Archives: ஜூன் 2020

ஓரத்தில் காணப்பட்ட போது

ஒரு மோட்டார் வாகன செயல்முறை விளக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த வாகன ஓட்டிகள், பிரமிக்கச் செய்யும் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தில் இருந்த நான், ஓடுவதற்கு தயாராக இருந்த நிலையில் பார்த்துக் கொண்டிருந்தேன். சுற்றிலும் பார்த்த நான், 3 குழந்தைகள், அருகில் இருந்த மரத்தில் ஏறியிருந்தவாறு பார்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்தேன். அவர்களால் இக்கூட்டத்தினரின் முன்பாக நின்று கொண்டு, இந்த செயலைப் பார்க்க முடியவில்லை.

உயரமான இடத்திலிருந்து இதனை பார்த்துக் கொண்டிருந்த   அக்குழந்தைகளை கவனித்த எனக்கு, லூக்கா கண்டுபிடித்த    செல்வந்தனான ஆயக்காரன் சகேயு (லூக்.19:2) நினைவுக்கு வந்தான். இந்த வரி வசூலிப்பவர்களை, இஸ்ரவேலர், ரோம அரசுக்காக வேலை செய்பவர்களாகவும், தங்களுடைய சொந்த          ஜனங்களிடமிருந்தே அதிக வரியை வசூலித்து, தங்களின் வருமானத்தையும் பெருக்கிக் கொள்பவர்களாகவும் பார்க்கின்றார்கள். எனவே, சகேயு தன்னுடைய சொந்த சமுதாயத்தினராலே ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தான்.

இயேசு எரிகோவிற்குச் சென்ற போது, சகேயு அவரைப் பார்க்க ஆவலாயிருந்தான். ஆனால் ஜனக் கூட்டத்தினிடையே அவரைப் பார்க்க கூடாதவனாக இருந்தான். ஒரு வேளை விரக்தியையும் தனிமையையும் உணர்ந்த அவன் ஒரு காட்டத்தி மரத்தில் ஏறி, இயேசுவை எப்படியாகிலும் பார்த்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டான் (வ.3-4). அங்கே, அந்த கூட்டத்தினருக்கு வெளியே, இயேசு அவனைத் தேடி, அவனுடைய விருந்தினராக, அவனுடைய வீட்டிற்கு தான் வர விரும்புவதைத் தெரிவிக்கின்றார் (வ.5).

 இவ்வுலகத்தில், “இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் (வ.9-10) என்பதை சகேயுவின் கதை நமக்கு வெளிப்படுத்துகின்றது, இயேசு அவனுக்கு தன்னுடைய நட்பையும், இலவச ஈவாகிய இரட்சிப்பையும் கொடுத்தார். நம்முடைய சமுதாயத்தின் ஓரத்தில் இருப்பதாக நாம்    உணர்ந்தாலும், “கூட்டத்தின் கடைசிக்குத்” தள்ளப்பட்டாலும், தேவன் அங்கேயும் நம்மைக் காண்கின்றார்  என்ற உறுதியோடு இருப்போம்.

பயன் தரும் சோதனைகள்

15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவியான. தாமஸ் ஏ கெம்பிஸ் எழுதிய, யாவரும் விரும்பத்தக்க தரம் வாய்ந்த “த இம்மிட்டேஷன் ஆஃப் கிறிஸ்து” (The Imitation of Christ) என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள, சோதனைகளைக் குறித்த ஒரு கண்ணோட்டம் ஆச்சரியத்தைக் கொடுப்பதாக உள்ளது. சோதனைகள் வேதனைகளையும், கஷ்டங்களையும் கொண்டுவரும் என்பதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, “சோதனைகள் பயனுள்ளவை ஏனெனில், அவை நம்மை தாழ்மைப் படுத்துகின்றது, நம்மைச் சுத்திகரிக்கின்றது, நமக்குக் கற்றுத் தருகின்றது” என்று எழுதியுள்ளார். மேலும் அவர், “வெற்றியின் திறவு கோல் தாழ்மையும், பொறுமையுமாம், இவற்றின் மூலம் நம் பகைவர்களையும் மேற்கொள்ளலாம்” என்கின்றார்.

