மீண்டும் இணைதல்
இராணுவத்திலிருக்கும் தன்னுடைய தந்தையிடமிருந்து வ ந்த பெட்டியை, ஆர்வத்தோடு திறந்தான் அந்தச் சிறுவன். அவனுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு, அவனுடைய தந்தையால் வரமுடியாது என்பது அவனுக்குத் தெரியும். அந்தப் பெட்டிக்குள்ளே மற்றொரு பெட்டி, அதற்குள்ளே மற்றொரு பெட்டி இரு ந்தது. அதனுள்ளே ஒரு காகிதத்தில், “ஆச்சரியம்” என்றிருந்தது. குழப்பமடைந்தவனாய் அச்சிறுவன் மேலே நோக்கிப் பார்த்தான், அவனுடைய தந்தை உள்ளே நுழைகின்றார். ஆனந்தக் கண்ணீரோடு, தந்தையின் கரங்களில் பாய்ந்தான், ஆச்சரியத்தில், “அப்பா, நான் உங்களை நினைத்தேன், நான் உங்களை நேசிக்கிறேன்!” என்றான்.
அந்தக் கண்ணீரோடு கூடிய மகிழ்ச்சி நிறைந்த சந்திப்பு, வெளிப்படுத்தல் 21ஆம் அதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ளபடி, அவருடைய பிள்ளைகள் தேவனை முகமுகமாய், புதிய வானம், புதிய பூமியில் சந்திக்கின்ற அந்த மகிமை பொருந்திய கணத்தை எனக்கு நினைவு படுத்தியது. “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்”, இனிமேல் துக்கமுமில்லை, வேதனையுமில்லை, ஏனெனில் நம்முடைய பரலோகத் தந்தை எப்பொழுதும் நம்மோடு இருப்பார். வெளிப்படுத்தல் 21ல் குறிப்பிட்டுள்ள ஒரு பெருஞ்சத்தம் தெரிவித்ததைப் போன்று, “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்” (வச. 3-4).
இயேசுவைப் பின்பற்றுபவர்கள், தேவனுடைய மென்மையான அன்பையும், அவர் தரும் மகிழ்ச்சியையும் அநுபவித்துக் கொண்டிருக்கின்றனர். 1 பேதுரு 1:8 கூறுவது போல் “அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூருங்கள்”. நம்மை நேசித்து, நம்மை வரவேற்கும்படி, ஏக்கத்தோடு தன்னுடைய கரங்களை விரித்தவராய் காத்திருக்கும் நம் தேவனை நாம் முகமுகமாய் சந்திக்கும் போது, நம் உள்ளத்தில் பொங்கி வழியும் அந்த வியத்தகு மகிழ்ச்சியை உன்னால் கற்பனை செய்ய முடிகிறதா!
விரக்தியின் காட்சி
சமீப காலத்தில் ஒரு புகைப்படக்காரர், இருதயத்தை பிழியச்செய்யும் ஒரு படத்தை எடுத்தார், அந்தப் படத்தில் ஒரு விவசாயி, மனமுடைந்தவராய் தன்னுடைய வறண்டு, வெடித்துக் காணப்படும் வயலில் தனிமையில் உட்கார்ந்திருக்கின்றார். இந்தப் புகைப் படம், அநேகப் பத்திரிகைகளின் முகப்புப் படமாக வெளி வந்தது. வறட்சியினால், பயிர்கள் காய்ந்து போன நிலையில், விவசாயிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் அவல நிலையைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்ளும்படி இப்படம் வெளியிடப்பட்டது.
