Archives: செப்டம்பர் 2018

தேவனிடம் உண்மையாய் இருத்தல்

நான் என் தலையைத் தாழ்த்தி, கண்களை மூடி, விரல்களைக் கோர்த்து, ஜெபிக்க ஆரம்பிக்கிறேன். “அன்பின் ஆண்டவரே, உமது பிள்ளையாக இன்று உம்மிடத்தில் வருகிறேன். உமது வல்லமை, உமது நன்மை ஆகியவற்றை ஏற்று, அறிக்கையிடுகிறேன்....” திடீரென்று என் கண்கள் தானாக, வேகமாகத் திறக்கின்றன. நாளை வகுப்பில் கொடுக்கவேண்டிய வரலாற்றுப் பயிற்சியை என் மகன் இன்னும் முடிக்கவில்லை என்ற நினைவு வருகிறது. வகுப்புகள் முடிந்தபிறகு, அவனுக்கு கூடைப்பந்தாட்ட பயிற்சி இருப்பது நினைவு வருகிறது. நடு இரவு வரை கண் விழித்து தன் பள்ளிக்கான பயிற்சிகளை அவன் செய்வதாகக் கற்பனை செய்கிறேன். இதனால் அவன் அதிகக் களைப்பாகி, காய்ச்சலில் படுத்து விடுவான் என்று கவலைப்படுகிறேன்.
 
ஜெபத்தின்போது ஏற்படும் கவனச் சிதறல்கள் பற்றி, சி. எஸ். லூயிஸ், த ஸ்க்ரூடேப் லெட்டர்ஸ் (The Screwtape Letters)என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார். நமது மனம் அலைபாயும்போது, மன உறுதியை பயன்படுத்தி, நமது நினைவுகளை மீண்டும் ஜெபத்தை நோக்கி ஒருமுகப்படுத்துவதாகக் குறிப்பிடுகிறார். ஆனாலும், இந்தக் கவனச்சிதறலை ஏற்றுக்கொண்டு, “நமது கவனச்சிதறலை நமது பிரச்சனையாக தேவனிடம் ஒப்படைத்து, அதையே நமது ஜெபத்தின் மையக் கருத்தாக மாற்றுமாறு” லூயிஸ் ஆலோசனை தருகிறார்.
 
தீராத கவலை அல்லது பாவகரமான சிந்தனை நம் ஜெபத்திற்குத் தடையாக இருக்கும்போது, கார்தருடானாஉரையாடலில், அதையே பிரதான கருத்தாக எடுத்துக்கொள்ளலாம். நாம் தேவனிடம்பேசும்போது, நமது கவலைகள், பயங்கள், போராட்டங்கள் பற்றி நாம் வெளிப்படையாகப் பேசுவதையே அவர் விரும்புகிறார். நாம் சொல்லும் எதைக் குறித்தும் அவர் ஆச்சரியப்படுவதில்லை. நமது நெருங்கிய நண்பர் நாம் பேசுவதை எப்படி கவனமாகக் கேட்பாரோ அதேபோல் நம்மேல் ஈடுபாடு கொண்டவராக கர்த்தர் இருக்கிறார். அதனால்தான் நம் கவலைகளை அவரிடத்தில் ஒப்புவிக்க ஊக்குவிக்கப்படுகிறோம் – ஏனென்றால் அவர் நம்மை விசாரிக்கிறவர் (1 பேதுரு 5:7).

மாறாத அன்பு

நான் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது, பல்கலைக்கழக டென்னிஸ் அணியில் விளையாடினேன். என் பதின்பருவத்தில், என் திறமையை மேம்படுத்துவதற்காக, எங்கள் வீட்டிலிருந்து சற்றுத் தள்ளியிருந்த காங்க்ரீட் தரை கொண்ட அரங்கில் பல மணி நேரம் பயிற்சி செய்தேன்.
 
கடைசியாக அந்த ஊருக்கு நான் சென்றபோது, நான் விளையாடிய நாட்களை நினைவுகூரவும், அங்கே விளையாடுபவர்களைப் பார்க்கவும் நினைத்து, நான் பயிற்சி செய்த அரங்கிற்குச் சென்றேன். ஆனால் எனக்குப் பரிச்சயமான அந்த பழைய அரங்கம் அங்கே இல்லை. காலி மைதானமாக இருந்த அந்த இடத்தில், காற்றில் அவ்வப்போது தலையசைத்த ஒன்றிரண்டு களைச்செடிகள் மட்டுமே தென்பட்டன.
 
