ஒளியில் நடத்தல்
எங்களுடைய காடுகளடர்ந்த கிராமத்தை இருள் சூழ்ந்தது. நிலாவும் மறைந்தது. வானத்தில் ஆங்காங்கே மின்னல் பளிச்சிட்டது. இடி முழக்கத்தோடு புயலும் மழையும் ஆரம்பித்தது. நான் சிறியவனாக இருந்தபடியால், விழித்துக் கொண்டு பல வகையான பயங்கர பிசாசுகள் என்னை நோக்கிப் பாய்ந்து வருவதைப் போன்று கற்பனை செய்து பயந்தேன். விடிந்த போது அந்தச் சப்தங்கள் எல்லாம் மறைந்துவிட்டன. சூரியன் உதித்தது, அமைதி திரும்பியது. பறவைகள் மகிழ்ச்சியோடு பாட ஆரம்பித்தன. இரவின் பயங்கர இருளுக்கும் பகல் வெளிச்சத்தின் மகிழ்ச்சிக்குமிடையேயுள்ள வேறுபாடு மிகவும் குறிப்பிடத்தக்கதாயிருந்தது.
சீனாய் மலையில் மின்னலையும், இடி முழக்கங்களையும் எக்காள சத்தத்தையும் கேட்டபோது இஸ்ரவேலர் பயந்து பின்வாங்கி மறைந்துகொள்ள முயற்சிக்கின்றனர் (யாத். 20:18-19) அவர்களுக்கு தேவனுடைய பிரசன்னமும், அவருடைய அன்பின் ஈவாகிய நியாயப்பிரமாணமும், பயங்கரமாகவும், கண்களால் காணக் கூடாதபடியும் இருந்தது. ஏனெனில், பாவ மனிதராகிய இஸ்ரவேலர் தேவன் எதிர்பார்த்த நீதியின்படி வாழவில்லை. அவர்களுடைய பாவம் அவர்களை இருளுக்கும் பயத்துக்கும் இழுத்துச் சென்றது (எபி. 12:18-21).
ஆனால், தேவன் ஒளியாயிருக்கிறார். அவரில் எவ்வளவேனும் இருளில்லை (1 யோவா. 1:5). எபிரெயர் 12ல் சீனாய் மலை என்பது தேவனுடைய பரிசுத்தத்தையும், நம்முடைய கீழ்படியாமையின் பழைய வாழ்வையும் குறிக்கின்றது. ஆனால், “சீனாய் மலையின் அழகு புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய" இயேசுவின் கிருபையையும் விசுவாசிகளுக்குத் தரப்படுகின்ற புதிய வாழ்வையும் குறிக்கும்.
இயேசுவைப் பின்பற்றுகின்ற ஒவ்வொருவரும் “இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்" (யோவா. 8:12) அவர் மூலமாக நம்முடைய பழைய வாழ்வின் இருளை அகற்றி, புதிய வாழ்வில், ஒளியில் மகிழ்ச்சியோடு நடந்து அவருடைய இராஜ்;ஜியத்தின் அழகில் மகிழ்ந்து கொண்டாடுவோம்.
இறுக மூடப்பட்ட கண்கள்
தான் அதனைச் செய்திருக்கக் கூடாதென்று என்னுடைய சகோதரனின் மகனுக்குத் தெளிவாகக் தெரியும். தான் செய்தது தவறு என்பதை அவன் நன்கு புரிந்த கொண்டானென நான் தெளிவாகத் தெரிந்து கொண்டேன். அது அவனுடைய முகத்திலேயே தெரிந்தது. அவன் செய்த காரியத்தைக் குறித்து அவனோடு விவாதிக்க அமர்ந்தபோது, அவன் தன் கண்களை மூடிக்கொண்டு, கசக்க ஆரம்பித்தான். அவன் சிறுபிள்ளைத்தனமாகச் செயல்பட்டான். தன் கண்களை மூடிக் கொண்டதால் என்னைக் காண முடியவில்லை, ஆகையால் நானும் அவனைக் காண முடியாதென எண்ணினான். அவன் தன்னை மறைத்துக் கொண்டால், எங்களுடைய விவாதத்தையும் அதன் விளைவுகளையும் தவிர்த்து விடலாம் என எண்ணினான்.
