வெளியே வானம் இருண்டு, வானிலை அச்சுறுத்தியது. எனது அலைபேசியில் வந்த எச்சரிப்பு செய்தி திடீரென்று வெள்ளம் வரலாம் என்று அறிவித்தது. வழக்கத்தை விட அதிகமான வாகனங்கள் எங்கள் வீட்டருகில் நிறுத்தப்பட்டிருந்தன. பள்ளிப் பேருந்து அந்த இடத்தில் பிள்ளைகளை இறக்கி விடுவதால், தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்ல பெற்றோர்கள் காத்திருந்தனர். பேருந்து வருவதற்குள் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. ஒரு பெண் தன் காரில் இருந்து இறங்கி, பின்புறமிருந்து ஒரு குடையை எடுத்தார். தன் சிறு பிள்ளையை அழைத்துக்கொண்டு, அவள் காரில் ஏறும்வரை, மழையில் நனையாதபடி குடையைப் பிடித்து வந்தாள். ஒரு நல்ல தாயாக, தன் பிள்ளையை பாதுகாப்புடன் நடத்திய அந்த அழகிய தருணம், நமது பரம தந்தையின் அக்கறையை எனக்கு நினைவுபடுத்தியது.

ஏசாயா தீர்க்கதரிசி கீழ்ப்படியாமைக்குரிய தண்டனையையும், கர்த்தரின் ஜனங்களுக்கு அதன் பின்னான பிரகாசமான நாட்களையும் முன் அறிவித்தார் (ஏசாயா 40:1-8). பர்வதத்தில் இருந்து வரும் பரலோக அறிவிப்பு தேவனின் வல்லமையான பிரசன்னத்தையும், அக்கறையையும் இஸ்ரவேலர்களுக்கு உறுதிப்படுத்தியது. தேவனின் அதிகாரம் அப்போது இருந்ததுபோல இப்போதும் இருப்பதால், கவலைப்படுபவர்கள் பயப்படாமல் இருக்கலாம் (வச. 9-10). மேய்ப்பர்கள் அளிக்கும் பாதுகாப்பைப் போன்ற ஆண்டவரின் பாதுகாப்பு குறித்த செய்தியும் அந்த அறிவிப்பில் இருந்தது (வச. 11): ஆட்டுக்குட்டிகள் மேய்ப்பரின் கரங்களில் பாதுகாப்பாக இருக்கும். கறவலாடுகள் மெதுவாக நடத்தப்படும்.

கடினமான சூழ்நிலைகள் கொண்ட உலகில், பாதுகாப்பு, அக்கறை குறித்த இதுபோன்ற வர்ணனைகள், நாம் தன்னம்பிக்கையுடன் தேவனை நோக்கிப்பார்க்க உதவுகின்றன. கர்த்தரை முழுமையாக நம்புபவர்கள், அவரில் பாதுகாப்பையும், புது பெலனையும் பெற்றுக்கொள்வார்கள் (வச. 31).