Archives: மார்ச் 2020

ஜீவனைப் பார்க்கிலும் நல்லது

மேரி இயேசு கிறிஸ்துவை நேசித்த போதிலும், அவளுடைய வாழ்வு மிகவும் கடினமாக இருந்தது. அவளுடைய இரண்டு மகன்கள் மரித்து விட்டனர், இரண்டு பேரன்களும் மரித்துப் போயினர், அவர்கள் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாயினர். மேரியும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டாள். ஆயினும், ஆலய ஆராதனைக்குச் செல்ல முடிந்த போது, அவள் தவறாமல் ஆராதனையில் கலந்து கொண்டு, திக்கு வாயோடு, தேவனைத் துதித்தாள், “என்னுடைய ஆன்மா தேவனை நேசிக்கிறது, அவருடைய நாமம் துதிக்கப் படுவதாக!” என்று ஆராதித்தாள்.

மேரி தேவனை ஆராதிப்பதற்கு அநேக ஆண்டுகளுக்கு முன்பே, தாவீது சங்கீதம் 63ஐ எழுதினார். இச்சங்கீதத்தினை அவர் யூதாவின் வனாந்தரங்களிலிருந்து எழுதினார் என்பதை அதன் தலைப்பிலிருந்து அறிகிறோம். அவர் விரும்பத்தகாத இடத்தில் இருந்த போதும், தனித்து விடப்பட்ட போதும் விரக்தியடையவில்லை, ஏனெனில் அவர் நம் தேவனை நம்பிக்கையாகக் கொண்டிருந்தார். “தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும், தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது” (வச. 1) என்கின்றார்.

ஒரு வேளை நீயும் கஷ்டமான சூழ்நிலைகளில், வழிதெரியாமல், வசதியற்ற இடங்களில் இருக்கலாம். வசதியற்ற சூழல் நம்மைக் குழம்பச் செய்யலாம், ஆனாலும் நம்மை மிகவும் நேசிப்பவரை பற்றிக்கொண்டோமேயானால், நாம் தடுமாறத் தேவையில்லை (வ.3), அவர் நம்மை திருப்தியாக்குபவர் (வ.5), துணையாயிருப்பவர் (வச. 7), அவருடைய வலது கரம் நம்மைத் தாங்குகிறது (வ.8). நமது ஜீவனைப் பார்க்கிலும் அவரது அன்பு பெரிதாகையால், மேரியையும், தாவீதையும் போன்று நாமும், என் ஆத்துமா திருப்தியாகும், என் வாய் ஆனந்தக் களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும் என்று அவரைக் கனப் படுத்துவோமாக (வச. 3-5).

முழு மன திருப்தி

அது எப்படி இருக்கும் என்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள். ஓர் அறுவை சிகிச்சை முடிந்த பின்னர், கட்டணத்தொகை பில்கள் வந்த வண்ணம் இருந்தன – மயக்க மருந்து மருத்துவர், அறுவைசிகிச்சை மருத்துவர், ஆய்வு கூடம், மற்றும் தங்கும் வசதி என பில்கள் வந்தன. அவசர அறுவை சிகிச்சை முடித்துக் கொண்ட ரோகனின் அநுபவம் இது. “நாங்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்களை இன்சுரன்ஸ் கம்பெனிக்கு கட்ட வேண்டியிருந்தது. இந்த பில்களையெல்லாம் கட்டிய பின்னர் தான், எங்களுடைய வாழ்க்கை நன்றாக இருக்க முடியும், எனக்கும் திருப்தியாக இருக்கும். சில வேளைகளில், நான், என்னைத் தாக்கும் அநேக கிரிக்கெட் பந்துகளையெல்லாம் அடித்து வெளியே தள்ளுவதைப் போன்று உணர்கின்றேன்” என்று கூறினான். 

