Archives: ஜூலை 2020

கெம்பீரத் தோற்றம் மறைந்த போது

எங்களுடைய மகள் மெலிசாவின் கெம்பீர தோற்றத்தை என்னால் நினைவுக்கு கொண்டு வர முடியவில்லை. அவள் தன்னுடைய பள்ளியின் வாலிபால் குழுவில் இருந்து, மகிழ்ச்சியோடு விளையாடின அந்த அற்புதமான நேரங்கள் என்னுடைய மனதைவிட்டு மறைந்து கொண்டிருக்கின்றன. எங்களின் குடும்ப நிகழ்வுகளின் போது, அவளுடைய முகத்தில் தோன்றும் வெட்கம் கலந்த முழுமையான சிரிப்பை, நினைவுக்கு கொண்டு வருவதும் கடினமாக உள்ளது. அவளுடைய மகிழ்ச்சி நிறைந்த பிரசன்னத்தை, பதினேழு வயதில் ஏற்பட்ட சாவின் திரை மூடிவிட்டது.

புலம்பல் புத்தகத்தில் வரும் எரேமியாவின் வார்த்தைகள், இருதயமும் தன் நம்பிக்கையை இழந்துவிடும் என்பதைக் காட்டுகின்றது. “என் பெலனும் நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்து போயிற்று” (3:18) என்கின்றார். அவருடைய சூழ் நிலை நம்முடைய சூழ்நிலைகளையெல்லாம் விட வேறுபட்டது. அவர் தேவனுடைய நியாயத்தீர்ப்பைக் குறித்து பிரசங்கித்தார், அவர் எருசலேமின் தோல்வியைக் கண்டார். அவருடைய கெம்பீரம் அவரை விட்டுப் போயிற்று, ஏனெனில் அவர் தோல்வியை உணர்ந்தார் (வ.12), தனிமைப் படுத்தப்பட்டார் (வ.14), மேலும் தேவனால் கைவிடப்பட்டார் (வ.15-20).

ஆனால் அது அவருடைய கதையின் முடிவல்ல, எரேமியாவின் உடைக்கப்பட்ட வேதனை நிறைந்த உள்ளத்தினுள், ஒளி பிரகாசித்தது. அவர், “நம்பிக்கை கொண்டிருப்பேன்” (வ.21) என்கின்றார். “நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே” (வ.22) என்பதை உணரும் போது, அவருக்கு நம்பிக்கை தோன்றுகின்றது. நாம் இப்பொழுது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது என்னவெனின், நம்முடைய கெம்பீரமும் கடந்து போகலாம், ஆனால் “தேவனுடைய இரக்கங்களுக்கு முடிவில்லை, அவை காலைதோறும் புதியவைகள்” (வ.22-23).

நம்முடைய இருண்ட நாட்களிலும் தேவனுடைய பெரிய உண்மை நம்மில் பிரகாசிக்கும்.

இருளில் வெளிச்சம்

நாங்கள் குடியேறியுள்ள புதிய பட்டணத்தை, அநேக இடியோடு கூடிய புயல்கள் தாக்கியதால் காற்றின் ஈரப்பதம் உயர்ந்தது, காலைப் பொழுதில் வானம் கருமேகங்களால் சூழ்ந்திருந்தது.  மாலையில் நான் என்னுடைய நாய் ஜிம்மியை நடக்க அழைத்துச் சென்றேன். என் நாட்டின் வேறொரு பகுதிக்கு, என்னுடைய குடும்பம் நகர்ந்துள்ளதால், சந்திக்க வேண்டிய அநேக சவால்கள் என்னுடைய மனதை அழுத்திக் கொண்டிருந்தன. எங்களுடைய உயர்ந்த நம்பிக்கைக்கும், எதிர்பார்ப்புக்கும் வெகுதொலைவில் அநேக காரியங்கள் போய் கொண்டிருந்ததால், ஏமாற்றம் ஒரு புறமிருக்க, நான் என்னுடைய நாயை மெதுவாக நடத்திச் சென்று, அங்குள்ள புற்களை முகர்ந்து கொள்ளச் செய்தேன். எங்கள் வீட்டின் அருகில் ஓடிய ஓடையின் ஒலியைக் கேட்டேன். சிறிய வெளிச்சம் விட்டு விட்டு வந்தது, ஓடையின் அருகிலுள்ள கொடிகளில் மலர்ந்துள்ள கொத்துக் கொத்தான காட்டு மலர்களைச் சுற்றி வெளிச்சம் விட்டு விட்டு வந்து கொண்டிருந்தது. அவை மின்மினிப் பூச்சிகள்!

