இங்கிலாந்தில் ஜெர்ஸி மிருகக்காட்சி சாலையில் உள்ள 20 அடி உயரம்கொண்ட கொரில்லா வேலித் தடுப்புக்குள், 1986ஆம் ஆண்டு ஐந்து வயது லெவன் மெரிட் விழுந்துவிட்டான். அவன் பெற்றோர்களும், பார்வையாளர்களும் உதவி வேண்டித் தவித்தபோது, ஜம்போ என்ற சில்வர்பேக் வகை ஆண் கொரில்லா அசைவற்றுக் கிடந்த சிறுவனுக்கும் மற்ற கொரில்லாக்களுக்கும் நடுவே பாதுகாப்பாக நின்றுகொண்டது. பின்பு சிறுவனின் முதுகை மெதுவாகத் தடவிக் கொடுத்தது. லெவன் அழ ஆரம்பித்தபோது, மிருகக்காட்சி சாலை ஊழியர்களும், மருத்துவ ஊர்தி ஓட்டுநரும் அவனைக் காப்பாற்றுவதற்கு வசதியாக, ஜம்போ மற்ற கொரில்லாக்களை தங்கள் தடுப்புப்பகுதிக்குள் போகச்செய்தது. முப்பது ஆண்டுகள் ஆனபிறகும், மென்மையான ஜம்போ ஒரு பாதுகாவலனாக தன்னை காத்துக்கொண்டதையும், எதிர்பாராத விதமாக நல்ல முறையில் நடந்துகொண்டதையும், இன்றும் லெவன் ஆச்சரியமாகப் பேசுகிறார். அந்த நிகழ்ச்சி கொரில்லாக்கள் குறித்த அவர் கண்ணோட்டத்தை மாற்றியது.

கர்த்தர் எப்படி நடந்துகொள்வார் என்ற எலியாவின் எதிர்பார்ப்புக்கு மாறாக, கர்த்தாதி கர்த்தர், கன்மலைகளை உடைக்கக்கூடிய பெருங்காற்று மூலமாகவும், பூமி அதிர்ச்சி மூலமாகவும், அக்கினி மூலமாகவும், தன்னைப்பற்றி எப்படி நினைக்கக்கூடாது என்பதை எலியாவுக்கு உணர்த்தினார். அதன்பின், அமர்ந்த மெல்லிய சத்தம் மூலம் கர்த்தர் தன் இருதயத்தையும், தன் பிரசன்னத்தையும் உணர்த்தினார் (I இராஜாக்கள் 19:11-12).

எலியா இதற்குமுன் கர்த்தரின் வல்லமையைப் பார்த்திருக்கிறார் (18:38-39). ஆனால் மகத்துவமான, பயத்தைத் தரக்கூடிய கடவுள்களையும் விட மேலானவராக அறியப்பட விரும்பும் கர்த்தரை அவர் முழுவதுமாக புரிந்துகொள்ளவில்லை (19:10, 14).

இறுதியில், அமர்ந்த மெல்லிய சத்தத்தின் அர்த்தம் வல்லமை நிறைந்த, மென்மையான இயேசுவில் வெளிப்பட்டது. இயேசு “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என்று சொன்னார். பின்பு அவர் சிலுவையில் அறையப்பட அமைதியாக தன்னை ஒப்புக்கொடுத்தார் – நம்மை நேசிக்கும் ஆண்டவரின் எதிர்பாராத, கருணை நிறைந்த செயலாகும்.