Archives: ஜனவரி 2019

சுவிகாரப் புத்திரன்

சமுதாயத் தொண்டு செய்யும் ஒருவர் வீடற்ற குழந்தைகளுக்கென ஓர் இல்லம் கட்டியபோது, நான் மிகவும் மகிழ்ந்தேன். அத்தோடு நின்றுவிடாமல், அந்த மனிதன் அதையும் விட மேலாக அப்படிப்பட்ட வீடற்ற குழந்தைகளிலொன்றைத் தனக்குச் சொந்தமாக தத்தெடுத்துக் கொண்டபோது மெய்சிலிர்த்துப் போனோன். அநேக அனாதைக் குழந்தைகள் தங்களை ஆதரிக்க ஒரு வளர்ப்புத் தந்தை கிடைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியடைவர். ஆனால், அந்த வளர்ப்புத் தந்தை தங்களுக்கு உதவுபவர் மட்டுமல்ல, தங்களைச் சொந்தமாக ஏற்றுக் கொள்கிறாரென கேட்கும்போது, அது அவர்களுக்கு எப்படியிருக்கும்?

நீயும் தேவனுடைய பிள்ளையாயிருந்தால், அது உனக்குச் கிடைத்த ஈவு என்பதை
நீ அறிந்திருக்கின்றாய். வெறுமனே, தேவன் நம்மை நேசித்ததினால் தம்முடைய ஒரேபேறான குமாரனை, "நாம் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படி" (யோவா. 3:16). அனுப்பியிருந்தால், அது நமக்குப் போதுமானது. நாம் தேவனைக் குறைகூறவும் முடியாது. ஆனால், அது தேவனுக்குப் போதுமானதாகயில்லை. “நம்மை மீட்டுக் கொள்ளத்தக்கதாக" தேவன் தம்முடைய குமாரனை அனுப்பினார். அத்தோடு அது முடிந்து விடவும் இல்லை. ஆனால், “நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி" (கலா. 4:4-5) தேவன் தம்முடைய குமாரனை அனுப்பினார்.

அப்போஸ்தலனாகிய பவுல் நம்மை “தேவனுடைய புத்திரர்" என்றே குறிப்பிடுகின்றார். ஏனெனில், அவருடைய நாட்களில் மகனுக்குத்தான் தந்தையின் சுதந்திரத்தையடையும் உரிமையிருந்தது. எந்த மனுஷனும், மனுஷியும் இயேசுவின் பேரில் விசுவாசமாயிருந்தால் அவர்களெல்லாரும் தேவனுடைய பிள்ளைகளென்கிற சுதந்தரத்தைப் பெறுகின்றோம் என பவுல் கூறுகின்றார் (வச. 7).

தேவன், வெறுமனே உன்னை மீட்கிறவர் மட்டுமல்ல, அவர் உன்னை நேசிக்கின்றார், உன்னைத் தன்னுடைய சொந்த குடும்பத்தில் சேர்த்துக் கொள்கின்றார். தன்னுடைய நாமத்தை உன்மேல் எழுதுகின்றார் (வெளி. 3:12). உன்னைத் தன்னுடைய பிள்ளையெனப் பெருமையாகக் கூறுகின்றார். இதைவிட மேலாக அன்புகூர நமக்கு யாரிருக்கின்றார்கள்? தேவனை விட முக்கியமானவராக நமக்கு யாரிருக்கக் கூடும்? நீ தேவனால் ஆசீர்வதிக்கப்படுவதோடு, அவருடைய பிள்ளையாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டாய உன் தந்தை உன்னை நேசிக்கின்றார்.

பாசிகளும், நுண்பாசிகளும்

“நுண்பாசி என்பது என்ன?" என நான் என் சிநேகிதியைக் கேட்டேன். நான் அவளுடைய தோள்மீது சாய்ந்து, அவள் நுண்ணோக்கி மூலம் எடுத்துக் கொண்ட படங்களை, அவளுடைய அலைபேசியில் பார்த்துக் கொண்டிருந்தேன். “ஓ, இது பாசியைப் போன்றது. இதனைப் பார்ப்பது சற்றுக் கடினமானது. சிலவேளைகளில் லென்சுகளில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டுக் கொண்டு தான் பார்க்க முடியும் அல்லது அவை இறந்த பின் தான் பார்கக் முடியும்" என விளக்கினாள். அவள், ஒன்றன் பின் ஒன்றாக படங்களைக் காட்டி விளக்கிய போது, நான் வியந்துபோனேன். நுண்ணோக்கிகளின் மூலம் பார்க்கக் கூடிய அத்தனை சிறிய உயிரினங்களில் தேவன் வைத்துள்ள நுணுக்கமான அமைப்புகளைக் குறித்து நினைத்துக் கொண்டேயிருந்தேன்.

