Archives: அக்டோபர் 2018

அச்சுறுத்தும் காரியங்கள், அழகான காரியங்கள்

பயம் நம்மை உறைய வைத்துவிடக்கூடும். கடந்த காலத்தில் நம்மைக் காயப்படுத்தியவை, மீண்டும் நம்மைக் காயப்படுத்தக்கூடியவை என்று, பயப்படுவதற்கான எல்லாக் காரணங்களும் நமக்குத் தெரியும். இதனால் சில சமயங்களில் நாம் பின்னே போகவும் முடியாமல், முன்னே செல்லவும் பயந்து தவிக்கிறோம். என்னால் இதைச் செய்ய முடியாது. மீண்டும் காயப்படுவதை சமாளிக்கும் அளவுக்கு எனக்கு சாமர்த்தியம் இல்லை, பெலன் இல்லை, தைரியம் இல்லை.

எழுத்தாளர் ஃப்ரெட்ரிக் ப்யுக்னர் கடவுளின் கிருபையை விவரிக்கும் விதம் என்னை அதிகம் கவர்ந்தது. “இதுதான் உலகம். இங்கு அச்சுறுத்தும் காரியங்களும் நடக்கும். அழகான காரியங்களும் நடக்கும். பயப்படாதே. நான் உன்னோடு இருக்கிறேன்” என்று கூறும் மெல்லிய சத்தத்தைப் போன்றது கடவுளின் கிருபை என்று கூறுகிறார்.

அச்சுறுத்தும் காரியங்கள் நடக்கும். நம் உலகில், காயப்படுத்துபவர்கள், சிலரை மிக மோசமாக காயப்படுத்துகிறார்கள். சங்கீதக்காரன் தாவீதைப் போல, நாமும், தீங்கு நம்மைச் சூழ்ந்ததையும் “பட்சிக்கிற சிங்கங்களைப்” (சங்கீதம் 57:4) போல் நம்மைப் பிறர் காயப்படுத்தியதையும் சுமக்கிறோம். எனவே நாம் துக்கித்துக் கதறுகிறோம் (வச. 1-2)

ஆனால் கடவுள் நம்மோடு இருப்பதால், அழகான காரியங்களும் நடக்கக்கூடும். நமது காயங்களையும், பயங்களையும் சுமந்துகொண்டு நாம் அவரிடம் செல்லும்போது, நம்மைக் காயப்படுத்தக்கூடிய திறனைவிட (வச. 1-3) அதிகமான அன்பால் நாம் சுமக்கப்படுவதை உணர்வோம். அந்த அன்பு வானபரியந்தம் எட்டக்கூடிய அன்பு (வச. 10). பேரிடர் நம்மைச் சூழ்ந்துகொள்ளும்போதும், நம் இருதயம் சமாதானத்தைக் கண்டுகொள்ளத்தக்க உறுதியான புகலிடமாக அவர் அன்பு அமையும் (வச. 1,7). அவரது விசுவாசத்தைப் பற்றிய பாடலோடு ஒரு புதிய நாளைப் பார்க்கும்படி, புதிதாக்கப்பட்ட தைரியத்தோடு நாம் ஒருநாள் விழிப்போம் (வச. 8-10).

அவரை முதலில் நம்புங்கள்

“அப்பா, என்னை விட்டுராதீங்க!” “விட மாட்டேன். இது சத்தியம். நல்லா பிடிச்சிருக்கேன்.”

நான் தண்ணீரைப் பார்த்து அதிகம் பயப்படும் சிறுவனாக இருந்தேன். ஆனால் என் தந்தை நான் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார். நீச்சல் குளத்தில் என் தலைக்கு மேல் தண்ணீர் இருக்கும் அதிக ஆழமான பகுதிக்கு என்னை அழைத்துச் செல்வார். அங்கு அவர் மட்டுமே எனக்குத் துணை. அதன்பின் எனக்கு அமைதியாக ஆசுவாசப்படவும், மிதக்கவும் கற்றுக்கொடுப்பார்.

அது நீச்சல் பயிற்சி மட்டுமல்ல. அது நம்பிக்கைக்கான படிப்பினை. என் தந்தை என்னை நேசிக்கிறார், அதனால் எனக்கு எந்த ஆபத்தும் வர விடமாட்டார் என்று தெரிந்தாலும், நான் பயப்படவும் செய்தேன். எந்த ஆபத்தும் இல்லை என்று அவர் உறுதி அளிக்கும்வரை அவர் கழுத்தை இறுகப் பற்றிக்கொள்வேன். இறுதியில் அவரது பொறுமைக்கும், இரக்கத்திற்கும் பலன் கிடைத்தது. நான் நீந்த ஆரம்பித்தேன். ஆனால் நான் முதலில் அவரை நம்ப வேண்டியிருந்தது  

ஏதாவது கஷ்டம் “என் தலைக்கு மேல்” இருப்பதைப் போன்ற உணர்வு வரும்போது, அந்தத் தருணங்களை நினைத்துக்கொள்வேன். தம் ஜனத்திற்கு கடவுள் அளித்த உறுதியை நினைவில்கொள்ள அவை எனக்கு உதவுகின்றன: “உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்” (ஏசாயா 46:4).  