விரக்தியின் மற்றொரு காட்சியை, புலம்பலின் புத்தகம் நமக்குக் காட்டுகின்றது. எருசலேம் நகரம் அழிக்கப்பட்ட போது, யூதாவின் நிலையை நமக்குக் காட்டுகின்றது. நேபுகாத்நேச்சாரின் படைகள் இந்தப் பட்டணத்தை அழிப்பதற்கு முன்பு, முற்றிக்கை போட்டிருந்ததால், மக்கள் பட்டினியால் அவதியுற்றனர் (2 இரா. 24:10-11). பல ஆண்டுகளாக இந்த மக்கள் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருந்ததே இந்த உபத்திரவத்திற்கெல்லாம் காரணம். புலம்பல் புத்தகத்தை எழுதியவர், தன்னுடைய ஜனங்களுக்காக தேவனை நோக்கிக் கதறுகின்றார் (புல. 2:11-12).
சங்கீதம் 107ஐ எழுதியவரும் இஸ்ரவேலரின் சரித்திரத்தில் வந்த ஒரு நம்பிக்கையற்ற நேரத்தைப் பற்றி குறிப்பிடுகின்றார் (இஸ்ரவேலர் வனாந்தரத்தில் அலைந்து திரிந்த போது, (வச. 4-5), கடினமான வேளைகளில் ஏறெடுக்கப்படும் ஒரு செயலுக்கு நேராக அவர்களின் கவனம் திருப்பப் படுகின்றது. அவர்கள் “தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்” (வச. 6), என்ன ஆச்சரியமான பதில், தேவன் “அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார்”.
நம்பிக்கையிழந்த நிலையா? அமைதியாக இராதே. தேவனை நோக்கிக் கதறு, தேவன் கேட்கின்றார், உனக்கு நம்பிக்கையைத் தரும்படி அவர் காத்திருக்கின்றார். அவர் நம்முடைய கடின சூழலை விட்டு நம்மை ஒவ்வொரு முறையும் விடுவியாமல் போனாலும், அவருடைய பிரசன்னம் எப்பொழுதும் நம்மோடிருக்கும்.
மகிழ்ச்சிகரமாக
கடற்காகம் (sea gull) ஒன்று, தன்னுடைய உடைந்து போன காலைச் சுகப்படுத்த உதவிய மனிதனை, பன்னிரண்டு ஆண்டுகளாக அனுதினமும் சந்தித்து வருகின்றது. காலுடைந்த அந்தப் பறவைக்கு நாய் பிஸ்கெட்டுகளைக் கொடுத்து, தன்னிடம் வரவழைத்து, சிகிச்சையளித்து, அதன் காலைச் சரியாக்கினார், அதனைப் பழைய நிலைக்குக் கொண்டுவந்தார், ஜாண். இந்தப் பட்டணத்தின் சிறிய கடற்கரைக்கு, இப்பறவை கோடைகாலத்தில் மட்டுமே வந்தாலும், அது ஜாணை எளிதில் அடையாளம் கண்டுபிடித்து விடும். ஒவ்வொரு நாளும் ஜாண் கடற்கரைக்கு வந்ததும், அப்பறவை அவனிடம் வந்துவிடும், சாதாரணமாக அது வேறு எவரிடமும் செல்வதில்லை. அது ஒரு வினோதமான உறவை ஜாணிடம் காட்டியது.
இந்த கடற்பறவைக்கும் ஜாணுக்கும் இருந்த இந்த உறவு, மனிதனுக்கும் பறவைக்கும் இடையேயிருந்த மற்றொரு விசித்திர உறவை எனக்கு நினைவுபடுத்துகின்றது. தேவனுடைய தீர்க்கதரிசியான எலியா, ஒரு பஞ்சத்தின் போது, வனாந்தரத்தில், கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக் கொண்டிருந்த போது, தேவன் அவனிடம், “அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன்” (1 இரா. 17:3-4). என்றார். கடினமான சுற்றுப் புறமும், சூழல்களும் இருந்தபோதும் எலியாவிற்குத் தேவையான தண்ணீரையும் ஆகாரத்தையும் தேவன் கொடுத்தார். காகங்களுக்கு உணவைக் கொடுக்கக் கூடிய பழக்கம் கிடையாது, அவை தனக்குக் கிடைத்தவற்றை ஒளித்து வைத்து தின்னக்கூடியன, ஆயினும் அவை எலியாவிற்கு முழு உணவைக் கொண்டு வந்து கொடுத்தன.