தாழ்மையும் பொறுமையும் : என்னுடைய சோதனைகளை நான் இவற்றின் மூலம் சந்திக்கும் போது, நான் கிறிஸ்துவோடு நடக்கும் வாழ்வு எவ்வளவு வித்தியாசமானதாக இருக்க முடியும்! ஆனால், நான் அடிக்கடி வெட்கத்தோடும், ஏமாற்றத்தோடும், பொறுமையில்லாமலும் என்னுடைய போராட்டங்களில் இருந்து வெளியேற முயற்சிக்கின்றேன்.

சோதனைகளும் இன்னல்களும் வெறுமனே நம்மைப் பயப்படுத்துவதற்காக வருவன அல்ல, அவை ஒரு நோக்கத்திற்காகவே வருகின்றன, என யாக்கோபு முதலாம் அதிகாரம் கற்றுத் தருகின்றது. சோதனைகளின் வழியாக மன வேதனையும் பேரழிவும் ஏற்படும் போது, நாம் தாழ்ந்த இருதயத்தோடு, தேவனுடைய கிருபையையும் ஞானத்தையும் தேடும் போது, “அவர் ஒருவரையும் கடிந்து கொள்ளாமல், யாவருக்கும் சம்பூரணமாய் கொடுக்கின்றார்” (வ.5). தேவனுடைய வல்லமையினாலே, நம்முடைய சோதனைகள், போராட்டங்களின் மத்தியில், நாம் பாவத்துக்கு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகின்றோம், அப்பொழுது நாம் “ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருப்போம்” (வ.4).

நாம் இயேசுவின் பேரில் நம்பிக்கையோடு இருக்கும் போது, நாம் பயத்தோடு வாழ அவசியமே இல்லை. நாம் அவருடைய நேசப் பிள்ளைகள், நாம் சோதனைகளைச் சந்திக்கும் போதும் அவருடைய அன்பின் கரத்தினுள் அமர்ந்து சமாதானத்தோடு இருக்கக் கடவோம்.

என்னுடைய தந்தையின் குழந்தை

அவர்கள் அந்த மங்கலான புகைப்படத்தை பார்த்தனர், பின்னர் என்னைப் பார்த்தனர், பின்னர் என்னுடைய தந்தையைப் பார்த்தனர், மீண்டும் என்னைப் பார்த்தனர், மீண்டும் என்னுடைய தந்தையைப் பார்த்தனர். அவர்களின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன.   “தாத்தா சிறுவனாக இருந்தபோது, எவ்வாறு இருந்தாரோ அப்படியே நீங்கள் இருக்கின்றீர்கள் அப்பா!”  நானும் என்னுடைய தந்தையும் வெகுவாக சிரித்தோம், ஏனெனில் இதனை நாங்கள் ஏற்கனவே அறிவோம், ஆனால் என்னுடைய குழந்தைகள் இதனை சமீபத்தில் தான் கண்டுபிடித்துள்ளனர். நானும் என்னுடைய தந்தையும் வெவ்வேறு நபர்களாக இருந்த போதிலும், ஒரு வகையில், என்னைப் பார்ப்பவர்கள் என்னுடைய தந்தையை இளவயதில் பார்த்ததைப் போலவே உணர்வர்: மிகவும் மெலிந்த உயரமான உருவம், தலை நிறைய கருமை நிற முடி, பெரிய மூக்கு, பெரிய காதுகள். ஆனால், நான் தந்தை அல்ல, நான் என்னுடைய தந்தையின் மகன்.