தேவனுடைய படைப்புகளுக்கும் அவருடைய செயல்களுக்கும் முடிவேயில்லை. இதனைக் குறித்து யோபுவின் நண்பனான எலிகூகூட, யோபு தன் இழப்புகளின் மத்தியில் போராடிக் கொண்டிருந்தபோது அவனுக்கு சுட்டிக் காட்டுகின்றான். எலிகூ தன் நண்பனிடம்," யோபே, இதற்குச் செவிகொடும்; தரித்து நின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப் பாரும். தேவன் அவைகளைத் திட்டம் பண்ணி, தம்முடைய மேகத்தின் மின்னலைப் பிரகாசிக்கப்பண்ணும் விதத்தை அறிவீரோ? மேகங்கள் தொங்கும்படி வைக்கும் நிறையையும், பூரண ஞானமுள்ளவரின் அற்புதமான செய்கைளையும்... அறிவீரோ?" (யோபு 37:14-16). தேவனுடைய படைப்புகளையும், அவற்றின் சிக்கலான நுணுக்கங்களையும் புரிந்து கொள்ள மனித அறிவு போதாது.

நாம் கண்களால் காணமுடியாத அவருடைய படைப்புகளும், தேவனுடைய வல்லமையையும் மகிமையையும் வெளிப்படுத்துகின்றன. அவருடைய மகிமை நம்மைச் சூழ்ந்துள்ளது. நாம் எவற்றின் வழியே கடந்து சென்றாலும், அவைகளைக் காணவும் புரிந்து கொள்ளவும் முடியாவிட்டாலும் தேவன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார். அவரை நாம் இன்று போற்றுவோம், ஏனெனில், “அவர் ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும் எண்ணிமுடியாத அதிசயங்களையும் செய்கிறார்" (யோபு. 5:9).

வானங்களைக் கிழித்துக் கொண்டு

சமீபத்தில் நான் என்னுடைய சிநேதிதியுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, அவள் தன்னுடைய விசுவாசத்தை விட்டு விட்டதாகவும், நாம் அடிக்கடி சொல்லக் கேட்டுள்ள ஒரு குற்றச் சாட்டைக் காரணமாகக் கூறினாள். ஒன்றுமே செய்யாமலிருக்கும் ஒரு தேவனை நான் எப்படி நம்புவது? எனக் கேட்டாள். இந்த துணிச்சலான கேள்வி நம்மில் அநேகருக்கு எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தோன்றலாம். நாம் தீவிரவாத செயல்களைக் குறித்துச் செய்தித்தாளில் வாசிக்கும் போதும், நம்முடைய உள்ளத்தை உடைக்கக் கூடிய காரியங்களின் வழியே கடந்து செல்லும் போதும் இத்தகைய கேள்வி நமக்கும் தோன்றலாம். என்னுடைய சிநேகிதியின் சார்பில் தேவன் செயல்பட வேண்டிய தேவையுள்ளது என்பதை அவளுடைய வேதனை வெளிப்படுத்தியது. நாம் அனைவருமே உணர்ந்திருக்கும் ஓர் ஏக்கம் அவளிடம் இருந்தது.

இஸ்ரவேலர் தங்களுடைய நிலப்பரப்பை நன்கு அறிவர். பாபிலோனிய பேரரசு இஸ்ரவேலரின் தேசத்தைக் கைப்பற்றிக் கொண்டது. இஸ்ரவேலரை இரும்புக் கரம் கொண்டு நசுக்கி எருசலேமை தீக்கிரையாக்கி புகைந்து கொண்டிருக்கும் குப்பை மேடாக்கினர். நம்மை விடுவிக்கிறவராக இருந்த தேவன் எங்கே? (ஏசா. 63:11-15) என்ற கேள்வியோடிருந்த ஜனங்களின் இருண்ட உள்ளத்தில் ஏசாயா தீர்க்கதரிசி தேவனுடைய வார்த்தைகளைப் போடுகின்றார். அதே இடத்திலிருந்தே ஏசாயா தைரியமாக ஒரு ஜெபத்தை ஏறெடுக்கின்றார். “தேவரீர் வானங்களைச் கிழித்திறங்கி... வாரும்" (64:1) என்கின்றார். ஏசாயாவின் வேதனையும், கவலையும் அவரை தேவனைவிட்டு விலகிப் போகச் செய்யவில்லை. ஆனால், அவர் இன்னும் அதிகமாக தேவனைத் தேடவும் அவரைக் கிட்டிச் சேரவும் செய்தது.