ஒரு மனிதன் பறவைக்கு உதவியது நம்மை ஆச்சரியப்படுத்த மாட்டாது. ஆனால் பறவைகள் ஒரு மனிதனுக்கு “விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்தது” எனின், அது தேவனுடைய வல்லமையாலும் பாதுகாப்பால் மட்டுமே முடியும் (வ.6). எலியாவை போல நாமும் நம்முடைய அனுதின தேவைகளுக்கு தேவனையே நம்பி வாழக் கற்றுக் கொள்வோம்.
தாமதிப்பதும் ஒரு காரணத்திற்காக
பிபிசி வீடியோ காட்சிகளில் வரும் பாலூட்டிகளின் வாழ்க்கை முறை என்ற தொடரில் வரும் தொகுப்பாளர் டேவிட் அட்டன்பரோ என்பவர், வேடிக்கையான முகபாவனையும், கால்களில் மூன்றுவிரல்களையும் கொண்ட ஸ்லாத் கரடியைப் பார்க்கும்படி ஒரு மரக்கிளையில் ஏறினார். உலகிலேயே மிகவும் மெதுவாக இயங்கக் கூடிய விலங்கினமான இந்தப் பாலூட்டியை நேருக்கு நேராகச் சந்தித்தார். “பூ.!.” என்ற சத்தத்தை எழுப்பி, அதனை வாழ்த்தினார், ஆனால், அவருக்கு எந்த ஒரு பதிலும் அதனிடமிருந்து கிடைக்கவில்லை. இந்த மூன்று கால்விரல்களைக் கொண்ட ஸ்லாத் விலங்கினங்கள் மிகவும் மெதுவாக இயங்கக் கூடியவை, இவை மிகவும் சத்து குறைவானதும், சீக்கிரத்தில் செறிக்க கூடாததுமான இலைகளையே உண்டு வாழ்கின்றன என்பதாக அவர் விளக்கினார்.
இஸ்ரவேல் ஜனங்களின் சரித்திரத்தைப் பின்னோக்கிப் பார்க்கும் போது, நெகேமியா, தாமதிப்பதற்கு மற்றொரு எடுத்துக் காட்டையும், விளக்கத்தையும் தருகின்றார் 9:9-21), ஆனால் இது வேடிக்கையானதல்ல. தாமதிப்பதற்கு, நம்முடைய தேவனாகிய கர்த்தரே ஒரு முழுமையான எடுத்துக் காட்டு, அதுவும் கோபப்படுவதற்கு அவர் தாமதிக்கின்றார் என நெகேமியா கூறுகின்றார். தேவன் தம்முடைய பிள்ளைகளைப் பாதுகாத்தார், நல் வாழ்வு தரும் கட்டளைகளைக் கொடுத்தார், எகிப்தை விட்டுப் புறப்பட்ட அவருடைய ஜனங்களின் பிரயாணத்தின் போது, அவர்களைத் தாங்கினார், அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணப் பட்ட தேசத்தைக் கொடுத்தார் (வச. 9-15) என்பதை நினைவுகூருகின்றார். இஸ்ரவேலர் தொடர்ந்து கலகம் பண்ணிக்கொண்டிருந்தாலும் (வச. 16), தேவன் அவர்கள்மீதுள்ள நேசத்தைக் கைவிடவில்லை. அதனாலேயே நெகேமியா நம்மைப் படைத்தவரைக் குறித்து, “வெகுவாய் மன்னிக்கிறவரும், இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மகா கிருபையும் உள்ள தேவன்” என்று குறிப்பிடுகின்றார் (வ.17). அவருடைய ஜனங்களின் முறுமுறுப்பு, அவநம்பிக்கை, அவிசுவாசத்தின் மத்தியிலும் நாற்பது ஆண்டுகள் தேவன் அவர்களின் மீது பொறுமையாய் இருக்கக் காரணம் என்ன?(வ.21). அது தேவனுடைய “மிகுந்த மன உருக்கம்” அல்லவோ (வச. 19).