சில வேளைகளில், நம் வாழ்க்கையும் இதேப் போன்று உள்ளது. அப்போஸ்தலனாகிய பவுல் இதைக் குறித்து விளக்குகின்றார். அவர், தேவையிலிருப்பது என்ன என்பதை நான் அறிவேன், “நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மன ரம்மியமாயிருக்கக் கற்றுக் கொண்டேன்” (பிலி. 4”11) என்கின்றார். அதன் ரகசியம் என்ன? “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” (வச. 13) என்பதே. நான் ஒரு திருப்தியற்ற வேளையைக் கடந்து சென்ற போது, “அது இங்கே இல்லையென்றால், அது எங்கேயிருக்கிறது?” என்ற வாசகத்தை ஒரு வாழ்த்து அட்டையில் படித்தேன். இந்த வாசகம் என்னை வெகுவாக சிந்திக்க வைத்தது. நான் இங்கே, இப்பொழுது திருப்பதியாக வாழவில்லையெனின், வேறெந்த சூழலில் நான் திருப்தியாக வாழ முடியும் என நினைக்கிறேன்?

இயேசுவைச் சார்ந்து வாழ நாம் எப்படி கற்றுக் கொள்வது? நம்முடைய கவனத்தை அவர் மீது வைப்பதன் மூலமாக. நன்மையானவற்றை அநுபவிப்பதோடு, நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும். உண்மையுள்ள பரமத் தந்தையைப் பற்றி இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும், நம்பிக்கையிலும் பொறுமையிலும் இன்னும் வளர வேண்டும். நம்மைக் குறித்து அல்ல, தேவனைக் குறித்து அறிந்து கொள்வதே வாழ்க்கை என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும், கிறிஸ்துவுக்குள் திருப்தியோடு வாழ கற்றுத் தரும்படி அவரிடம் கேட்க வேண்டும்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும்

சிங்கத்தை எப்பொழுதாகிலும் பிடித்ததுண்டா? என்னுடைய அலைபேசியில் ஒரு விளையாட்டை பதிவிறக்கம் செய்யும்படி, என்னுடைய மகன், என்னைக் கட்டாயப்படுத்தும் வரை நானும் அறிந்திருக்கவில்லை. இந்த விளையாட்டு, டிஜிட்டல் வரைபடம் மூலம் உண்மையான உலகத்தின் பிம்பத்தை உருவாக்கி, அங்கு உன்னருகிலுள்ள வண்ணமிகு மிருகங்களைப் பிடிக்கச் செய்கின்றது. 

மற்ற அலைபேசி விளையாட்டுகளைப் போலல்லாமல், இதனை விளையாடுவதற்கு நடக்க வேண்டியுள்ளது. நீ எங்கெங்குச் சென்றாலும் அவ்விடமெல்லாம் இவ்விளையாட்டுத் தளத்தின் ஒரு பகுதியாக உள்ளது. அதன் விளைவு? நான் அதிகமாக நடக்கின்றேன்! எந்த நேரத்தில் நானும் என்னுடைய மகனும் விளையாடினாலும், அந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தி, எங்களைச் சுற்றியிருக்கிற விட்டில்கள், வெட்டுக்கிளிகள் அனைத்தையும் பிடித்து விடுவோம்.

இத்தகைய விளையாட்டு நம்மைக் கவர்ந்து இழுத்து, நம்மைக் கட்டுப்படுத்தி, நம் கவனம் முழுவதையும் ஈர்க்கிறது. நான் அந்த விளையாட்டை விளையாடியபோது, எனக்குள்ளே, என்னைக் குற்றப்படுத்தி ஒரு கேள்வி எழுந்தது. என்னைச் சுற்றி காணப்படுகின்ற, ஆவிக்குறிய வளர்ச்சியைதரக்கூடிய சந்தர்ப்பங்களை, நான் இத்தனை ஆர்வமுடன் தேடுகின்றேனா?