கடவுளின் கரம் நம்மைத் தாங்குவதை எல்லா சமயங்களிலும் உணரமுடியாமல் இருக்கலாம். ஆனால் அவர் நம்மை விட்டு விலகுவதில்லை என்று வாக்குக்கொடுத்திருக்கிறார் (எபிரேயர் 13:5). அவரது பராமரிப்பில், வாக்குறுதிகளில் நாம் நிலைத்திருக்கும்போது, அவரது விசுவாசத்தில் நம்பிக்கைகொள்ள உதவுகிறார். நமது கவலைகளுக்கு மேலாக நம்மைத் தூக்கி, அவரில் நாம் சமாதானத்தைக் கண்டுகொள்ள உதவுகிறார்.  

விலங்குகளைக் கேளுங்கள்

காப்பாற்றப்பட்ட ஒரு மொட்டைத் தலைக் கழுகை மிக அருகில் பார்த்தபோது, எங்கள் பேரப்பிள்ளைகள் அதிகக் குதூகலமடைந்தார்கள். அதை தொட்டுப்பார்க்கவும் அவர்களுக்கு அனுமதி கிடைத்தது. மிருகக் காட்சி சாலையின் தன்னார்வலர் கரத்தில் அமர்ந்திருந்த வலிமையான அந்தக் கழுகின் இறக்கை ஆறரை அடி நீளம் கொண்டது என்று தெரிந்தபோது அதிக ஆச்சரியம் அடைந்தேன். ஆனாலும் அதன் எலும்புகள் திண்ணமாக இல்லாத காரணத்தால் அதன் எடை வெறும் மூன்றரை கிலோ மட்டுமே.

கீழ் நோக்கிப் பாய்ந்து தன் கூர்நகங்களில் இரையைப் பிடிக்க ஏதுவாக ஒரு ஏரியின் மேல் பறந்து கொண்டிருந்த ஒரு கழுகை முன்பு பார்த்ததை இந்தக் கழுகு எனக்கு நினைவுபடுத்தியது. முன்பு ஒரு முறை ஒரு குளத்தின் கரையில் அசையாமல் நின்று கொண்டிருந்த நீல நாரையைப் பார்த்ததை மனக் கண் முன் கொண்டுவந்தேன். அது தன்னுடைய நீண்ட அலகை தண்ணீருக்குள் அமிழ்த்தி இரையைப் பிடிக்கத் தயாராக நின்றது. நமது எண்ணங்களை நம்மை சிருஷ்டித்தவரை நோக்கித் திருப்ப இந்த இரண்டு பறவைகளைப் போல ஏறத்தாழ 10,000 வகைப் பறவைகள் உள்ளன.

யோபின் புத்தகத்தில், அவரது கஷ்டங்களுக்கான காரணங்களைப் பற்றி அவர் நண்பர்கள் விவாதிக்கும்போது, “சர்வ வல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ?” (11:5-9) என்று கேட்கின்றனர். அதற்கு யோபு, “இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப் போதிக்கும்; ஆகாயத்துப் பறவைகளைக் கேள். அவைகள் உனக்கு அறிவிக்கும்” (யோபு 12:7) என்று பதில் கூறுகிறார். கடவுள் தம் சிருஷ்டிப்புகளை உருவாக்கி, பராமரித்து, ஆளுகை செய்வதை விலங்குகள் பறைசாற்றுகின்றன: “சகல பிராணிகளின் ஜீவனும், மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது” (வச. 10).

நமது சூழ்நிலைகள் புரியாதபோதும். கடவுள் பறவைகளைப் பராமரிப்பதால், உங்களையும், என்னையும் நேசிக்கிறார், பராமரிக்கிறார் என்று உறுதிகொள்ளலாம். உங்களைச் சுற்றிப்பார்த்து, அவரைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

நம்முடைய பாரத்தைச் சுமந்தார்

தண்ணீர், மின்சாரம் போன்றவற்றிற்கான பயன்பாட்டு கட்டணங்கள் சில சமயங்களில் ஆச்சரியப்படும் அளவிற்கு மிக அதிகமாக இருக்கும். ஆனால் வடக்கு கரோலினாவைச் சேர்ந்த கியரன் ஹீலிக்கு வந்த தண்ணீர் கட்டணம் இதயத்துடிப்பே நின்றுவிடும்படி இருந்தது. அவர் 1,000 கோடி டாலர் செலுத்த வேண்டும் என்று அவருக்கு வந்த செய்தி கூறியது! அந்த அளவிற்கு தண்ணீரை முந்திய மாதத்தில் பயன்படுத்தவில்லை என்பதை ஹீலி அறிந்ததால், கட்டணத்தைத் தவணை முறையில் கட்டலாமா என்று விளையாட்டாகக் கேட்டார்.  