நாம் எப்படி இருக்கின்றோம்? நாம் கோபம் மிகுந்த மனநிலையில் இருப்போமானால், அது நம்முடைய இரக்கமற்ற இருதயத்தைக் காட்டுகின்றது. ஆனால் தேவனுடைய பெருந்தன்மையான இருதயம், நாமும் பொறுமையோடு வாழவும், அவரைப் போன்று நேசிக்கவும் கற்றுத்தருகின்றது.
புத்தகத்தில் ஆழ்ந்த இன்பம்
சுன்டொகு (Tsundoku) என்ற ஜப்பானிய வார்த்தை எனக்கு மிகவும் தேவையானது! இது நாம் இன்னமும் வாசிக்காமல், படுக்கைக்கு அருகிலுள்ள மேசையில் சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களைக் குறிக்கும். நாம் கற்றுக்கொள்ளத் தேவையானவற்றைப் புத்தகங்கள் கொடுக்கின்றன, அவை, நம்மை வேறொரு காலத்திற்கும் இடத்திற்கும் கொண்டுசெல்பவை. அவை தரும் மகிழ்ச்சியையும் உட்கருத்துகளையும் பெற்றுக் கொள்வதற்கு விரும்புகின்றேன், ஆகவே தான் நான் இவற்றை வைத்துள்ளேன்.
புத்தகங்கள் நமக்கு மகிழ்ச்சியைத் தருவதோடு உதவியாகவும் இருக்கின்றன என்ற உண்மை எல்லா புத்தகங்களுக்கும் மேலான புத்தகமான வேதபுத்தகத்திற்கு மிகப் பொருத்தமானது. இஸ்ரவேல் ஜனங்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு அழைத்துச் செல்லும் பொறுப்பைப் பெற்ற புதிய தலைவனான யோசுவாவை தேவன் இந்த நியாயப்பிரமாண புத்தகத்தை ஆழ்ந்து கற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்துவதைப் பார்க்கின்றோம் (யோசு. 1:8).
யோசுவா சந்திக்க இருக்கின்ற கஷ்டங்களை அறிந்த தேவன், அவனிடம், “நான் உன்னோடும் இருப்பேன்” (வச. 5) என்கின்றார். யோசுவா தேவனுடைய நியாயப் பிரமாணங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் போது, அவருடைய உதவி அவனுக்குக் கிடைக்கும். தேவன் அவனிடம், “இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயை விட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின் படியெல்லாம் நீ செய்ய கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக” (வச. 8) என்றார். யோசுவா நியாயப்பிரமாணப் புத்தகத்தை வைத்திருந்த போதிலும், அதன் உட்கருத்தையும், தேவன் யார் என்பதையும், அவர் தன்னுடைய ஜனங்களுக்கு வைத்திருக்கின்ற நோக்கத்தையும் அறிந்துகொள்ளும்படி, அதை உண்மையாய் தேட வேண்டுமென தேவன் விரும்புகின்றார்.
உன் வாழ்நாட்களைக் கடந்து செல்வதற்கு உனக்கு அறிவுரை தேவையா? சத்தியம் அவசியமா? ஊக்கம் வேண்டுமா? வேதபுத்தகத்தை வாசிக்க நேரம் செலவிட்டு, அதற்குக் கீழ்ப்படிவாயானால், வாழ்விற்குத் தேவையான பெலனைக் கொடுக்கும் வாசனை நிரம்பிய வார்த்தைகளை அதன் பக்கங்களில் காண்பாய் (2 தீமோ. 3:16,17).