நம்முடைய சந்தேகங்களும் துன்பங்களும் நமக்கு ஒரு வித்தியாசமான ஈவைத் தருகின்றன. நாம் தேவனை விட்டு எவ்வளவு தூரமாய் காணாமல் போய் விட்டோமென்பதையும், தேவன் நம்மிடம் வரும்படியான தேவையில் இருக்கிறோமென்பதையும் அவை நமக்குக் காட்டுகின்றன. இப்பொழுது நாம் நடக்கக் கூடாததும், மறக்க முடியாததுமான கதைகளைக் காண்கின்றோம். இயேசுவின் மூலம் தேவன் வானங்களைக் கிழித்துக் கொண்டு கீழே இறங்கி வந்தார். கிறிஸ்து தன்னுடைய சொந்த சரீரத்தைக் கிழிக்கப்பட ஒப்புக் கொடுத்தார். எனவே அவருடைய அன்பினாலே அவர் நம்மை மேற்கொள்ள முடிந்தது. இயேசுவின் மூலம் தேவன் நம்மருகில் இருக்கின்றார்.

மனநிலையை சரிசெய்பவர்

நான் வாரந்தோறும் செல்கின்றபடி, இரயில் நிலையத்தில் காத்திருந்தபோது, வாடிக்கையாளர்கள் இரயிலில் ஏறுவதற்கு வரிசையில் நின்றது போல, எதிர்மறையான எண்ணங்கள் என்னுடைய மனதில் நிரம்பி நின்றன. கடன் மீதான கவலை, என்னிடம் பிறர் கூறிய அன்பற்ற வார்த்தைகள், எங்கள் குடும்ப நபர் ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதத்தில் உதவ முடியாத நிலை என பல எண்ணங்கள் எனக்குள் ஓடிக் கொண்டிருக்கும் போது, இரயிலும் வந்தது. நான் பயங்கரமான மனநிலையில் இருந்தேன்.

இரயிலில் ஏறி உட்கார்ந்ததும் மற்றொரு சிந்தனை என் உள்ளத்தில் வந்தது. என்னுடைய புலம்பலையெல்லாம் ஒரு காகிதத்தில் எழுதி தேவனிடம் கொடுக்கும்படி தோன்றியது. என்னுடைய குற்றச்சாட்டுகளையெல்லாம் என்னுடைய குறிப்பேட்டில் கொட்டியபின்னர், நான் என்னுடைய தொலைபேசியை எடுத்து நான் சேமித்து வைத்துள்ள துதிபாடல்களைக் கவனித்தேன். அவற்றை நான் முடிக்கும்முன்பே என்னுடைய மனநிலை முற்றிலும் மாறியது.

சங்கீதம் 94 ஐ எழுதியவர் நியமித்துள்ள வகையின்படியே நானும் ஏறக்குறைய பின்பற்றி வருகின்றேன். சங்கீதக்காரனும் முதலில் தன்னுடைய குறைகளைக் கொட்டித் தீர்க்கின்றார். “பூமியின் நியாயாதிபதியே, நீர் எழுந்து பெருமைக்காரருக்குப் பதிலளியும்... துன்மார்க்கருக்கு விரோதமாய் என் பட்சத்தில் எழும்புகிறவன் யார்? அக்கிரமக்காரருக்கு விரோதமாய் என் பட்சத்தில் நிற்பவன் யார்? (சங். 94:2,16). அவன் தேவனிடம், விதவைகளுக்கும், அனாதைகளுக்கும் இழைக்கப்படும் அநீதத்தைப் பற்றி பேசும்போது எதையும் மறைவாக வைக்கவில்லை. தன்னுடைய புலம்பலையெல்லாம் தேவனிடம் கொடுத்துவிட்ட பின்பு, அந்த சங்கீதம் தேவனைப் போற்றும்படி மாறுகிறது. “கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார்" (வச. 22) என தேவனைப் போற்றுகின்றார்.