1,000 கோடி டாலர் கடன் என்பது தாங்க முடியாத பாரம். ஆனால் நம் பாவங்களினால் நாம் சுமக்கவேண்டிய உண்மையான, அளவுக்கதிகமான பாரங்களோடு ஒப்பிடும்போது அது மிகவும் சாதாரணமானது. நமது பாவத்தின் பாரங்களையும், அவற்றின் பின் விளைவுகளையும் நாமே சுமக்க முயற்சிக்கும்போது, அது நமக்கு சோர்வை ஏற்படுத்தி, நம்மை குற்ற உணர்வாலும், அவமானத்தாலும் நிறைக்கிறது. நம்மால் அந்த பாரத்தை சுமக்க முடியாது என்பதே உண்மை.  

நாமே அந்த பாரங்களை சுமக்க வேண்டியதில்லை. பேதுரு விசுவாசிகளுக்கு நினைவுபடுத்தியதுபோல, கடவுளின் குமாரனாகிய குற்றமில்லாத இயேசு மட்டுமே நமது பாவங்களின் பாரங்களையும் அதன் பின் விளைவுகளையும் சுமக்க முடியும் (1 பேதுரு 2:24). இயேசு சிலுவையில் மரித்தபோது, நமது தவறுகளை தன்மீது ஏற்றுக்கொண்டு, நமக்கு மன்னிப்பை அருளினார். அவர் நமது பாரங்களை சுமந்ததினால், நாம் அனுபவிக்க வேண்டிய தண்டனைகளைப் பெறவேண்டியதில்லை.  

“முன்னோர்களால் பாரம்பரியமாய் அனுசரித்து வந்த வீணான நடத்தையில்” (1:18), பயத்தோடும், குற்ற உணர்வோடும் வாழ்வதைத் தவிர்த்து, அன்பும், சுதந்திரமும் கொண்ட புது வாழ்வை நாம் வாழ முடியும் (வச. 22-23).  

பாதுகாப்பாக இயேசுவின் கரங்களில்

வெளியே வானம் இருண்டு, வானிலை அச்சுறுத்தியது. எனது அலைபேசியில் வந்த எச்சரிப்பு செய்தி திடீரென்று வெள்ளம் வரலாம் என்று அறிவித்தது. வழக்கத்தை விட அதிகமான வாகனங்கள் எங்கள் வீட்டருகில் நிறுத்தப்பட்டிருந்தன. பள்ளிப் பேருந்து அந்த இடத்தில் பிள்ளைகளை இறக்கி விடுவதால், தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்ல பெற்றோர்கள் காத்திருந்தனர். பேருந்து வருவதற்குள் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. ஒரு பெண் தன் காரில் இருந்து இறங்கி, பின்புறமிருந்து ஒரு குடையை எடுத்தார். தன் சிறு பிள்ளையை அழைத்துக்கொண்டு, அவள் காரில் ஏறும்வரை, மழையில் நனையாதபடி குடையைப் பிடித்து வந்தாள். ஒரு நல்ல தாயாக, தன் பிள்ளையை பாதுகாப்புடன் நடத்திய அந்த அழகிய தருணம், நமது பரம தந்தையின் அக்கறையை எனக்கு நினைவுபடுத்தியது.

ஏசாயா தீர்க்கதரிசி கீழ்ப்படியாமைக்குரிய தண்டனையையும், கடவுளின் ஜனங்களுக்கு அதன் பின்னான பிரகாசமான நாட்களையும் முன் அறிவித்தார் (ஏசாயா 40:1-8). பர்வதத்தில் இருந்து வரும் பரலோக அறிவிப்பு கடவுளின் வல்லமையான பிரசன்னத்தையும், அக்கறையையும் இஸ்ரவேலர்களுக்கு உறுதிப்படுத்தியது. கடவுளின் அதிகாரம் அப்போது இருந்ததுபோல இப்போதும் இருப்பதால், கவலைப்படுபவர்கள் பயப்படாமல் இருக்கலாம் (வச. 9-10). மேய்ப்பர்கள் அளிக்கும் பாதுகாப்பைப் போன்ற கடவுளின் பாதுகாப்பு குறித்த செய்தியும் அந்த அறிவிப்பில் இருந்தது (வச. 11): ஆட்டுக்குட்டிகள் மேய்ப்பரின் கரங்களில் பாதுகாப்பாக இருக்கும். கறவலாடுகள் மெதுவாக நடத்தப்படும்.

கடினமான சூழ்நிலைகள் கொண்ட உலகில், பாதுகாப்பு, அக்கறை குறித்த இதுபோன்ற வர்ணனைகள், நாம் தன்னம்பிக்கையுடன் கடவுளை நோக்கிப்பார்க்க உதவுகின்றன. கர்த்தரை முழுமையாக நம்புபவர்கள், அவரில் பாதுகாப்பையும், புது பெலனையும் பெற்றுக்கொள்வார்கள் (வச. 31).