சிங்கத்தை எப்பொழுதாகிலும் பிடித்ததுண்டா? என்னுடைய அலைபேசியில் ஒரு விளையாட்டை பதிவிறக்கம் செய்யும்படி, என்னுடைய மகன், என்னைக் கட்டாயப்படுத்தும் வரை நானும் அறிந்திருக்கவில்லை. இந்த விளையாட்டு, டிஜிட்டல் வரைபடம் மூலம் உண்மையான உலகத்தின் பிம்பத்தை உருவாக்கி, அங்கு உன்னருகிலுள்ள வண்ணமிகு மிருகங்களைப் பிடிக்கச் செய்கின்றது. 

மற்ற அலைபேசி விளையாட்டுகளைப் போலல்லாமல், இதனை விளையாடுவதற்கு நடக்க வேண்டியுள்ளது. நீ எங்கெங்குச் சென்றாலும் அவ்விடமெல்லாம் இவ்விளையாட்டுத் தளத்தின் ஒரு பகுதியாக உள்ளது. அதன் விளைவு? நான் அதிகமாக நடக்கின்றேன்! எந்த நேரத்தில் நானும் என்னுடைய மகனும் விளையாடினாலும், அந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தி, எங்களைச் சுற்றியிருக்கிற விட்டில்கள், வெட்டுக்கிளிகள் அனைத்தையும் பிடித்து விடுவோம்.

இத்தகைய விளையாட்டு நம்மைக் கவர்ந்து இழுத்து, நம்மைக் கட்டுப்படுத்தி, நம் கவனம் முழுவதையும் ஈர்க்கிறது. நான் அந்த விளையாட்டை விளையாடியபோது, எனக்குள்ளே, என்னைக் குற்றப்படுத்தி ஒரு கேள்வி எழுந்தது. என்னைச் சுற்றி காணப்படுகின்ற, ஆவிக்குறிய வளர்ச்சியைதரக்கூடிய சந்தர்ப்பங்களை, நான் இத்தனை ஆர்வமுடன் தேடுகின்றேனா?

நம்மைச் சுற்றிலும் தேவனுடைய வேலையைச் செய்ய நாம் கவனமாயிருக்க வேண்டும் என்பதை பவுல் அறிந்திருந்தார். கொலோசெயர் 4 ஆம் அதிகாரத்தில் அவர், வேத வசனத்தைப் பிரசங்கிக்கும்படி, தேவன் வாசலைத் திறக்கும்படி ஜெபிக்கச் சொல்கின்றார் (வச. 4). மேலும் “புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்” (வச. 5) என்கின்றார். கொலோசே சபையினர், பிறரை கிறிஸ்துவுக்குள்ளாக வழிநடத்தும்படி, தங்களுக்குக் கிடைக்கின்ற எந்த சந்தர்ப்பத்தையும் விட்டு விடக் கூடாதென விரும்புகின்றார். அப்படியானால், அதைச் செய்வதற்கு, உண்மையோடு, அவர்களின் தேவைகளைப் பார்க்கவேண்டும், “கிருபை பொருந்தின” வகையில் காரியங்களைச் செய்ய வேண்டும் (வச. 6).

நாம் வாழும் இந்த உலகத்தில், நம்முடைய கவனத்தையும், நேரத்தையும் செலவிட, கற்பனை விலங்குகளின் விளையாட்டும், இன்னும் அநேகக் காரியங்களும் உள்ளன. தேவன் நம்மை இந்த நிஜ உலகத்தில் தைரியமாகக் கடந்து செல்ல அழைக்கின்றார், ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் அவருக்கு நேராக வழிநடத்தும் படி பயன் படுத்திக் கொள்ள அழைக்கின்றார்.