இருளைக் கிழித்துக் கொண்டு வந்த அந்த மின்னும் ஒளியைப் பார்த்த என்னை தேவன் சமாதானத்தால் நிரப்பினார். நான் சங்கீதக்காரனின் பாடலை நினைத்துப் பார்த்தேன். “தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்” (சங். 18:28). தேவன் அவருடைய இருளை வெளிச்சமாக்குவார் என உறுதியாகக் கூறிய தாவீது, தேவன் அவருடைய தேவைகளையெல்லாம் பார்த்துக் கொள்வார், அவரே தன்னைப் பாதுகாக்கிறவர் (வ.29-30) என்று கூறுகின்றார். தேவன் தரும் பெலத்தால், அவருடைய பாதையில் வரும் எத்தகைய எதிரியையும் மேற்கொள்ளுவேன் (வ.32-35) என்கின்றார். ஜீவனுள்ள தேவன் எல்லா சூழ் நிலைகளிலும் அவரோடிருக்கிறார் என்ற நம்பிக்கை கொண்ட தாவீது, எல்லா ஜாதிகளுக்குள்ளும் கர்த்தரைத் துதித்து, பாடல்களால் அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபப் படுத்துகின்றார் (வ.36-49).

வாழ்க்கையில் எதிர்பாராத புயல்களின் வழியே நாம் கடந்து கொண்டிருந்தாலும், மழை நின்ற பின்னுள்ள அமைதியை         அநுபவித்துக் கொண்டிருந்தாலும் சரி, தேவனுடைய பிரசன்னத்தின் சமாதானம், இருளை அகற்றி, நம் பாதைக்கு வெளிச்சம் தருகின்றது. நம்முடைய ஜீவனுள்ள தேவனே நமக்கு பெலனும், அடைக்கலமும், நம்மைக் காப்பவரும், விடுவிக்கிறவருமாய் இருக்கிறார்.

விலையேறப் பெற்ற சந்தோஷம்

அந்த டிஜிட்டல் மெல்லிசையைக் கேட்டவுடன், நாங்கள் ஆறு பேரும் செயலில் இறங்கினோம். சிலர் கால்களில் ஷூவைப் போட்டனர், சிலர் வெறுங்காலோடு சென்று, முன்கதவைத்       திறந்தனர். சில நொடிகளில் நாங்கள் அனைவரும் வேகமாகச் சென்று, அந்த ஐஸ்கிரீம் வண்டியைத் தொடர்ந்தோம். இன்று தான், கோடைகாலத்தின் முதலாவது வெப்பநாள். இதனைக் குளிர்ந்த இனிப்போடு கொண்டாடுவதைக் காட்டிலும் சிறந்தது என்ன இருக்க முடியும்! சில காரியங்களை அது தருகின்ற மகிழ்ச்சிக்காக நாம் செய்வதுண்டு, மற்றப்படி வேறெந்த ஒழுங்கு முறையோ, கட்டாயமோ கிடையாது.