நான் அங்கு சென்ற அந்த மதியப்பொழுது, நமது குறுகிய வாழ்வை நினைவுபடுத்தும் ஒரு சம்பவமாகவே எனக்கு இன்றுவரை இருக்கிறது. என் இளவயதின் ஆற்றலை செலவழித்த இடங்களில் ஒன்று,இன்று இல்லவே இல்லை. அந்த அனுபவம் “மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது; வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான். காற்று அதின் மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று; அது இருந்த இடமும் இனி அதை அறியாது. கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேல் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது” (சங்கீதம் 103:15-17), என்று வயதுசென்ற தாவீது கூறிய உண்மையை எனக்கு உணர்த்தியது.
 
நமக்கு வயதாகும். நம்மைச் சுற்றியிருக்கும் உலகம் மாறும். ஆனால் தேவனின்அன்பு ஒருபோதும் மாறுவதில்லை. அவரைத் தேடுபவர்களை அவர் பாதுகாக்கிறார் என்று எப்போதும் நம்பிக்கை கொள்ளலாம்.
 

சுய பெலத்தால்

ஆண் அழகர் போட்டியில் பங்கேற்பவர்கள், மிகக் கடுமையான பயிற்சிகளைச் செய்வார்கள். முதல் சில மாதங்களுக்கு உடல் அளவையும், வலிமையையும் அதிகரிக்க முக்கியத்துவம் கொடுப்பார்கள். போட்டி நெருங்கும் சமயத்தில், தசைகளை மறைக்கும் கொழுப்பைக் கரைப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். போட்டிக்கு சில நாட்கள் முன்பு, தசை நன்கு தெரியவேண்டும் என்பதற்காக, எப்போதும் குடிப்பதைவிட குறைவான அளவு தண்ணீர் குடிப்பார்கள். ஊட்டச்சத்து உணவுகள் சாப்பிடுவதைக் குறைப்பதால், பார்ப்பதற்கு வலிமையாகத் தெரிந்தாலும், போட்டி தினத்தன்றுதான் மிக பலவீனமாக இருப்பார்கள்.
 
இதற்கு எதிர்மறையான விஷயத்தை 2 நாளாகமம் 20ல் வாசிக்கிறோம் – கர்த்தரின் வலிமையை அனுபவிப்பதற்காக, பலவீனத்தை ஏற்றுக்கொள்வது. “உமக்கு விரோதமாய் ஏராளமான ஜனங்கள் வருகிறார்கள்,” என்று மக்கள் யோசபாத் அரசனிடம் கூறினார்கள். எனவே தனக்கும், தன் ஜனங்களுக்கும் உணவை ஒறுத்து, “யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான்” (வச. 3). பின்பு தேவனின் உதவியை நாடினார்கள். இறுதியில் தன் படையை தயார்படுத்தியபோது, கர்த்தரைத் துதித்துப்பாடும் பாடகர்களை படைக்கு முன்பாக நிறுத்தினான் (வச. 21). அவர்கள் பாட ஆரம்பித்தபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்தவர்களை ஒருவருக்கு விரோதமாய் ஒருவரை கர்த்தர் எழுப்பினதால், அவர்கள் தோல்வியடைந்தார்கள் (வச. 22).
 
யோசபாத்தின் முடிவு கர்த்தர்பேரில் இருந்த திடமான விசுவாசத்தைக் காட்டுகிறது. தன்னுடைய சுய வலிமை மீதும் தன் படை வலிமை மீதும் சாராமல், கர்த்தரைச் சார்ந்திருப்பதைத் தெரிந்துகொண்டான். நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நாமே கஷ்டப்பட்டு நம் சுய பெலத்தால் சரிசெய்ய முயற்சிக்காமல், நாம் கர்த்தரிடம் ஒப்புவித்து, அவரை நம் பெலனாக ஏற்றுக்கொள்வோம்.

பாலங்களைக் கட்டுதல்

எங்கள் குடியிருப்புப் பகுதியில்,வீடுகளைச் சுற்றி, உயரமான காங்க்ரீட் சுவர்கள் காணப்படும். பல சுவர்களின்மேல் மின்சார முள்கம்பிகளும் இருக்கும். திருடர்கள் வருவதைத் தடுப்பதற்காக இவை போடப்பட்டுள்ளன.
 
