செப்டம்பர், 2018 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread - Part 2

Archives: செப்டம்பர் 2018

அது மீனைக் குறித்ததல்ல

ஆஸ்திரேலியாவின் மேற்கு குயின்ஸ்லாந்து கடற்கரைக்கு அருகில் பலமுறை தென்பட்ட மிகாலூ என்ற ஹம்ப் பேக் வகை திமிங்கிலம்தான் முதல்முறையாக ஆவணப்படுத்தப்பட்ட, உடல் முழுதும் வெள்ளையாக இருக்கும் வெளிரி நோயால் பாதிக்கப்பட்ட திமிங்கிலமாகும். நாற்பது அடிக்கும் மேல் நீளமான உடல் கொண்ட அந்த அரிய திமிங்கிலத்தைக் காப்பதற்காக, ஆஸ்திரேலியா ஒரு தனிச் சட்டத்தை இயற்றியது.

 

தப்பி ஓடிய ஒரு தீர்க்கதரிசியை விழுங்குவதற்காக கர்த்தர் அனுப்பிய ஒரு பெரிய, அரிய மீனைப்பற்றி நாம் வேதாகமத்தில் வாசிக்கிறோம் (யோனா 1:17). பெரும்பாலானவர்களுக்கு இந்தக் கதை தெரியும். நியாயத்தீர்ப்பு குறித்த செய்தியை நினிவே மக்களுக்குச் சொல்லுமாறு யோனாவிடம் தேவன் கூறினார். ஆனால் அனைவரையும் – குறிப்பாக எபிரேயர்களை – துன்புறுத்தும் பழக்கம் கொண்ட நினிவே மக்களிடம் பேசுவதை யோனா விரும்பவில்லை. அதனால் அவர் தப்பி ஓடினார். ஆனால் நிலைமை மோசமாகியது. மீனின் வயிற்றில் இருந்த யோனா மனஸ்தாபப்பட்டார். இறுதியில் நினிவே மக்களுக்குப் பிரசங்கித்தார். அவர்களும் மனந்திரும்பினார்கள் (யோனா 3: 5-10).

 

இது ஒரு நல்ல கதை. ஆனால் இந்தக் கதை அதோடு முடியவில்லை. நினிவே மக்கள் மனஸ்தாபப்பட்டபோது யோனா அதிருப்தி அடைந்தான். “கர்த்தாவே நான் இதைச் சொல்லவில்லையா? நீர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன்” என்று விண்ணப்பம் செய்தார் (யோனா 4:2). சாவின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட யோனாவின் பாவகரமான கோபம் அதிகரித்து, என் பிராணனை எடுத்துக்கொள்ளும் என்று ஜெபிக்கத் தூண்டியது (வச. 3).

 

யோனாவின் கதை மீனைக் குறித்தது அல்ல. அது மனித சுபாவம் மற்றும் நம்மை நாடும் ஆண்டவருடைய சுபாவம் ஆகியவற்றைக் குறித்தது. “ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம் மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்” (II பேதுரு 3:9). இரக்கமற்ற நினிவே மக்களிடமும், அதிருப்தி அடையும் தீர்க்கதரிசிகளிடமும், உங்களிடமும், என்னிடமும் தேவன் அன்பாய் இருக்கிறார்.

அநேக அழகிய காரியங்கள்

ஓவியரும், மிஷனரி ஊழியருமான லிலியஸ் ட்ராட்டர் இறப்பதற்கு முன், தன் ஜன்னல் வழியாக பரலோக ரதம் ஒன்றை தரிசனமாகக் கண்டாள். அவளது நண்பர் “அநேக அழகான காரியங்களைக் காண்கிறாயா?” என்று கேட்டதாகவும், “ஆம், அநேகம், அநேகமான அழகான காரியங்களைக் காண்கிறேன்” என்று லிலியஸ் பதில் சொன்னதாகவும், அவளது வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

 