மத்தேயு 13:44-46 ல், இரண்டு உவமைகளிலும், வேறொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக எல்லாவற்றையும் விற்று என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கதைகள், ஒரு தியாகத்தைக் குறிப்பிடுவதாக நம்மை நினைக்கச் செய்யும். ஆனால், உண்மை அதுவல்ல. முதலாவது கதையில், அந்த மனிதனின் “சந்தோஷம்” எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தை வாங்கச் செய்தது. சந்தோஷம் மாற்றத்தைக் கொண்டு வருகின்றது, குற்ற உணர்வோ அல்லது கடமையோ அல்ல.

இயேசு நம் வாழ்வின் ஒரு பகுதியில் மட்டும் இருப்பவர் அல்ல, அவர் நம்முடைய முழு வாழ்வையும் விரும்புகின்றார். அந்தக் கதைகளில் வரும் இரண்டு பேருமே “எல்லாவற்றையும் விற்றனர்” (வ.44). ஆனால் அதில் மிக முக்கியமானது என்னவென்றால், எல்லாவற்றையும் விற்றாலும் அவனுக்கு லாபம் கிடைக்கின்றது. நாம் அதனை நினைத்திருக்க மாட்டோம். கிறிஸ்தவ வாழ்வு என்பது நம்முடைய சிலுவையை எடுத்துக் கொள்வது அல்லவா? ஆம், அது தான். ஆனால், நாம் மரிக்கும் போது வாழ்வைப் பெற்றுக் கொள்கின்றோம். நம்முடைய வாழ்வை இழக்கும் போது, அதனைக் கண்டுபிடிக்கின்றோம். “எல்லாவற்றையும் விற்கும்போது” நாம்    அந்த விலையேறப் பெற்ற பொக்கிஷமாகிய இயேசுவைப் பெற்றுக் கொள்கின்றோம்! சந்தோஷம் காரணி, அர்ப்பணிப்பு அதன் விளைவு.

இயேசுவாகிய பொக்கிஷத்தைப் அறிவதே நமக்கு கிடைக்கும் பலன்.

அந்தக் கணங்களை பொக்கிஷமாகச் சேகரித்து வையுங்கள்

சூ டாங்க்போ என்பவர் சீனாவிலுள்ள மிகப் பெரிய கவிஞரும், கட்டுரை எழுதுபவரும் ஆவார். அவர் நாடு கடத்தப்பட்டிருந்த போது, முழு நிலவைப் பார்த்த போது, தன்னுடைய சகோதரனை நினைத்து, ஒரு பாடல் எழுதினார். “நாம் மகிழ்ச்சியடைகின்றோம் வருத்தப்படுகின்றோம், சேகரிக்கின்றோம் விட்டுவிடுகின்றோம், அப்படியே நிலாவும் வளர்கின்றது, தேய்கின்றது. காலம் செல்லும் போது, எதுவுமே நேர்த்தியாக இருப்பதில்லை” என்று எழுதினார். “நாம் நேசிப்பவர்கள் நீண்ட நாட்கள் வாழ்வார்களாக, இந்த அழகிய காட்சியை நாம் இருவரும், ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும், ரசிக்கின்றோம்” என்று எழுதினார்.

அவர் எழுதிய இப்பாடலின் கருத்தை நாம் பிரசங்கி புத்தகத்தில் காண்கின்றோம். போதகர் என்று அழைக்கப்படும் அதன் ஆசிரியர் (1:1), “அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு,………………..தழுவ ஒரு காலமுண்டு, தழுவாமலிருக்க ஒரு காலமுண்டு (வ.3:4-5) என்பதைக் காண்கின்றார். இரண்டு எதிர் எதிரான காரியங்களை இணைத்துக் கூறும் ஆசிரியர், சீன கவிஞரைப் போன்று, எல்லா நல்ல காரியங்களும் கண்டிப்பாக ஒரு முடிவிற்கு வரும் என்று கூறுகின்றார்.