நான் அவனை அந்தக் கணத்தில் பார்க்க முடிந்ததால் மகிழ்ச்சியடைந்தேன். அவனுடைய செயலை நான் காணாதது போல விட்டு விட முடியாதாகையால், நாங்கள் அதனைக் குறித்தப் பேசியேயாக வேண்டும். எனவே, எங்களுக்கிடையே எந்த தடையும் வர நான் விரும்பவில்லை. நான் அவனை எவ்வளவு நேசிக்கிறேன், நான் அவனை முற்றிலும் மன்னிக்க ஆவலாயிருக்கிறேன் என்பதை, அவன் என் முகத்தை முழுவதும் பார்த்து தெரிந்துகொள்ள விரும்பினேன். அப்பொழுதுதான் எனக்குள் அந்த சிந்தனை வந்தது. ஏதேன் தோட்டத்தில் ஆதாமும், ஏவாளும் தேவனுடைய நம்பிக்கையை இழந்தபோது தேவன் எப்படி உணர்ந்திருப்பார் என்பதைக் குறித்து சிறிது நினைக்கத் தோன்றியது. தங்கள் தவற்றை உணர்ந்து அவர்கள் தேவனுடைய சமூகத்தினின்று விலகி ஒளிந்து கொண்டனர் (ஆதி. 3:10) நான் எனது சகோதரனின் மகனைக் கண்டது போல தேவனும் அவர்களைத் தெளிவாகக் கண்டார்.
நாமும் சில தவறுகளைச் செய்துவிட்டோமென உணரும் போது அதனால் வரும் விளைவுகளைச் சந்திக்க விரும்புவதில்லை. நாமும் அந்த இடத்தை விட்டு ஓடிவிடவோ, அதனை மறைத்து விடவோ அல்லது உண்மைக்கு நம் கண்களை மூடிக்கொள்ளவோ எண்ணுவதுண்டு. தேவன் தம்முடைய நீதிக்கு முன்பாக நம்மை கணக்குக் கொடுக்கும்படி நம்மைத் தேடுகின்றார். நம்மைக் காண்கின்றார். ஏனெனில், அவர் நம்மை நேசிக்கின்றார். இயேசு கிறிஸ்துவின் மூலம் நமக்கு மன்னிப்பைக் கொடுக்கின்றார்.
கேட்பது நல்லது
எந்த திசை, எந்த இடம் என்பதை எளிதாகக் கண்டுபிடிக்கக் கூடிய திசையறியும் திறனுடையவர் என் தந்தை. சில வேளைகளில் நான் பொறாமைப்படக் கூடிய அளவிற்கு அவருடைய உள்ளுணர்வு அவருக்கு வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு திசைகளைச் சரியாகக் காட்டும். ஒருவேளை, அவர் பிறக்கும்போதே இத்தகைய உள்ளுணர்வோடு பிறந்திருப்பார் போலும். எப்பொழுதும் சரியாகவே சொல்லும் அவரும் ஒரு நாள் இரவு பாதை தெரியாமல் தடுமாறினார்.
அந்த இரவு என் தந்தை தன்னுடைய பாதையை தவறவிட்டார். அவரும் என்னுடைய தாயாரும் எங்களுக்கு அறிமுகம் இல்லாத ஓரிடத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்வு முடிந்து, இரவு திரும்பினர். நெடுஞ்சாலையை அடைவதற்கான வழியைத் தான் கண்டுபிடித்து விடமுடியும் என்ற எண்ணத்தோடு அவர்கள் திரும்பினர். ஆனால், முடியவில்லை. அவ்விடத்திலேயே சுற்றி வந்து, குழப்பமுற்று, விரக்தியடைந்தனர்.
“அது கடினமானது தான். ஆனால், உங்களுடைய செல்போனின் உதவியால் திசையைக் கண்டு பிடித்துவிடலாம். எல்லாம் சரியாகிவிடும்” என என்னுடைய தாயார் ஊக்கமளித்துள்ளார். எனக்குத் தெரிந்த அளவில், என்னுடைய எழுபத்தாறு வயது தந்தை, அவருடைய வாழ்வில் முதல் முறையாக செல்போனில் கேட்டு திசையைத் தெரிந்துகொள்ள முயற்சித்திருக்கின்றார்.
