தான் அதனைச் செய்திருக்கக் கூடாதென்று என்னுடைய சகோதரனின் மகனுக்குத் தெளிவாகக் தெரியும். தான் செய்தது தவறு என்பதை அவன் நன்கு புரிந்த கொண்டானென நான் தெளிவாகத் தெரிந்து கொண்டேன். அது அவனுடைய முகத்திலேயே தெரிந்தது. அவன் செய்த காரியத்தைக் குறித்து அவனோடு விவாதிக்க அமர்ந்தபோது, அவன் தன் கண்களை மூடிக்கொண்டு, கசக்க ஆரம்பித்தான். அவன் சிறுபிள்ளைத்தனமாகச் செயல்பட்டான். தன் கண்களை மூடிக் கொண்டதால் என்னைக் காண முடியவில்லை, ஆகையால் நானும் அவனைக் காண முடியாதென எண்ணினான். அவன் தன்னை மறைத்துக் கொண்டால், எங்களுடைய விவாதத்தையும் அதன் விளைவுகளையும் தவிர்த்து விடலாம் என எண்ணினான்.

நான் அவனை அந்தக் கணத்தில் பார்க்க முடிந்ததால் மகிழ்ச்சியடைந்தேன். அவனுடைய செயலை நான் காணாதது போல விட்டு விட முடியாதாகையால், நாங்கள் அதனைக் குறித்தப் பேசியேயாக வேண்டும். எனவே, எங்களுக்கிடையே எந்த தடையும் வர நான் விரும்பவில்லை. நான் அவனை எவ்வளவு நேசிக்கிறேன், நான் அவனை முற்றிலும் மன்னிக்க ஆவலாயிருக்கிறேன் என்பதை, அவன் என் முகத்தை முழுவதும் பார்த்து தெரிந்துகொள்ள விரும்பினேன். அப்பொழுதுதான் எனக்குள் அந்த சிந்தனை வந்தது. ஏதேன் தோட்டத்தில் ஆதாமும், ஏவாளும் தேவனுடைய நம்பிக்கையை இழந்தபோது தேவன் எப்படி உணர்ந்திருப்பார் என்பதைக் குறித்து சிறிது நினைக்கத் தோன்றியது. தங்கள் தவற்றை உணர்ந்து அவர்கள் தேவனுடைய சமூகத்தினின்று விலகி ஒளிந்து கொண்டனர் (ஆதி. 3:10) நான் எனது சகோதரனின் மகனைக் கண்டது போல தேவனும் அவர்களைத் தெளிவாகக் கண்டார்.

நாமும் சில தவறுகளைச் செய்துவிட்டோமென உணரும் போது அதனால் வரும் விளைவுகளைச் சந்திக்க விரும்புவதில்லை. நாமும் அந்த இடத்தை விட்டு ஓடிவிடவோ, அதனை மறைத்து விடவோ அல்லது உண்மைக்கு நம் கண்களை மூடிக்கொள்ளவோ எண்ணுவதுண்டு. தேவன் தம்முடைய நீதிக்கு முன்பாக நம்மை கணக்குக் கொடுக்கும்படி நம்மைத் தேடுகின்றார். நம்மைக் காண்கின்றார். ஏனெனில், அவர் நம்மை நேசிக்கின்றார். இயேசு கிறிஸ்துவின் மூலம் நமக்கு மன்னிப்பைக் கொடுக்கின்றார்.