நம்மைச் சுற்றிலும் தேவனுடைய வேலையைச் செய்ய நாம் கவனமாயிருக்க வேண்டும் என்பதை பவுல் அறிந்திருந்தார். கொலோசெயர் 4 ஆம் அதிகாரத்தில் அவர், வேத வசனத்தைப் பிரசங்கிக்கும்படி, தேவன் வாசலைத் திறக்கும்படி ஜெபிக்கச் சொல்கின்றார் (வச. 4). மேலும் “புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்” (வச. 5) என்கின்றார். கொலோசே சபையினர், பிறரை கிறிஸ்துவுக்குள்ளாக வழிநடத்தும்படி, தங்களுக்குக் கிடைக்கின்ற எந்த சந்தர்ப்பத்தையும் விட்டு விடக் கூடாதென விரும்புகின்றார். அப்படியானால், அதைச் செய்வதற்கு, உண்மையோடு, அவர்களின் தேவைகளைப் பார்க்கவேண்டும், “கிருபை பொருந்தின” வகையில் காரியங்களைச் செய்ய வேண்டும் (வச. 6).

நாம் வாழும் இந்த உலகத்தில், நம்முடைய கவனத்தையும், நேரத்தையும் செலவிட, கற்பனை விலங்குகளின் விளையாட்டும், இன்னும் அநேகக் காரியங்களும் உள்ளன. தேவன் நம்மை இந்த நிஜ உலகத்தில் தைரியமாகக் கடந்து செல்ல அழைக்கின்றார், ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் அவருக்கு நேராக வழிநடத்தும் படி பயன் படுத்திக் கொள்ள அழைக்கின்றார்.

அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்

சண்டை மீன் ஒன்றை எங்களுடைய வீட்டில் இரண்டு ஆண்டுகளாக வளர்த்து வந்தோம். அதனுடைய தொட்டியில் உணவு போடும் போதெல்லாம், என்னுடைய இளைய மகள் குனிந்து, அதனோடு பேசுவாள். அவளுடைய மழலையர் பள்ளியில் செல்லப் பிராணிகளைப் பற்றிய பேச்சு வந்த போது, அதனை தன்னுடையதாக பெருமையுடன் கூறிக் கொண்டாள். ஒரு நாள், அந்த மீன் மரித்துப் போனது, என்னுடைய மகளும் மனமுடைந்து போனாள்.

என்னுடைய மகளின் உணர்வுகளை சற்று நெருக்கமாக கவனித்து, அவளிடம், “அதைக்குறித்து, தேவன் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்” எனத் தெரிவிக்குமாறு என்னுடைய தாயார் கூறினார். தேவன் எல்லாவற்றையும் அறிவார் என்பதை நானும் ஏற்றுக் கொள்கின்றேன், ஆனால், அது எவ்வாறு ஆறுதலளிப்பதாக இருக்க முடியும்? தேவன் நம்முடைய வாழ்வில் நடைபெறுகின்ற காரியங்களைத் தெரிந்திருப்பவர் மட்டுமல்ல, அவர் இரக்கத்தோடு நம்முடைய ஆத்துமாவைப் பார்க்கின்றார், இவைகள் நம் ஆன்மாவை எப்படி பாதிக்கும் என்பதையும் அவர் அறிவார். நம்முடைய வயது, கடந்தகால காயங்கள், பணபற்றாக்குறை ஆகியவற்றின் அடிப்படையில் “சிறிய காரியங்கள்” கூட பெரியதாகத் தோன்றுவதையும் அவர் அறிவார்.  தேவாலயத்தின் காணிக்கைப் பெட்டியில், ஏழை விதவை இரண்டு காசுகளைப் போட்ட போது, அந்தக் காணிக்கையின் அளவையும், அவளுடைய இருதயத்தையும் அவர் அறிந்திருந்தார். அது அவளுக்கு எப்படிப் பட்டது என்பதை அவர் விளக்கினார், “மற்றெல்லாரைப் பார்க்கிலும், இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள். இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டு விட்டாள்” (மாற். 12:43-44) என்றார்.