நாமும் நம்முடைய புலம்பலையெல்லாம் தன்னிடம் கொண்டுவரும்படி தேவன் அழைக்கின்றார். அவரே நம்முடைய பயம், கவலை, உதவியற்ற நிலை யாவையும் துதியாக மாற்றுபவர்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

குடும்பம் மிகவும் முக்கியமானது

எங்கள் மாமாவின் இறுதி ஊர்வலத்திற்காகவும் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தொண்ணூறு வயது பாட்டியையும் பார்ப்பதற்காய், வெவ்வேறு மாகாணங்களில் வசித்த நான், எனது அக்கா மற்றும் தம்பியுடன் சேர்ந்து விமானத்தின் மூலமாய் வந்தோம். அவர் பக்கவாதத்தால் முடங்கி, பேசும் திறனை இழந்துவிட்டார். அவர் வலது கையை மட்டுமே பயன்படுத்தினார். நாங்கள் அவர்களது படுக்கையைச் சுற்றி நின்றபோது, அவர் அந்தக் கையை நீட்டி எங்களின் ஒவ்வொரு கைகளையும் எடுத்து, ஒன்றன்மேல் ஒன்றாக அவர்களது இதயத்தின்மீது வைத்து, அவற்றைத் தட்டிக்கொடுத்தார். இந்த வார்த்தைகளற்ற சைகையால், உடைபட்டு பிரிந்திருக்கும் எங்களது உடன்பிறப்பு உறவைக் குறித்து அவர் எங்களோடு தொடர்புகொண்டார். “குடும்பம் மிகவும் முக்கியமானது.”

திருச்சபை என்னும் தேவனுடைய குடும்பத்தில் நாமும் உடைக்கப்பட்டவர்களாய் பிரிந்து நிற்கக்கூடும். கசப்பு நம்மை பிரிந்திருக்கச் செய்யும். எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர், ஏசாவை அவனுடைய சகோதரனிடத்திலிருந்து பிரித்த கசப்பைக் குறித்து குறிப்பிடுகிறார் (எபிரெயர் 12:16). மேலும் சகோதர சகோதரிகளாகிய நாம் தேவனுடைய குடும்பத்தில் ஒருவரிலொருவர் ஐக்கியமாய் இருப்பதற்கு நமக்கு சவால் விடுகிறார். “யாவரோடும் சமாதானமாயிருக்கவும்... நாடுங்கள்” (வச. 14). அதாவது, தேவனுடைய குடும்பத்தில் அனைவரோடும் சமாதானமாய் வாழ்வதற்கு எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு பிரயாசப்படுவோம் என்று வலியுறுத்துகிறார். அத்தகைய ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்துகிறது, அவ்வாறு வாழ்வதற்கு தூண்டுகிறது. 

குடும்பம் மிகவும் முக்கியமானது. அவற்றில் நமது பூமிக்குரிய குடும்பங்கள் மற்றும் தேவனுடைய விசுவாசக் குடும்பங்களும் இணைந்ததே. நாம் அன்போடும் ஐக்கியத்தோடும் இருக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் ஏறெடுப்போமா? 

 

துதியின் பள்ளத்தாக்கு

கவிஞர் வில்லியம் கௌபர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியினை மன அழுத்தத்துடனே போராடினார். தற்கொலை முயற்சிக்குப் பிறகு, அவர் ஓர் புகலிடத்திற்கு அனுப்பப்பட்டார். ஆனால் ஓர் கிறிஸ்தவ மருத்துவரின் கனிவான கவனிப்பின் மூலம், இயேசுவின் மீது ஆழமான ஒரு விசுவாசத்தை நடைமுறைப்படுத்தினார். அதன் விளைவாக கௌபர் போதகருடனும் பாடலாசிரியர் ஜான் நியூட்டனுடன் பழக்கம் ஏற்பட்டு, தங்கள் திருச்சபையில் பாடப்பெறுகிற பாடல்களை எழுதுவதற்கு அவரை ஊக்குவித்தனர். அவர் எழுதிய பாடல்களில் ஒன்று, “தேவன் ஆச்சரியமான வழிகளில் கிரியை செய்கிறார்” என்ற பிரபல ஆங்கில பாடல். அதில், “பக்தியுள்ள புனிதர்களே, புதிய தைரியத்தை எடுங்கள். நீங்கள் அஞ்சி நடுங்கும் மேகங்கள் கருணையால் நிறைந்தவை, அவை உங்கள் சிரசில் ஆசீர்வாதத்தை பெய்யப்பண்ணும்" என்பதே. 

