சமுதாயத் தொண்டு செய்யும் ஒருவர் வீடற்ற குழந்தைகளுக்கென ஓர் இல்லம் கட்டியபோது, நான் மிகவும் மகிழ்ந்தேன். அத்தோடு நின்றுவிடாமல், அந்த மனிதன் அதையும் விட மேலாக அப்படிப்பட்ட வீடற்ற குழந்தைகளிலொன்றைத் தனக்குச் சொந்தமாக தத்தெடுத்துக் கொண்டபோது மெய்சிலிர்த்துப் போனோன். அநேக அனாதைக் குழந்தைகள் தங்களை ஆதரிக்க ஒரு வளர்ப்புத் தந்தை கிடைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியடைவர். ஆனால், அந்த வளர்ப்புத் தந்தை தங்களுக்கு உதவுபவர் மட்டுமல்ல, தங்களைச் சொந்தமாக ஏற்றுக் கொள்கிறாரென கேட்கும்போது, அது அவர்களுக்கு எப்படியிருக்கும்?

நீயும் தேவனுடைய பிள்ளையாயிருந்தால், அது உனக்குச் கிடைத்த ஈவு என்பதை
நீ அறிந்திருக்கின்றாய். வெறுமனே, தேவன் நம்மை நேசித்ததினால் தம்முடைய ஒரேபேறான குமாரனை, “நாம் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படி” (யோவா. 3:16). அனுப்பியிருந்தால், அது நமக்குப் போதுமானது. நாம் தேவனைக் குறைகூறவும் முடியாது. ஆனால், அது தேவனுக்குப் போதுமானதாகயில்லை. “நம்மை மீட்டுக் கொள்ளத்தக்கதாக” தேவன் தம்முடைய குமாரனை அனுப்பினார். அத்தோடு அது முடிந்து விடவும் இல்லை. ஆனால், “நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி” (கலா. 4:4-5) தேவன் தம்முடைய குமாரனை அனுப்பினார்.

அப்போஸ்தலனாகிய பவுல் நம்மை “தேவனுடைய புத்திரர்” என்றே குறிப்பிடுகின்றார். ஏனெனில், அவருடைய நாட்களில் மகனுக்குத்தான் தந்தையின் சுதந்திரத்தையடையும் உரிமையிருந்தது. எந்த மனுஷனும், மனுஷியும் இயேசுவின் பேரில் விசுவாசமாயிருந்தால் அவர்களெல்லாரும் தேவனுடைய பிள்ளைகளென்கிற சுதந்தரத்தைப் பெறுகின்றோம் என பவுல் கூறுகின்றார் (வச. 7).

தேவன், வெறுமனே உன்னை மீட்கிறவர் மட்டுமல்ல, அவர் உன்னை நேசிக்கின்றார், உன்னைத் தன்னுடைய சொந்த குடும்பத்தில் சேர்த்துக் கொள்கின்றார். தன்னுடைய நாமத்தை உன்மேல் எழுதுகின்றார் (வெளி. 3:12). உன்னைத் தன்னுடைய பிள்ளையெனப் பெருமையாகக் கூறுகின்றார். இதைவிட மேலாக அன்புகூர நமக்கு யாரிருக்கின்றார்கள்? தேவனை விட முக்கியமானவராக நமக்கு யாரிருக்கக் கூடும்? நீ தேவனால் ஆசீர்வதிக்கப்படுவதோடு, அவருடைய பிள்ளையாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டாய உன் தந்தை உன்னை நேசிக்கின்றார்.