ட்ராட்டரின் வாழ்க்கையில் தேவனின் பங்கை அவளது கடைசி வார்த்தைகள் பிரதிபலிக்கின்றன. அவளது இறப்பில் மட்டுமல்லாது, அவளது வாழ்க்கை முழுவதும் கர்த்தர் பல அழகிய காரியங்களை அவளுக்கும், அவள் மூலமாகவும் வெளிப்படுத்தினார். ஒரு திறமை மிக்க ஓவியராக இருந்தாலும், கிறிஸ்துவை சேவிக்க, அல்ஜீரியாவில் மிஷனரியாகப் பணி செய்ய முடிவு செய்தாள். அவளது இந்த முடிவைக் குறித்து, அவளுக்கு ஓவியக்கலையைக் கற்றுக்கொடுத்த ஜான் ரஸ்கின் என்ற புகழ்பெற்ற ஓவியர் “திறமையை வீணடிக்கிறாள்” என்று கூறினார்.

 

இதேபோல், புதிய ஏற்பாட்டில், குஷ்டரோகியான சீமோன் வீட்டிற்கு வந்த ஒரு பெண் வெள்ளைக்கல் பரணியில் கொண்டுவந்த நளத தைலத்தை இயேசுவின் பாதத்தில் ஊற்றியபோது, அருகில் இருந்தவர்கள் அதை வீண் என்று நினைத்தார்கள். விலையுயர்ந்த அந்தத் தைலமானது, ஒரு ஆண்டிற்குக் கிடைக்கும் கூலிக்கு சமானமாக இருந்ததால், அதை எளியவர்களுக்குக் கொடுத்து உதவியிருக்கலாம் என்று அங்கிருந்த சிலர் நினைத்தார்கள். ஆனால் அந்தப் பெண்ணின் ஆழ்ந்த அர்ப்பணிப்பைப் பாராட்டிய இயேசு கிறிஸ்து “என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்” என்று கூறினார் (மாற்கு 14:6).

 

தினந்தோறும் கிறிஸ்துவின் ஒளி நம் வாழ்க்கையில் ஒளிவீசவும், அவரது அருமையை உலகுக்கு வெளிப்படுத்தவும் நாமும் முடிவெடுக்கலாம். சிலருக்கு அது ஒரு வீணான காரியமாகத் தோன்றலாம். ஆனால் நாம் சுயவிருப்பத்தோடு அவரை சேவிப்போமாக. அவருக்கு நாம் அநேக அழகிய காரியங்களைச் செய்திருக்கிறோம் என்று இயேசு கிறிஸ்து சொல்வாராக.

கர்த்தரின் வழியில் நடப்பது

“நாம் இந்த வழியாகப் போகவேண்டும்” என்று என் மகனின் தோளைத் தட்டிச் சொன்னேன். கூட்டத்தில் அவன் போகவிருந்த திசையிலிருந்து அவனை மாற்றி, அவன் அம்மாவுக்கும், சகோதரிகளுக்கும் பின்னால் போகச் சொன்னேன். நாங்கள் குடும்பமாகச் சென்றிருந்த உல்லாசப் பூங்காவில், இதையே பலமுறை அவனிடம் கூறினேன். சோர்வடைந்திருந்த அவன் கவனம் எளிதில் சிதறியது. அவர்களை அவன் பின் தொடர்ந்து போனால் என்ன? என்று நினைத்தேன்.

 

நானும் இதையே எத்தனை தடவை செய்கிறேன்? எத்தனை தடவை கர்த்தருக்கு கீழ்ப்படிந்து அவரோடு நடக்காமல், எத்தனை தடவை கர்த்தருடைய வழிகளைத் தெரிந்துகொள்வதற்குப் பதிலாக, என் சுய ஆசைகளால் ஈர்க்கப்பட்டிருக்கிறேன், என்று அப்போதுதான் நான் உணர்ந்தேன்.

