அந்த டிஜிட்டல் மெல்லிசையைக் கேட்டவுடன், நாங்கள் ஆறு பேரும் செயலில் இறங்கினோம். சிலர் கால்களில் ஷூவைப் போட்டனர், சிலர் வெறுங்காலோடு சென்று, முன்கதவைத்       திறந்தனர். சில நொடிகளில் நாங்கள் அனைவரும் வேகமாகச் சென்று, அந்த ஐஸ்கிரீம் வண்டியைத் தொடர்ந்தோம். இன்று தான், கோடைகாலத்தின் முதலாவது வெப்பநாள். இதனைக் குளிர்ந்த இனிப்போடு கொண்டாடுவதைக் காட்டிலும் சிறந்தது என்ன இருக்க முடியும்! சில காரியங்களை அது தருகின்ற மகிழ்ச்சிக்காக நாம் செய்வதுண்டு, மற்றப்படி வேறெந்த ஒழுங்கு முறையோ, கட்டாயமோ கிடையாது.

மத்தேயு 13:44-46 ல், இரண்டு உவமைகளிலும், வேறொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக எல்லாவற்றையும் விற்று என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கதைகள், ஒரு தியாகத்தைக் குறிப்பிடுவதாக நம்மை நினைக்கச் செய்யும். ஆனால், உண்மை அதுவல்ல. முதலாவது கதையில், அந்த மனிதனின் “சந்தோஷம்” எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தை வாங்கச் செய்தது. சந்தோஷம் மாற்றத்தைக் கொண்டு வருகின்றது, குற்ற உணர்வோ அல்லது கடமையோ அல்ல.

இயேசு நம் வாழ்வின் ஒரு பகுதியில் மட்டும் இருப்பவர் அல்ல, அவர் நம்முடைய முழு வாழ்வையும் விரும்புகின்றார். அந்தக் கதைகளில் வரும் இரண்டு பேருமே “எல்லாவற்றையும் விற்றனர்” (வ.44). ஆனால் அதில் மிக முக்கியமானது என்னவென்றால், எல்லாவற்றையும் விற்றாலும் அவனுக்கு லாபம் கிடைக்கின்றது. நாம் அதனை நினைத்திருக்க மாட்டோம். கிறிஸ்தவ வாழ்வு என்பது நம்முடைய சிலுவையை எடுத்துக் கொள்வது அல்லவா? ஆம், அது தான். ஆனால், நாம் மரிக்கும் போது வாழ்வைப் பெற்றுக் கொள்கின்றோம். நம்முடைய வாழ்வை இழக்கும் போது, அதனைக் கண்டுபிடிக்கின்றோம். “எல்லாவற்றையும் விற்கும்போது” நாம்    அந்த விலையேறப் பெற்ற பொக்கிஷமாகிய இயேசுவைப் பெற்றுக் கொள்கின்றோம்! சந்தோஷம் காரணி, அர்ப்பணிப்பு அதன் விளைவு.

இயேசுவாகிய பொக்கிஷத்தைப் அறிவதே நமக்கு கிடைக்கும் பலன்.