இவ்வுலகில் எதுவுமே நிலையானது அல்ல, என்பதற்கு அடையாளம், தேய்பிறை மற்றும் வளர் பிறை என்கின்றார். தேவன் உருவாக்கிய இந்த உலகத்தில் அனைத்துப் படைப்புகளையும் தன் வார்த்தையால் உருவாக்கினார். தேவன் தான் படைத்த  யாவற்றையும் பார்க்கின்றார், “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்” (வ.11).

வாழ்வில் எது நடக்கும் என்பதை நம்மால் கூறமுடியாது. சில வேளைகளில் வேதனை தரும் பிரிவுகளாலும் நிறையலாம். ஆனால் அனைத்துமே தேவனுடைய கண்காணிப்பில் தான் நடைபெறுகின்றது என்பதை மனதில் கொள்வோம். நம்முடைய வாழ்வை மகிழ்ச்சியோடு தொடர்வோம், அதில் ஏற்பட்ட மகிழ்ச்சி மற்றும் கெட்ட காரியங்களை பொக்கிஷமாக வைத்துக் கொள்வோம், ஏனெனில், நம்முடைய அன்பு தேவன் நம்மோடு இருக்கின்றார்.

முட்டாளாக நடத்தல்

எங்களது ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழா  நடைபெற்ற போது,  நான் மிகவும் அவமானத்துக்குள்ளான அந்த நிகழ்வு நடை பெற்றது. எங்கள் வேதாகமக் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நண்பர்களால் நிறைந்த அந்த விழாவில், நான், என்னுடைய செய்திக் குறிப்புகளோடு, பேச்சாளர் மேசையை அணுகிய போது, அங்கு அமர்ந்திருந்த மிகப் பெரிய கூட்டத்தைப் பார்த்தேன், என்னுடைய கண்கள், முதல் வரிசையில், அதிக கவனத்தோடு, தங்களுடைய பட்டமளிப்பு உடையில் அமர்ந்திருந்த மதிப்புமிக்க பேராசிரியர்கள் மீது சென்றது. உடனடியாக என்னுடைய உணர்வுகள் மரத்தது, என்னுடைய  நாவு வறண்டது, என்னுடைய மூளை செயலற்றது, முதல் வார்த்தைகள் தடுமாறின, நான் ஏதேதோ சொந்த வார்த்தைகளைச் சொல்ல ஆரம்பித்தேன், என்னுடைய உரையில் எந்த இடத்தில் இருக்கிறேன் என்பதயே உணராதிருந்தேன், நடுக்கத்தோடு பக்கங்களைப் புரட்டினேன், என் வாய் அர்த்தமற்ற வார்த்தைகளை உளறியது, அனைவரும் அதிர்ச்சியுற்றனர். எப்படியோ என்னுடைய பேச்சை முடித்து விட்டு, என்னுடைய நாற்காலியில் வந்து அமர்ந்தேன், தரையைப் பார்த்துக் கொண்டிருந்தேன், நான் செத்து விட விரும்பினேன்.

எனினும் அவமானப்படுதலை தாழ்மைக்கு வழி நடத்தும் ஒரு நல்ல காரியமாகக் கருதலாம், ஏனெனில் அது தேவனுடைய இருதயத்தைத் திறக்கும் சாவி எனலாம். “தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்” என வேதாகமம் கூறுகின்றது (யாக். 4:6). அவர் தழ்மையுள்ளவர்களின் மேல் கிருபையைப் பொழிகின்றார். “சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப் பார்ப்பேன்” (ஏசா.66:2) என்று தேவன் சொல்கின்றார். நாம் தேவனுக்கு முன்பாக நம்மைத் தாழ்த்தும் போது, அவர் நம்மை உயர்த்துவார் (யாக். 4:10).

அவமானப்படுதலும் வெட்கமும் நம்மை தேவனிடம் கொண்டு வருகின்றன, அவர் நம்மை சரிபடுத்துவார். நாம் கீழே விழும் போதும் அவருடைய கரத்தில் விழுவோம்.