ஒரு வார இறுதி நீண்ட விடுமுறையின் போது, என்னுடைய பள்ளிப் பருவ நண்பர்கள் குழு, ஓர் ஏரியின் அருகில் கூடினோம். பகல் பொழுதை, தண்ணீரில் விளையாடுவதிலும், உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் செலவழித்தோம். ஆனால், மாலையில் நடைபெற்ற உரையாடலை நான் ஒரு பொக்கிஷமாக இருதயத்தில் வைத்துள்ளேன். இரவு கடந்து வந்த போது, உள்ளத்தின் ஆழத்தில் இருந்த பாதிப்புகளையும், தடுமாறும் திருமண உறவுகளையும், சில அதிர்ச்சிகளின் பின்விளைவை சகிக்கும் குழந்தைகளைப் பற்றியும் பகிர்ந்து கொண்டோம். எங்களின், ஒளிவு மறைவற்ற உடைந்த உண்மைகளையும் அத்தகைய மிகக் கஷ்டமான சூழல்களில் தேவன் உண்மையுள்ளவராய் இருந்தததையும் ஒருவருக் கொருவர் பகிர்ந்து கொண்டு, மற்றவரை தேவனுக்கு நேராகத் திருப்பினோம். அந்த மாலைப் பொழுதுகளை பரிசுத்த கூடுகைகளாகக் கருதுகின்றேன்.

தேவன் தன் ஜனங்களை கூடாரப்பண்டிகையை ஆசரிக்கும்படி அழைத்த அந்த இரவு பொழுதும், இத்தகைய ஒரு நோக்கதோடு தான் இருந்திருக்கும் என நான் நினைக்கின்றேன். மற்ற பண்டிகைகளைப் போல, இந்த பண்டிகையையும் ஆசரிக்க ஜனங்கள் எருசலேமிற்கு பிரயாணம் செய்ய வேண்டும். அங்கு வந்த பின்னர், அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஆராதனை செய்ய வேண்டும், அவர்கள் அந்த பண்டிகை நாட்களில், ஒரு வாரத்திற்கு  “எந்த ஒரு வேலையையும் செய்யக் கூடாது!” (லேவி. 23:35). இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டு புறப்பட்ட பின்பு, செய்த வனாந்தர பயணத்தையும், தேவன் அவர்களை போஷித்ததையும் நினைவு கூரும்படி இந்த பண்டிகை ஆசரிக்கப் பட்டது (வ.42-43).

அவர்கள் அனைவரும் தேவனுடைய ஜனங்கள் என்ற ஒரே எண்ணம், அவர்களை இந்தக் கூடுகையின் மூலம் ஒன்று சேர்த்ததோடு, அவர்கள் தனித்தும் குழுவாகவும் கடின வேளைகளை சந்தித்தபோது, தேவன் அவர்களுக்குச் செய்த நன்மைகளை பிரகடனப்படுத்தவும் உதவியாயிருந்தது. நாம்  நேசிக்கின்றவர்களோடு, நாம் ஒன்று சேரும் போது, தேவன் நம் வாழ்வில் தந்துள்ளவற்றையும் அவருடைய பிரசன்னம் நம்முடைய வாழ்வில் இருப்பதையும் நாம் ஒருவரோடொருவர் பகிர்ந்து கொள்ளும் போது, நம்முடைய விசுவாசமும் பலப்படும்.