இயேசுவின் சீஷனான பிலிப்பு ஒரு முறை அவரிடம், “ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும்” (யோவா.14:8) என்று கேட்டான். இயேசு அநேக முறை பிதாவைக் குறித்து தெரிவித்திருந்தும், இம்முறையும் அவருடைய பதில் அவர்களை சிந்திக்க வைக்கின்றது. “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” (வ.9) என்று கூறினார். என்னுடைய தந்தைக்கும் எனக்கும் இடையே காணப்படும் வெளித்தோற்ற ஒற்றுமையைப் போலல்லாமல், இயேசு இங்கு ஒரு புரட்சிகரமான கருத்தைத் தெரிவிக்கின்றார், “நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா?” (வ.10) என்று கேட்கின்றார். அவருடைய முழு பண்பும் குணமும் அப்படியே பிதாவினுடையதாக இருக்கிறது.

இயேசு கிறிஸ்து நேரடியாக தன்னுடைய அன்பு சீஷர்களுக்கும் நமக்கும் தெரிவிக்கின்றார். தேவன் எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ளவேண்டுமானால் என்னைப் பார் என்கின்றார்.

பரிசுத்த கூடுகை

ஒரு வார இறுதி நீண்ட விடுமுறையின் போது, என்னுடைய பள்ளிப் பருவ நண்பர்கள் குழு, ஓர் ஏரியின் அருகில் கூடினோம். பகல் பொழுதை, தண்ணீரில் விளையாடுவதிலும், உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் செலவழித்தோம். ஆனால், மாலையில் நடைபெற்ற உரையாடலை நான் ஒரு பொக்கிஷமாக இருதயத்தில் வைத்துள்ளேன். இரவு கடந்து வந்த போது, உள்ளத்தின் ஆழத்தில் இருந்த பாதிப்புகளையும், தடுமாறும் திருமண உறவுகளையும், சில அதிர்ச்சிகளின் பின்விளைவை சகிக்கும் குழந்தைகளைப் பற்றியும் பகிர்ந்து கொண்டோம். எங்களின், ஒளிவு மறைவற்ற உடைந்த உண்மைகளையும் அத்தகைய மிகக் கஷ்டமான சூழல்களில் தேவன் உண்மையுள்ளவராய் இருந்தததையும் ஒருவருக் கொருவர் பகிர்ந்து கொண்டு, மற்றவரை தேவனுக்கு நேராகத் திருப்பினோம். அந்த மாலைப் பொழுதுகளை பரிசுத்த கூடுகைகளாகக் கருதுகின்றேன்.

தேவன் தன் ஜனங்களை கூடாரப்பண்டிகையை ஆசரிக்கும்படி அழைத்த அந்த இரவு பொழுதும், இத்தகைய ஒரு நோக்கதோடு தான் இருந்திருக்கும் என நான் நினைக்கின்றேன். மற்ற பண்டிகைகளைப் போல, இந்த பண்டிகையையும் ஆசரிக்க ஜனங்கள் எருசலேமிற்கு பிரயாணம் செய்ய வேண்டும். அங்கு வந்த பின்னர், அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஆராதனை செய்ய வேண்டும், அவர்கள் அந்த பண்டிகை நாட்களில், ஒரு வாரத்திற்கு  “எந்த ஒரு வேலையையும் செய்யக் கூடாது!” (லேவி. 23:35). இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டு புறப்பட்ட பின்பு, செய்த வனாந்தர பயணத்தையும், தேவன் அவர்களை போஷித்ததையும் நினைவு கூரும்படி இந்த பண்டிகை ஆசரிக்கப் பட்டது (வ.42-43).

அவர்கள் அனைவரும் தேவனுடைய ஜனங்கள் என்ற ஒரே எண்ணம், அவர்களை இந்தக் கூடுகையின் மூலம் ஒன்று சேர்த்ததோடு, அவர்கள் தனித்தும் குழுவாகவும் கடின வேளைகளை சந்தித்தபோது, தேவன் அவர்களுக்குச் செய்த நன்மைகளை பிரகடனப்படுத்தவும் உதவியாயிருந்தது. நாம்  நேசிக்கின்றவர்களோடு, நாம் ஒன்று சேரும் போது, தேவன் நம் வாழ்வில் தந்துள்ளவற்றையும் அவருடைய பிரசன்னம் நம்முடைய வாழ்வில் இருப்பதையும் நாம் ஒருவரோடொருவர் பகிர்ந்து கொள்ளும் போது, நம்முடைய விசுவாசமும் பலப்படும்.