கௌபரைப் போலவே, யூதாவின் ஜனங்களும் எதிர்பாராத விதமாக தேவனுடைய கிருபையை சாட்சியிட நேரிட்டது. எதிரி தேசம் அவர்களின்மீது படையெடுத்ததால், யோசபாத் ராஜா ஜெபம் செய்வதற்கு மக்களுக்கு அழைப்புவிடுக்கிறார். யூதாவின் இராணுவப்படை யுத்தத்திற்கு சென்றபோது, அதின் முன்வரிசையில் அணிவகுத்துச் சென்றவர்கள் தேவனை துதித்துக்கொண்டே சென்றனர் (2 நாளாகமம் 20:21). படையெடுக்கும் படைகளில், “ஒருவரும் தப்பவில்லை. அவர்கள் கண்ட ஏராளமான பொருள்களும்... மூன்றுநாளாய்க் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது” (வச. 24-25).

நான்காம் நாளில், தேவனுடைய ஜனத்திற்கு விரோதமாக கலகம்பண்ணுவதற்கு என்று ஒரு எதிரி படை கூடும் இடமே பெராக்கா பள்ளத்தாக்கு (வச. 26) என்று அழைக்கப்பட்டது. அதாவது, “துதியின் பள்ளத்தாக்கு” அல்லது “ஆசீர்வாதம்” என்று பொருள். என்னே மாற்றம்! நம்முடைய கடினமான பள்ளத்தாக்குகளைக்கூட நாம் அவரிடம் ஒப்படைப்போமாகில் அவர் அதை துதியின் ஸ்தலங்களாய் மாற்றுவார். 

 

தேவனின் மென்மையான அன்பு

2017ஆம் ஆண்டு, தடுப்பூசி போடப்படும் ஓர் குழந்தையை அதின் தந்தை அணைத்து தேற்றுவதுபோன்ற ஓர் காணொலி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. செவிலியர் தடுப்பூசிகளை போட்ட பிறகு, தந்தை தனது மகனை அவரது கன்னத்தில் அணைத்து நெருக்கமாக வைத்திருந்தார். குழந்தை சில நொடிகளில் அழுவதை நிறுத்தியது. அன்பான பெற்றோரின் கனிவான கவனிப்பைக் காட்டிலும் உறுதியளிக்கும் விஷயம் வேறு எதுவும் இல்லை.

வேதாகமத்தில், தேவனை தன் பிள்ளைகளை அதிகமாய் நேசிக்கக்கூடிய பெற்றோராய் சித்தரிக்கும் விளக்கங்கள் இடம்பெற்றுள்ளது. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியான ஓசியா, பிளவுபட்ட இஸ்ரவேல் ராஜ்யத்தின் காலத்தில், வடக்கு இராஜ்யத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்கு உரைப்பதற்காக ஓர் செய்தியை பெற்றுக்கொள்கிறார். தேவனுடனான உறவுக்குத் திரும்பும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஓசியா இஸ்ரவேலர்களுக்கு, “இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்” (ஓசியா 11:1) என்றும் “அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப்போல்” (வச. 4) இருந்தேன் என்றும் குறிப்பிடுகிறார். 

தேவனுடைய அன்பான கவனிப்பைப் பற்றிய இதே உறுதியளிக்கும் வாக்குறுதி நமக்கும் உண்மையாக இருக்கிறது. நம்முடைய வேதனை மற்றும் பாடுகளின் நிமித்தம் அவருடைய அன்பை நிராகரித்து, பின்னர் அவருடைய மென்மையான அரவணைப்பை நாடினாலும் அவர் நம்மை அவருடைய பிள்ளை என்று அழைக்கிறார் (1 யோவான் 3:1). மேலும் அவரது ஆறுதலின் கரங்கள் நம்மை ஏற்றுக்கொள்ள எப்போதும் திறந்திருக்கிறது (2 கொரிந்தியர் 1:3-4).