ராஜாவின் பேச்சு என்று அர்த்தம் கொள்ளும் த கிங்ஸ் ஸ்பீச் (The King’s Speech) என்ற 2010ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட திரைப்படம், தன் சகோதரன் அரியணையைத் துறந்ததால் எதிர்பாராத விதமாக மன்னராகும் இங்கிலாந்து அரசர் ஜார்ஜ் VI ஐப் பற்றியது. இரண்டாம் உலகப்போர் வரக்கூடும் என்ற சூழ்நிலையில், பிரபலமாகி வந்த வானொலியில் பேச, நன்கு பேசக்கூடிய தலைவர் வேண்டும் என்று அரசு அதிகாரிகள் விரும்பினார்கள். ஆனால் ஜார்ஜ் VI மன்னருக்கு திக்குவாய் ஒரு பெரிய தடையாக இருந்தது.

ஜார்ஜ் மன்னரின் மனைவி எலிசபெத் அந்தத் திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருந்த விதம் என்னை அதிகம் கவர்ந்தது. ஜார்ஜ் மன்னர் தனது திக்குவாய் பிரச்சனையை சமாளிக்க முயற்சி செய்யும்போது, எலிசபெத் தொடர்ந்து அவரை ஊக்கப்படுத்துகிறார். மன்னரது பிரச்சனையைத் தாண்டி, போரின்போது நல்ல முறையில் அவர் ஆட்சி செய்ய எலிசபெத்தின் மாறாத அர்ப்பணிப்பு பெரிதும் உதவியது.

கடினமான சூழ்நிலைகளில் நிலையான ஆதரவு அளித்து ஊக்குவித்தவர்களைப்பற்றி வேதாகமம் எடுத்துக்கூறுகிறது. இஸ்ரவேலின் யுத்தங்களின்போது, மோசேக்கு ஆரோன் மற்றும் ஊர் ஆகிய இருவரின் ஆதரவு கிடைத்தது (யாத்திராகமம் 17:8-16). எலிசபெத் கர்ப்பந்தரித்திருந்த தன் உறவினர் மரியாளை ஊக்கப்படுத்தினாள் (லூக். 1:42-45).

பவுல் மனந்திரும்பிய பிறகு, அவருக்கு பர்னபாவின் ஆதரவு தேவைப்பட்டது. பர்னபா என்ற பெயருக்கு “ஆறுதலின் மகன்” என்று பொருள். சீஷர்கள் பவுலைக்கண்டு பயந்தபோது, தனக்கிருந்த நற்பெயர் கெடும் வாய்ப்பு இருந்தாலும், பவுலுக்காக உத்தரவாதம் அளித்தார் (அப்போஸ்தலர் 9:27). கிறிஸ்தவ சபையினர் பவுலை ஏற்றுக்கொள்ள பர்னபாவின் உத்தரவாதம் தேவைப்பட்டது. பின்னர் பர்னபா பவுலின் பயணத்திலும், பிரசங்கத்திலும் உற்ற துணையாக இருந்தார் (அப்போஸ்தலர் 14). ஆபத்துகள் சூழ்ந்திருந்தாலும், அவர்கள் இருவரும் சேர்ந்து சுவிசேஷத்தை அறிவித்தனர்.

கிறிஸ்தவ விசுவாசிகள் இன்றும் “ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்ய” அழைக்கப்படுகிறார்கள். பிறரை, குறிப்பாக கஷ்டமான சூழ்நிலையில் இருப்பவர்களை, ஊக்குவிக்க விருப்பம் கொண்டவர்களாக நாம் இருப்போமாக.