோமர் 5:17-19). “சீரமைக்கும் சேதாரமும்” நியாயமானது அல்ல – அது இயேசுவின் ஜீவனை இழக்கச்செய்தது –ஆனால் அது இலவசமானது. இயேசுவை விசுவாசித்து, அவர் கொடுக்கும் இரட்சிப்பை பெற்றுக்கொண்டால், அவருடைய நீதி நம் வாழக்கையில் செயல்படும். 

துக்கத்தில் நம்பிக்கை

டாக்ஸி ஓட்டுநர் எங்களை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் அவருடைய கதையை எங்களுக்குச் சொன்னார். வறுமையின் நிமித்தமாக தன் வீட்டைவிட்டு வெளியேறி, 17 வயதில் இந்த பட்டணத்திற்கு வந்ததாக கூறினார். பதினொறு வருடங்கள் கழிந்துவிட்டது. தற்போது தனக்கு குடும்பம் இருப்பதாகவும் தங்களுடைய கிராமத்தில் கிடைக்காத நல்ல வாழ்க்கையை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் கூறினார். ஆயினும் தன் பெற்றோரை விட்டும் உடன்பிறப்புகளை விட்டும் பிரிந்திருப்பதை நினைத்து வேதனைப்பட்டார். எங்களிடம் அவர் பகிர்ந்துகொண்ட அவருடைய கடினமான வாழ்க்கை பயணமானது, அவருடைய குடும்பத்தோடு ஒன்று சேரும்வரை நிறைவடையாது.    

நம்மை நேசிப்பவர்களிடமிருந்து பிரிந்திருப்பது கடினமானது. ஆனால் நாம் நேசிப்பவர்களை மரணத்தில் பிரிவது அதைவிட கடினமானது. அந்த இழப்பை, அவர்களை மீண்டும் சந்திக்கும்வரை ஈடுகட்டமுடியாது. இதுபோன்ற இழப்பை அனுபவித்துக் கொண்டிருந்த தெசலோனிக்கேய திருச்சபையின் புது விசுவாசிகளுக்கு பவுல் எழுதும்போது, “அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை” (1 தெசலோனிக்கேயர் 4:13) என்று எழுதுகிறார். விசுவாசிகளாய் கிறிஸ்துவோடு சேர்ந்து மீண்டும் நாம் இணைக்கப்படப் போகிறோம் என்று நாம் எதிர்பார்க்கலாம் (வச. 17). 

சில வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு ஏற்படுத்திய ஆழமான பிரிதலை நாம் பொறுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நாம் மீண்டும் இணையப் போகிறோம் என்று கிறிஸ்துவுக்குள் நம்புகிறோம். துக்கங்கள் மற்றும் இழப்புகளின் மத்தியிலும் தேவன் கொடுத்த இந்த நம்பிக்கையில் நாம் ஆறுதல் அடைகிறோம் (வச. 18). 

சத்தியமும் பொய்யும்

பிரசங்க பீடத்திலே என்னுடைய வேதாகமத்தை வைத்து, என்னுடைய பிரசங்கத்தை கேட்கக் காத்திருந்த முகங்களை வெறித்துப் பார்த்தேன். நான் ஜெபத்தோடும் ஆயத்தத்தோடும் தான் வந்திருந்தேன். ஆனால் ஏன் என்னால் பேசமுடியவில்லை?

நீ தகுதியில்லாதவன்! ஒருவனும் உன்னுடைய பேச்சை எப்போதும் கேட்கப்போவதில்லை. அதிலும் குறிப்பாய் அவர்கள் உன்னுடைய கடந்த காலத்தை அறிந்தவர்கள் எனறால், தேவனும் உன்னை பயன்படுத்தப் போவதில்லை. கடந்த பத்து ஆண்டுகளாக, என்னுடைய இருதயத்திலும் சிந்தையிலும் இந்த வார்த்தைகள் பலவகைகளில் திரும்பத் திரும்ப ஒலித்து, அந்த பொய்களை என்னை நம்பச்செய்தது. அந்த வார்த்தைகள் பொய் என்று எனக்குத் தெரிந்தாலும், அதின் பயத்திலிருந்தும் குற்ற மனசாட்சியிலிருந்தும் என்னால் மீள முடியவில்லை. நான் வேதாகமத்தைத் திறந்தேன். 

நீதிமொழிகள் 30:5க்கு நேராய் என் வேதத்தைத் திருப்பி, அதை வாசிப்பதற்கு முன்பாக, நிம்மதி பெருமூச்சிவிட்டேன். “தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர்” என்று வாசித்தேன். வாசித்து என் கண்களை மூடியபோது, ஒரு தெய்வீக சமாதானம் என்னை ஆட்கொண்டது. அந்த கூட்டத்தில் என்னுடைய சாட்சியைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தேன். 

நம்மை செயலிழக்கப்பண்ணும் மக்களின் எதிர்மறையான வார்த்தைகளின் வலிமையை நம்மில் பலர் அனுபவித்துள்ளோம். ஆனால் தேவனுடைய வார்த்தைகளெல்லாம் புடமிடப்பட்டவைகள்; நேர்த்தியானவைகள்; தெளிவாய் ஒலிக்கக்கூடியவைகள். நம்முடைய மதிப்பை அல்லது தேவனுடைய பிள்ளைகள் என்னும் நமது அங்கீகாரத்தை இழக்கச் செய்யும், ஆவியை நொறுக்கும் வார்த்தைகளை நாம் நம்பத் தூண்டப்படும்போது, கர்த்தருடைய புடமிடப்பட்ட வார்த்தைகள், நம் சிந்தையையும் இருதயத்தையும் பாதுகாக்கிறது. அவ்வாறு செய்யும்போது, சங்கீதக்காரனுடைய, “கர்த்தாவே, ஆதிமுதலான உமது நியாயத்தீர்ப்புகளை நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன்” (சங்கீதம் 119:52) என்னும் வார்த்தைகளை நாமும் உச்சரிக்கமுடியும். நம்முடைய எதிர்மறையான எண்ணங்களை மாற்றி, தேவனைக் குறித்தும், நம்மைக் குறித்தும், மற்றவர்களைக் குறித்தும் நாம் புரிந்துக்கொள்ள நமக்கு வேதாகம் உதவுகிறது.