 

இஸ்ரவேலுக்காக கர்த்தர் ஏசாயா மூலம் சொன்ன வார்த்தைகளை யோசித்துப்பாருங்கள்: “நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்” (ஏசாயா 30:21). அதே அதிகாரத்தின் முன்பகுதியில் கர்த்தர் தம் ஜனங்களின் கீழ்ப்படியாமையும், எதிர்ப்பையும் கடிந்து கொண்டார். ஆனால் அவர்கள் மனந்திரும்பி தங்கள் சுய வழிகளின்மேல் அல்லாமல், கர்த்தரின் பெலத்தில் நம்பிக்கை கொண்டிருந்தால் (வச. 15), கர்த்தர் தன் இரக்கத்தையும், மன உருக்கத்தையும் காண்பிப்பதாக வாக்குக் கொடுத்தார் (வ. 18).

 

தம் ஆவியின் மூலமாக நம்மை வழிநடத்துவதாக கர்த்தர் கொடுத்த வாக்குறுதி, அவரது இரக்கத்தின் வெளிப்பாடாகும். நமது விருப்பங்களை அவரிடத்தில் எடுத்துக்கூறி, நமக்கு என்ன முன்குறித்திருக்கிறார் என்பதை நாம் ஜெபத்தில் கேட்கும்போது அது நடந்தேறும். நாம் அவரில் நம்பிக்கை வைத்து, அவருடைய சத்தத்துக்குச் செவி கொடுக்கும்போது தேவன் பொறுமையாக, ஒவ்வொரு நாளும், படிப்படியாக, நம்மை வழிநடத்துவதற்காக நான் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன்.

உன் சகோதரனுக்குச் செவிகொடுப்பது

தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன். யாக்கோபு 5:20

 

“நான் சொல்வதைக் கேள், நான் உன் அண்ணன்”. எங்கள் வீட்டிற்கு அருகில் ஒரு சிறுவன், தன்னைவிட்டு தூரமாக விலகிச் செல்லவிருந்த தன் தங்கையிடம் அக்கறையுடன் கூறினான். அந்தச் சூழ்நிலையில் எது சிறந்தது என்று அந்தச் சிறுவனால் அனுமானிக்க முடிந்தது.

 

நம்மில் எத்தனை பேர் நம் சகோதரன் அல்லது சகோதரியின் ஞானமான அறிவுரைகளை ஏற்க மறுத்திருக்கிறோம்? நல்ல அறிவுரையை ஏற்காததின் பின்விளைவுகளை நீங்கள் ஒருவேளை சந்தித்திருந்தால், உங்களைப்போல் நிறையபேர் இருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ளுங்கள்.

 

கிறிஸ்தவ விசுவாசிகளாக, நமக்குக் கிடைத்திருக்கும் பெரிய கொடைகளில் ஒன்றுதான் குடும்பம் – கர்த்தரில் நாம் அனைவரும் கொண்டிருக்கும் விசுவாசத்தினால் ஆவியில் இணைக்கப்பட்ட விசுவாசம், குடும்பம். கர்த்தரையும், ஒருவரை ஒருவர் நேசிக்கும் பண்பட்ட சகோதர சகோதரிகள் இந்தக் குடும்பத்தில் உண்டு. எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த அந்தச் சிறுவனைப்போல, ஒரு எச்சரிக்கும் வார்த்தை அல்லது திருத்துதல் நமக்கும் சில சமயங்களில் தேவைப்படுகிறது. நம்மை யாரோ புண்படுத்தும்போது அல்லது நாம் யாரையோ புண்படுத்தும்போது இது மிகவும் பொருந்தும். சரியான காரியத்தைச் செய்வது கடினம்தான். ஆனால் மத்தேயு 18:15-20ல் இயேசுவின் வார்த்தைகள் இதுபோன்ற ஆவிக்குள்ளான குடும்பங்களில் மனஸ்தாபம் ஏற்படும்போது என்ன செய்யவேண்டும் என்று எடுத்துக்கூறுகிறது.