அந்த விதவை தன்னுடைய சூழ்நிலையைப் பற்றி எதுவும் கூறவில்லை. ஆனால் அவள் கொடுத்த மிகச் சிறிய நன்கொடையை, இயேசு, அவள் செய்த தியாகமாகக் கருதினார். இதேப் போன்றே அவர் நம்முடைய வாழ்வையும் பார்க்கின்றார், அவருடைய அளவற்ற ஞானத்தினால் நாம் ஆறுதலையும் பெற்றுக்கொள்வோம்.

பகிர்ந்து கொள்வதற்காக உடைக்கப்பட்டது

அவன் தன்னுடைய மனைவியை ஒரு கார் விபத்தில் இழ ந்தபின்பு, நாங்கள் இருவரும் ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் சந்தித்துக் கொள்வோம். சில வேளைகளில் அவன் பதில் தர முடியாத கேள்விகளோடு வருவான், சில வேளைகளில் அவனுக்கு ஆறுதலளிக்கும் நினைவுகளோடு வருவான். உடைக்கப்பட்ட இந்த உலகத்தின் தீய விளைவுகளில் ஒன்று தான் இந்த விபத்து என்பதை காலம் கடந்த போது ஏற்றுக் கொண்டான், தேவன் இவற்றின் மத்தியில் கிரியை செய்தார். சில ஆண்டுகளுக்குப் பின்னர், எங்களுடைய ஆலயத்தில், துயரத்தையும், அதனை எப்படி புலம்பித் தீர்ப்பது என்பதையும் குறித்து பாடம் நடத்தினார், சீக்கிரத்தில் அவர், இழப்பைச் சந்தித்து, வருந்தும் மக்களுக்கு ஒரு வழிகாட்டியாகச் சிறந்து விழங்கினார். சில வேலைகளில் தேவனுக்கு கொடுக்கும்படி நம்மிடம் ஒன்றுமில்லை என்று நினைக்கும் போது, தேவன் “போதுமானதாக இல்லை” என்று நாம் கருதுவதை எடுத்து விட்டு, அதைத் “தேவைக்கு அதிகமானதாக” மாற்றுகின்றார். 

ஜனங்களுக்குச் சாப்பிட ஏதாவது கொடுக்கும்படி, இயேசு சீஷர்களிடம் கூறுகின்றார். அவர்களோ தங்களிடம் ஒன்றுமில்லையென மறுக்கின்றனர், இயேசு, அவர்களிடமிருந்த கொஞ்ச உணவைப் பெருகச் செய்து, சீஷர்களிடம் திரும்பி, அந்த அப்பங்களை அவர்களிடம் கொடுத்து, அவர் செய்ய விரும்பியதை நிறைவேற்றி, “நீங்களே அவர்களுக்குப் போஜனம் கொடுங்கள்!” (லூக். 9:13-16) என்றார். கிறிஸ்து அற்புதங்களைச் செய்கிறார், ஆனால், நாம் அதில் ஈடு பட வேண்டுமென அவர் விரும்புகின்றார்.

“நீ எப்படியிருந்தாலும், உன்னிடமிருப்பது எதுவாயிருந்தாலும், அதை என்னுடைய கரத்தில் வை, உடைந்து போன உன்னுடைய வாழ்க்கையை, உன்னுடைய கதையை, உன்னுடைய பெலவீனங்களை, உன்னுடைய தோல்விகளை, உன்னுடைய வேதனைகளை, உன்னுடைய துன்பங்கள் யாவற்றையும் என்னுடைய கரங்களில் வைத்து விடு, அவற்றைக் கொண்டு, நான் செய்யும் காரியங்களைப் பார்த்து நீ அதிசயிப்பாய்” என்று தேவன் நம்மைப் பார்த்துக் கூறுகின்றார். நம்முடைய வெறுமையிலிருந்து நிறைவைக் கொண்டுவர அவராலேயாகும். நம்முடைய பெலவீனங்களின் வழியாக அவருடைய வல்லமையை வெளிப்படுத்த அவராலே கூடும்.