எங்கள் பகுதியில் அடிக்கடி மின்சாரம் தடைபடும். இதனால் பல சமயங்களில் எங்கள் வீட்டின் முன்புறம் உள்ள அழைப்புமணி  வேலை செய்வதில்லை. இதுபோன்ற சமயங்களில், உயரமான சுற்றுச்சுவர் இருப்பதால் எங்களைப் பார்க்க வருபவர்கள் சுட்டெரிக்கும் வெயில் அல்லது கொட்டும் மழையில் வெளியில் நிற்க நேரிடும். அழைப்புமணி வேலை செய்தாலும்,வந்திருப்பவர் யார் என்பதைப் பொறுத்தே அவர்களை உள்ளே அழைப்போம். எங்கள் சுற்றுச்சுவர் திருடர்கள் வராமல் தடுத்தாலும், அவை மற்றவர்களிடம் பாகுபாடு காண்பிக்கும் சுவர்களாக மாறிவிடுகின்றன. பார்க்க வந்திருப்பவர் அத்துமீறி நுழைபவராக இல்லாதபோதும் அந்தச் சுவர்கள் ஒரு தடையாக இருக்கின்றன.
 
இயேசு கிணற்றருகில் சந்தித்த  சமாரியப் பெண்ணுக்கும் பாகுபாடு குறித்த குழப்பம் ஏற்பட்டது. யூதர்களும் சமாரியர்களும் சம்பந்தம் கலப்பதில்லை. எனவே இயேசு தண்ணீர் கேட்டபோது, 'நீர் யூதனாயிருக்க,சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத் தா என்று எப்படிக் கேட்கலாம்?" (யோவான் 4:9) என்றாள். அவள் இயேசுவிடம் பேசியபோது,அவளிடமும்,அவள் அயலாரிடமும் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு அனுபவத்தைப் பெற்றாள் (வச. 39-42). விரோதம், பாரபட்சம் போன்ற தடுப்புச் சுவர்களைத் தகர்க்கும் பாலமாக இயேசு செயல்பட்டார்.
 
வேற்றுமை உணர்வு நம்மிடம் இருப்பது உண்மை. நம் வாழ்வில் அதை அடையாளப்படுத்த வேண்டும். எந்த தேசத்தவர்,அவர் சமூக அந்தஸ்து, புகழ் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல், இயேசு காட்டியதுபோல நாமும் மக்களைச் சந்திக்கலாம். அவர் பாலங்களைக் கட்ட வந்தார்.
 

நட்சத்திரங்களுக்கு அப்பால்

2011ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA-National Aeronatics and space association), விண்வெளி ஆராய்ச்சியில் முப்பது ஆண்டுகளை நிறைவு செய்ததைக் கொண்டாடியது. அந்த முப்பது ஆண்டுகளில் விண்கலன்கள் 355 பேரை விண்வெளிக்கு அழைத்துச் சென்றன. அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை ஏற்படுத்த உதவினர். ஐந்து விண்கலன்களுக்குப் பணி ஓய்வு கொடுத்தபிறகு,தற்போது தொலை-தூர விண்வெளி ஆராய்ச்சியில் நாசா கவனம் செலுத்துகிறது.
 
பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தைப் புரிந்துகொள்ள, மனித இனம் பெருமளவில் பணத்தையும், நேரத்தையும் செலவிட்டுள்ளது. சில விண்வெளி வீரர்கள் தங்கள் உயிரையும் தியாகம் செய்துள்ளனர். ஆனால் கர்த்தரின்மகத்துவத்திற்கான சான்று நம்மால் அளவிட முடியாதபடி பரந்து கிடக்கிறது.
 
இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கி, காப்பற்றுபவர் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் பேர்சொல்லி அழைக்கிறார் (ஏசா. 40:26) என்பதை நினைக்கும்போது, தேவனின் மகத்துவத்தை ஏன் தாவீது புகழ்ந்து பாடினார் (சங். 8:1) என்பது புரியும். கர்த்தர்ஸ்தாபித்த சந்திரனிலும், நட்சத்திரங்களிலும் (வச. 3) அவரது விரல் ரேகைகள் உள்ளன. வானத்தையும், பூமியையும் படைத்த கர்த்தர் அவற்றை ஆட்சி செய்தாலும், அவர் அன்புப் பிள்ளைகளாகிய நம் மேல் தனிப்பட்ட முறையில் அக்கறைகொண்டு நம் அருகில் இருக்கிறார் (வச. 4). நம்மிடம் ஒப்படைத்துள்ள இந்த உலகத்தைப் பாதுகாக்கவும், ஆராயவும் நமக்கு ஆற்றலையும், பொறுப்பையும், உரிமையையும் கொடுத்துள்ளார் (வச. 5-8).
 
நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இரவு நேர ஆகாயத்தை நாம் ஆராய்ச்சி செய்யும்போது, நம்மைப் படைத்தவர், விருப்பத்தோடும், உறுதியோடும் அவரைத் தேடும்படி நம்மை அழைக்கிறார். நம் உதடுகளில் இருந்து வெளிப்படும் ஒவ்வொரு ஜெபத்தையும், ஸ்தோத்திரப் பாடலையும் அவர் கேட்கிறார்.