மன்னிக்கும்படி தெரிந்து கொள்ளல்

1999 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 23 ஆம் நாள், கிரகாம் ஸ்டேன்ஸ் மற்றும் அவருடைய இரண்டு மகன்களாகிய பிலிப், தீமோத்தி ஆகியோர் தங்களுடைய சொந்த ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்த போது, தீயிட்டு கொழுத்தப்பட்டனர். இந்தியாவிலுள்ள ஒடிசா மாநிலத்தில், ஏழை குஷ்டரோகிகளுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்த தன்னலமற்ற சேவையைக் குறித்து, அதுவரை வெளி உலகிற்கு சிறிதளவே தெரிந்திருந்தது. இந்த விபரீதத்தின் மத்தியில், அவருடைய மனைவி கிளாடிஸ் மற்றும் மகள் எஸ்தர் ஆகியோர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்கள். அவர்கள் வெறுப்போடு அல்ல, மன்னிப்போடு செயல்படுவதைத் தெரிந்து கொண்டார்கள்.

12 ஆண்டுகள் கழித்து, அந்த வழக்கு முடிவுக்கு வந்த போது, கிளாடிஸ் அம்மையார் ஒரு செய்தியை வெளியிட்டார்கள். “நான் அந்தக் கொலையாளிகளை மன்னித்து விட்டேன், அவர்கள் மீது எனக்கு எந்த கசப்பும் கிடையாது…………..தேவன், கிறிஸ்துவின் மூலம் என்னை மன்னித்தார். அவர் தன்னுடைய சீடர்களும் அதனையே செய்யும்படி விரும்புகின்றார்” என்றார். மற்றவர்கள் நமக்கு என்ன செய்தார்கள் என்பதில் கவனம் செலுத்துவதைவிட, இயேசு நமக்கு என்ன செய்தார் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே மன்னித்தலின் முக்கிய கருத்து என்பதை தேவன்  கிளாடிஸ்ஸுக்குக் காட்டினார். தன்னை துன்பப் படுத்தியவர்களுக்கு கிறிஸ்து சிலுவையில், “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக்.23:34) என்று கூறிய வார்த்தைகள், இயேசு கிறிஸ்துவின் மன்னிப்பைக் குறித்து, சகரியா ஆசாரியன் கூறிய தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றியது (லூக். 1:77).                                            

ஒடிசாவில் நடைபெற்ற, நினைத்து கூட பார்க்க முடியாத  இத்தகைய சோகத்தை நாம் அனுபவிக்காவிட்டாலும், ஒவ்வொருவரும் ஏதாகிலும் ஒரு வகையில் கஷ்டங்களை சகித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். ஒரு கணவன் துரோகம் இழைக்கின்றான், ஒரு பிள்ளை எதிர்த்து நிற்கின்றது, வேலை செய்யும் இடத்தில் எஜமானனின் கொடுமை என பல  நிந்தனைகளின் மத்தியில் நாம் எப்படி வாழ்வது? நாம் நமது இரட்சகரைப் பார்ப்போம். யாவராலும் தள்ளப்பட்டவராய், கொடுமை படுத்தப் பட்டபோதும், அவர் மன்னித்தார். இயேசுவிடம் நம் பாவங்களுக்கு மன்னிப்பை பெற்றுக் கொள்ளும் போது, நாம் இரட்சிப்பை பெற்றுக் கொள்வதோடு, பிறரை மன்னிக்கக் கூடிய  பெலனையும் பெற்றுக் கொள்கின்றோம். கிளாடிஸ் ஸ்டேன்ஸைப் போன்று, நாம் நம்முடைய இருதயத்திலுள்ள கசப்பை நீக்கி விட்டு, மன்னிக்கும் படி தெரிந்து கொள்வோம்.