டாக்ஸி ஓட்டுநர் எங்களை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் அவருடைய கதையை எங்களுக்குச் சொன்னார். வறுமையின் நிமித்தமாக தன் வீட்டைவிட்டு வெளியேறி, 17 வயதில் இந்த பட்டணத்திற்கு வந்ததாக கூறினார். பதினொறு வருடங்கள் கழிந்துவிட்டது. தற்போது தனக்கு குடும்பம் இருப்பதாகவும் தங்களுடைய கிராமத்தில் கிடைக்காத நல்ல வாழ்க்கையை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் கூறினார். ஆயினும் தன் பெற்றோரை விட்டும் உடன்பிறப்புகளை விட்டும் பிரிந்திருப்பதை நினைத்து வேதனைப்பட்டார். எங்களிடம் அவர் பகிர்ந்துகொண்ட அவருடைய கடினமான வாழ்க்கை பயணமானது, அவருடைய குடும்பத்தோடு ஒன்று சேரும்வரை நிறைவடையாது.    

நம்மை நேசிப்பவர்களிடமிருந்து பிரிந்திருப்பது கடினமானது. ஆனால் நாம் நேசிப்பவர்களை மரணத்தில் பிரிவது அதைவிட கடினமானது. அந்த இழப்பை, அவர்களை மீண்டும் சந்திக்கும்வரை ஈடுகட்டமுடியாது. இதுபோன்ற இழப்பை அனுபவித்துக் கொண்டிருந்த தெசலோனிக்கேய திருச்சபையின் புது விசுவாசிகளுக்கு பவுல் எழுதும்போது, “அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை” (1 தெசலோனிக்கேயர் 4:13) என்று எழுதுகிறார். விசுவாசிகளாய் கிறிஸ்துவோடு சேர்ந்து மீண்டும் நாம் இணைக்கப்படப் போகிறோம் என்று நாம் எதிர்பார்க்கலாம் (வச. 17). 

சில வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு ஏற்படுத்திய ஆழமான பிரிதலை நாம் பொறுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நாம் மீண்டும் இணையப் போகிறோம் என்று கிறிஸ்துவுக்குள் நம்புகிறோம். துக்கங்கள் மற்றும் இழப்புகளின் மத்தியிலும் தேவன் கொடுத்த இந்த நம்பிக்கையில் நாம் ஆறுதல் அடைகிறோம் (வச. 18).