சங்கீதக்காரன் நிறைய அனுபவங்கள் கொண்ட ஒரு மனிதன். ஆனாலும், தாவீது தனது ஆவியிலும் சிந்தையிலும் கலங்கியிருந்த வேளைகளைக் குறித்துச் சில சங்கீதங்கள் விளக்குகின்றன. சங்கீதம் 143 அத்தகைய வேளைகளில் எழுதப்பட்டது. அந்தப் பெரிய அரசனின் உள்ளம் பயத்தால் சோர்ந்து விட்டதைக் காட்டுகின்றது (வச. 4). அவர் பிரச்சனைகளுக்குள் இருக்கின்றார் (வச. 11) எனவே அவர் காத்திருந்து ஜெபிக்கின்றார். “நான் நடக்க வேண்டிய வழியை எனக்குக் காண்பியும் (வச. 8) என்று கேட்கின்றார். ஒரு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளக் கூடிய நாட்களுக்கு வெகுமுன்னர், சங்கீதக்காரன் தேவனை நோக்கிக் கதறுகின்றார். "உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்" (வச. 8) என ஜெபிக்கின்றார்.
கர்த்தர், "என்னுடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷன்" என்று தாவீதைக் குறித்து (1 சாமு. 13:14) சொல்லியுள்ளார். அவரே சிலவேளைகளில் கைவிடப்பட்டவராக எண்ணும்போது, நாம் தேவனை நோக்கி ஒவ்வொரு நாளும் அவருடைய வழிநடத்துதலுக்காக கெஞ்சவேண்டியது எத்தனை அவசியம்.
புது வருடமும், புது முன்னுரிமைகளும்
“செல்லோ” என்ற இசைக்கருவியை வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமென அநேக நாட்களாக ஆசைப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். ஆனால், எனக்கு அதற்கான நேரம் ஒதுக்கமுடியவில்லை. நான் பரலோகத்தில், ஒருவேளை இந்தக் கருவியை நேர்த்தியாக வாசிக்கக் கூடும். தேவன் என்னுடைய நேரத்தை, அவருக்கு ஊழியம் செய்யும்படி எப்படியெல்லாம் செலவிட திட்டமிட்டிருக்கின்றாரோ அதற்கே அதிக கவனம் செலுத்தும்படி விரும்புகிறேன்.
நம்முடைய வாழ்வு மிகவும் குறுகியது. அந்த நாட்கள் முடிவதற்குள், இப்புவியில் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள நேரத்தை மிக அதிகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படியானால் அதன் அர்த்தமென்ன?
சாலமோன் ராஜா வாழ்வின் நோக்கத்தை விளக்க முன்வரும்போது, இரு காரியங்களைக் குறித்து விளக்குகின்றார். முதலாவது நாம் நம் வாழ்வை நம்மால் முடிந்தவரை பயனுள்ள வகையில் வாழவேண்டும். அதாவது தேவன் நாம் அனுபவிக்கும்படி கொடுத்துள்ள உணவு, தண்ணீர் (பிர. 9:7) உடை, வாசனை திரவியங்கள் (வச. 8) திருமணம் (வச. 9) போன்ற தேவன் தரும் நன்மையான ஈவுகள் அனைத்தையும் அனுபவி. சேல்லோவை இசைக்கக் கற்றுக் கொள்வதும் இதில் அடங்கும்.
அவருடைய இரண்டாவது பரிந்துரை என்னவெனின், கடின உழைப்பு (வச. 10). வாழ்க்கையில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இங்கு அதிக வேலைகள் நிறைவேற்றப்படும்படி கிடக்கின்றன. தேவன் தரும் வாய்ப்புகளை நாம் பயன்படுத்தி, அவருடைய ஞானத்தைத் தேடி கண்டுபடித்து, அவருடைய வேலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, நம்முடைய தாலந்துகளை தேவனுக்குப் பணிசெய்யும்படி பயன்படுத்த வேண்டும்.
வாழ்வு என்பது தேவன் தரும் அற்புத ஈவு. அவர் அனுதினமும் நமக்குத் தருகின்ற ஆசீர்வாதங்களிலும், நம்முடைய அர்த்தமுள்ள ஊழியங்களிலும் நாம் உண்மையான மகிழ்ச்சியைக் கண்டடையும் போது, நாம் தேவனைக் கனப்படுத்துகின்றோம்.