15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவியான. தாமஸ் ஏ கெம்பிஸ் எழுதிய, யாவரும் விரும்பத்தக்க தரம் வாய்ந்த “த இம்மிட்டேஷன் ஆஃப் கிறிஸ்து” (The Imitation of Christ) என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள, சோதனைகளைக் குறித்த ஒரு கண்ணோட்டம் ஆச்சரியத்தைக் கொடுப்பதாக உள்ளது. சோதனைகள் வேதனைகளையும், கஷ்டங்களையும் கொண்டுவரும் என்பதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, “சோதனைகள் பயனுள்ளவை ஏனெனில், அவை நம்மை தாழ்மைப் படுத்துகின்றது, நம்மைச் சுத்திகரிக்கின்றது, நமக்குக் கற்றுத் தருகின்றது” என்று எழுதியுள்ளார். மேலும் அவர், “வெற்றியின் திறவு கோல் தாழ்மையும், பொறுமையுமாம், இவற்றின் மூலம் நம் பகைவர்களையும் மேற்கொள்ளலாம்” என்கின்றார்.

தாழ்மையும் பொறுமையும் : என்னுடைய சோதனைகளை நான் இவற்றின் மூலம் சந்திக்கும் போது, நான் கிறிஸ்துவோடு நடக்கும் வாழ்வு எவ்வளவு வித்தியாசமானதாக இருக்க முடியும்! ஆனால், நான் அடிக்கடி வெட்கத்தோடும், ஏமாற்றத்தோடும், பொறுமையில்லாமலும் என்னுடைய போராட்டங்களில் இருந்து வெளியேற முயற்சிக்கின்றேன்.

சோதனைகளும் இன்னல்களும் வெறுமனே நம்மைப் பயப்படுத்துவதற்காக வருவன அல்ல, அவை ஒரு நோக்கத்திற்காகவே வருகின்றன, என யாக்கோபு முதலாம் அதிகாரம் கற்றுத் தருகின்றது. சோதனைகளின் வழியாக மன வேதனையும் பேரழிவும் ஏற்படும் போது, நாம் தாழ்ந்த இருதயத்தோடு, தேவனுடைய கிருபையையும் ஞானத்தையும் தேடும் போது, “அவர் ஒருவரையும் கடிந்து கொள்ளாமல், யாவருக்கும் சம்பூரணமாய் கொடுக்கின்றார்” (வ.5). தேவனுடைய வல்லமையினாலே, நம்முடைய சோதனைகள், போராட்டங்களின் மத்தியில், நாம் பாவத்துக்கு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகின்றோம், அப்பொழுது நாம் “ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருப்போம்” (வ.4).

நாம் இயேசுவின் பேரில் நம்பிக்கையோடு இருக்கும் போது, நாம் பயத்தோடு வாழ அவசியமே இல்லை. நாம் அவருடைய நேசப் பிள்ளைகள், நாம் சோதனைகளைச் சந்திக்கும் போதும் அவருடைய அன்பின் கரத்தினுள் அமர்ந்து சமாதானத்தோடு இருக்கக் கடவோம்.