கடற்காகம் (sea gull) ஒன்று, தன்னுடைய உடைந்து போன காலைச் சுகப்படுத்த உதவிய மனிதனை, பன்னிரண்டு ஆண்டுகளாக அனுதினமும் சந்தித்து வருகின்றது. காலுடைந்த அந்தப் பறவைக்கு நாய் பிஸ்கெட்டுகளைக் கொடுத்து, தன்னிடம் வரவழைத்து, சிகிச்சையளித்து, அதன் காலைச் சரியாக்கினார், அதனைப் பழைய நிலைக்குக் கொண்டுவந்தார், ஜாண். இந்தப் பட்டணத்தின் சிறிய கடற்கரைக்கு, இப்பறவை கோடைகாலத்தில் மட்டுமே வந்தாலும், அது ஜாணை எளிதில் அடையாளம் கண்டுபிடித்து விடும். ஒவ்வொரு நாளும் ஜாண் கடற்கரைக்கு வந்ததும், அப்பறவை அவனிடம் வந்துவிடும், சாதாரணமாக அது வேறு எவரிடமும் செல்வதில்லை. அது ஒரு வினோதமான உறவை ஜாணிடம் காட்டியது.

இந்த கடற்பறவைக்கும் ஜாணுக்கும் இருந்த இந்த உறவு, மனிதனுக்கும் பறவைக்கும் இடையேயிருந்த மற்றொரு விசித்திர உறவை எனக்கு நினைவுபடுத்துகின்றது. தேவனுடைய தீர்க்கதரிசியான எலியா, ஒரு பஞ்சத்தின் போது, வனாந்தரத்தில், கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக் கொண்டிருந்த போது, தேவன் அவனிடம், “அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன்” (1 இரா. 17:3-4). என்றார். கடினமான சுற்றுப் புறமும், சூழல்களும் இருந்தபோதும் எலியாவிற்குத் தேவையான தண்ணீரையும் ஆகாரத்தையும் தேவன் கொடுத்தார். காகங்களுக்கு உணவைக் கொடுக்கக் கூடிய பழக்கம் கிடையாது, அவை தனக்குக் கிடைத்தவற்றை ஒளித்து வைத்து தின்னக்கூடியன, ஆயினும் அவை எலியாவிற்கு முழு உணவைக் கொண்டு வந்து கொடுத்தன.

ஒரு மனிதன் பறவைக்கு உதவியது நம்மை ஆச்சரியப்படுத்த மாட்டாது. ஆனால் பறவைகள் ஒரு மனிதனுக்கு “விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்தது” எனின், அது தேவனுடைய வல்லமையாலும் பாதுகாப்பால் மட்டுமே முடியும் (வ.6). எலியாவை போல நாமும் நம்முடைய அனுதின தேவைகளுக்கு தேவனையே நம்பி வாழக் கற்றுக் கொள்வோம்.