எட்வின் ஸ்டான்டன் முதன் முறையாக அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லின்கனைத் தனிப்பட்ட முறையிலும், தன் பணியினிமித்தமும் சந்தித்த போது அவரிடம் தரக் குறைவாக நடந்து கொண்டார். அவரைக் குறித்து, “நீண்ட பற்கள் கொண்ட உயிரினம்” எனவும் குறிப்பிட்டார். ஆனால், லின்கன் ஸ்டான்டனின் திறமையைப் பாராட்டியதோடு அவரை மன்னிக்கவும் செய்தார். அதோடல்லாமல் ஓர் உள்நாட்டு போரின் போது, ஸ்டான்டனை முக்கிய கேபினெட் உறுப்பினராக பதவியுர்வளித்தார். பிற்பாடு ஸ்டான்டன், லின்கனை ஒரு நண்பனாக ஏற்றுக் கொண்டு அன்பு செய்தார். போர்ட் அரங்கில் ஜனாதிபதி சுடப்பட்டபோது, அன்றிரவு முழுவதும் லின்கனின் படுக்கையருகிலேயே அமர்ந்திருந்த ஸ்டான்டன், அவர் மரித்த போது கண்ணீரோடு, ‘இப்பொழுது அவர் தலைமுறைகளுக்குச் சொந்தமாவார்” எனக் கூறினார்.

ஒப்புரவாதல் என்பது ஓர் அழகிய காரியம். அப்போஸ்தலனாகிய பேதுரு, இயேசுவைப் பின் பற்றுகின்றவர்களுக்கு எழுதும் போது, ”எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்” (1 பேது. 4:8) என்கின்றார். இந்த வார்த்தைகளின் மூலம், பேதுரு இயேசுகிறிஸ்துவை மறுதலித்ததையும் (லூக். 22:54-62) பின்னர் அவர் (நாமும்) சிலுவையின் வழியே இயேசுவின் மன்னிப்பைப் பெற்றுக்கொண்டதையும் நினைத்து அதிசயித்தேன்.

இயேசு தன்னுடைய மரனத்தின் மூலம் வெளிப்படுத்தின ஆழந்த அன்பு நம்மை நம்முடைய பாவங்களிலிருந்து விடுதலையளித்து, தேவனோடு ஒப்புரவாகும்படி வழியைத் திறந்து கொடுத்தது (கொலோ. 1:19-20). அவருடைய மன்னிக்கும் சிந்தை நாமும் பிறரை மன்னிக்கும்படி பெலனளிக்கின்றது. ஏனெனில் பிறரை மன்னிப்பது நம்முடைய சொந்த முயற்சியால் முடியாதகாரியம். அவரே நமக்கு மன்னிக்கும் சிந்தையைத் தரும்படி நாம் அவரிடம் கேட்க வேண்டும். நாம் பிறரை நேசிக்கின்றோம், ஏனெனில் நமது இரட்சகர் அனைவரையும் நேசிக்கின்றார். நாம் பிறரை மன்னிக்க முடிகின்றது, ஏனெனில் அவர் நம்மை மன்னிக்கின்றார். பின்னானவைகளைக் கடந்து, முன்னோக்கி அவரோடு நடந்து புதிய, அழகிய கிருபாசனத்தண்டையில் சேர தேவன் நமக்கு பெலனளிக்கின்றார்.