நான் வாரந்தோறும் செல்கின்றபடி, இரயில் நிலையத்தில் காத்திருந்தபோது, வாடிக்கையாளர்கள் இரயிலில் ஏறுவதற்கு வரிசையில் நின்றது போல, எதிர்மறையான எண்ணங்கள் என்னுடைய மனதில் நிரம்பி நின்றன. கடன் மீதான கவலை, என்னிடம் பிறர் கூறிய அன்பற்ற வார்த்தைகள், எங்கள் குடும்ப நபர் ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதத்தில் உதவ முடியாத நிலை என பல எண்ணங்கள் எனக்குள் ஓடிக் கொண்டிருக்கும் போது, இரயிலும் வந்தது. நான் பயங்கரமான மனநிலையில் இருந்தேன்.

இரயிலில் ஏறி உட்கார்ந்ததும் மற்றொரு சிந்தனை என் உள்ளத்தில் வந்தது. என்னுடைய புலம்பலையெல்லாம் ஒரு காகிதத்தில் எழுதி தேவனிடம் கொடுக்கும்படி தோன்றியது. என்னுடைய குற்றச்சாட்டுகளையெல்லாம் என்னுடைய குறிப்பேட்டில் கொட்டியபின்னர், நான் என்னுடைய தொலைபேசியை எடுத்து நான் சேமித்து வைத்துள்ள துதிபாடல்களைக் கவனித்தேன். அவற்றை நான் முடிக்கும்முன்பே என்னுடைய மனநிலை முற்றிலும் மாறியது.

சங்கீதம் 94 ஐ எழுதியவர் நியமித்துள்ள வகையின்படியே நானும் ஏறக்குறைய பின்பற்றி வருகின்றேன். சங்கீதக்காரனும் முதலில் தன்னுடைய குறைகளைக் கொட்டித் தீர்க்கின்றார். “பூமியின் நியாயாதிபதியே, நீர் எழுந்து பெருமைக்காரருக்குப் பதிலளியும்… துன்மார்க்கருக்கு விரோதமாய் என் பட்சத்தில் எழும்புகிறவன் யார்? அக்கிரமக்காரருக்கு விரோதமாய் என் பட்சத்தில் நிற்பவன் யார்? (சங். 94:2,16). அவன் தேவனிடம், விதவைகளுக்கும், அனாதைகளுக்கும் இழைக்கப்படும் அநீதத்தைப் பற்றி பேசும்போது எதையும் மறைவாக வைக்கவில்லை. தன்னுடைய புலம்பலையெல்லாம் தேவனிடம் கொடுத்துவிட்ட பின்பு, அந்த சங்கீதம் தேவனைப் போற்றும்படி மாறுகிறது. “கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார்” (வச. 22) என தேவனைப் போற்றுகின்றார்.

நாமும் நம்முடைய புலம்பலையெல்லாம் தன்னிடம் கொண்டுவரும்படி தேவன் அழைக்கின்றார். அவரே நம்முடைய பயம், கவலை, உதவியற்ற நிலை யாவையும் துதியாக மாற்றுபவர்.