 

அதிர்ஷ்டவசமாக, கிருபையின் பரம பிதா, கர்த்தரையும், மற்றவர்களையும் கனம்பண்ணுவதற்கு நமக்கு உதவி செய்ய நம் வாழ்க்கையில் சில மக்களை வைத்திருக்கிறார். அவர்கள் சொல்வதை நாம் கேட்கும்போது, குடும்பத்தில் எல்லாம் சுமூகமாக இருக்கும் (வச. 15).

ஊக்குவிப்பவர்களின் ஆசீர்வாதம்

ராஜாவின் பேச்சு என்று அர்த்தம் கொள்ளும் த கிங்ஸ் ஸ்பீச் (The King’s Speech) என்ற 2010ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட திரைப்படம், தன் சகோதரன் அரியணையைத் துறந்ததால் எதிர்பாராத விதமாக மன்னராகும் இங்கிலாந்து அரசர் ஜார்ஜ் VI ஐப் பற்றியது. இரண்டாம் உலகப்போர் வரக்கூடும் என்ற சூழ்நிலையில், பிரபலமாகி வந்த வானொலியில் பேச, நன்கு பேசக்கூடிய தலைவர் வேண்டும் என்று அரசு அதிகாரிகள் விரும்பினார்கள். ஆனால் ஜார்ஜ் VI மன்னருக்கு திக்குவாய் ஒரு பெரிய தடையாக இருந்தது. 

 

ஜார்ஜ் மன்னரின் மனைவி எலிசபெத் அந்தத் திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருந்த விதம் என்னை அதிகம் கவர்ந்தது. ஜார்ஜ் மன்னர் தனது திக்குவாய் பிரச்சனையை சமாளிக்க முயற்சி செய்யும்போது, எலிசபெத் தொடர்ந்து அவரை ஊக்கப்படுத்துகிறார். மன்னரது பிரச்சனையைத் தாண்டி, போரின்போது நல்ல முறையில் அவர் ஆட்சி செய்ய எலிசபெத்தின் மாறாத அர்ப்பணிப்பு பெரிதும் உதவியது.

 

கடினமான சூழ்நிலைகளில் நிலையான ஆதரவு அளித்து ஊக்குவித்தவர்களைப்பற்றி வேதாகமம் எடுத்துக்கூறுகிறது. இஸ்ரவேலின் யுத்தங்களின்போது, மோசேக்கு ஆரோன் மற்றும் ஊர் ஆகிய இருவரின் ஆதரவு கிடைத்தது (யாத்திராகமம் 17:8-16). எலிசபெத் கர்ப்பந்தரித்திருந்த தன் உறவினர் மரியாளை ஊக்கப்படுத்தினாள் (லூக். 1:42-45).

 

பவுல் மனந்திரும்பிய பிறகு, அவருக்கு பர்னபாவின் ஆதரவு தேவைப்பட்டது. பர்னபா என்ற பெயருக்கு “ஆறுதலின் மகன்” என்று பொருள். சீஷர்கள் பவுலைக்கண்டு பயந்தபோது, தனக்கிருந்த நற்பெயர் கெடும் வாய்ப்பு இருந்தாலும், பவுலுக்காக உத்தரவாதம் அளித்தார் (அப்போஸ்தலர் 9:27). கிறிஸ்தவ சபையினர் பவுலை ஏற்றுக்கொள்ள பர்னபாவின் உத்தரவாதம் தேவைப்பட்டது. பின்னர் பர்னபா பவுலின் பயணத்திலும், பிரசங்கத்திலும் உற்ற துணையாக இருந்தார் (அப்போஸ்தலர் 14). ஆபத்துகள் சூழ்ந்திருந்தாலும், அவர்கள் இருவரும் சேர்ந்து சுவிசேஷத்தை அறிவித்தனர்.

 

கிறிஸ்தவ விசுவாசிகள் இன்றும் “ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்ய” அழைக்கப்படுகிறார்கள். பிறரை, குறிப்பாக கஷ்டமான சூழ்நிலையில் இருப்பவர்களை, ஊக்குவிக்க விருப்பம் கொண்டவர்களாக நாம் இருப்போமாக.