ஆகாயத் தோட்டம்
நாங்கள் லண்டனிலிருந்த போது, நானும் என் மனைவி மார்லென்னும் ஆகாயத் தோட்டத்தைப் பார்க்க ஒரு நண்பன் ஏற்பாடு செய்திருந்தார். லண்டனின் வர்த்தக மாவட்டத்தில் முப்பத்தைந்து அடுக்கு கட்டிடத்தின் மேல் தளத்தில் கண்ணாடியால் சூழப்பட்ட ஒரு தளம் முழுவதும் மரங்கள், செடிகள் மற்றும் பூக்களால் நிறைந்துள்ளது. ஆனால், அந்த உயர்ந்த இடம் எங்கள் கவனத்தை ஈர்த்தது. நாங்கள் அந்த உயரத்திலிருந்து 500 அடி கீழே பார்க்கும் போது பரிசுத்த பவுலின் கதீட்ரல், லண்டன் கோபுரம், மற்றும் அநேகக் காட்சிகளைப் பார்த்து வியந்தோம். அந்த தலைநகரின் முழு அழகும் எங்களை பிரமிக்கச் செய்து, சரியான கண்ணோட்டத்தைக் குறித்து கற்றுக்கொள்ள எங்களுக்குதவியது.
நாம் அநுபவிக்கும் யாவற்றையும் தேவன் சரியான கோணத்தில் காண்கின்றார். சங்கீதக்காரன், “கர்த்தர் கட்டுண்டவர்களின் பெருமூச்கைக் கேட்கவும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும் தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பார்த்து, வானங்களிலிருந்து பூமியின் மேல் கண்ணோக்கமானார்” (சங். 102:19-20) எனக் கூறுகின்றார்.
சங்கீதம் 102ல் குறிப்பிட்டுள்ள வருத்தப்பட்ட ஜனங்களைப் போன்று, நாமும் தற்பொழுதுள்ள போராட்டங்களில் இழுத்து அடைக்கப்பட்டு, உதவியற்ற நிலையில் முனகிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், தேவன் நம் வாழ்வை ஆரம்பத்திலிருந்து முடிவுவரை காண்கின்றார். நம்முடைய கண்களை மறைக்கின்ற காரியங்களால் தேவன் ஒருபோதும் மறைக்கப்படுவதில்லை. சங்கீதக்காரன் எதிர்பார்ப்பது போல அவருடைய நேர்த்தியான கண்ணோட்டம் விடுதலைக்கு நேராக சென்று, கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களையும் விடுதலையாக்குகின்றது (வச. 19, 27-28).
கடினமான நேரங்களில் நாம் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், அடுத்துவருவது என்னவென்று நமக்குத் தெரியாது, ஆனால், தேவன் அறிவார். நமக்கு முன்பாகவுள்ள ஒவ்வொரு மணித்துளியிலும் நாம் தேவனை நம்பி வாழ்வோம்.
இயேசு கையை நீட்டி
சில வேளைகளில் நம் வாழ்வு அநேக வேலைகளால் நெருக்கப்பட்டு விடுகிறது. கடினமான வகுப்புகள், சோர்வடையச் செய்யும் வேலை, குளியல் அறை கழுவப்பட வேண்டும், அந்த நாளில் ஒருவரோடு காப்பி அருந்த அழைக்கப்பட்டுள்ளோம். இங்கேதான் நான் ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களாவது வேதத்தை வாசிக்க என்னைக் கட்டாயப்படுத்திக்கொண்டு, அடுத்த வாரம் நான் அதிக நேரம் என் தேவனோடு செலவழிப்பேன் என எனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டேன். எந்த உதவியையும் கேட்க மறந்துவிட்டேன் என்று எண்ணி அவருக்கு நேராகத் திருப்பப்பட்டேன்.
பேதுரு இயேசுவை நோக்கி, தண்ணீர் மேல் நடந்தபோது, காற்றும் அலைகளும் அவனைத் திசை திருப்பிவிட்டன. என்னைப் போன்று அவன் மூழ்க ஆரம்பித்தான் (மத். 14:29-30). ஆனால், அவன் இயேசுவை நோக்கிக் கூப்பிட்டபோது, “உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்துக் கொண்டார்” (வச. 30-31).
நான் என்னுடைய வேலைகளில் மிகவும் மூழ்கி விட்டபின்புதான், திருப்பப்பட்டு இவற்றையெல்லாம் தேவனிடம் கொடுத்திருக்கலாமே என பின்னர் நினைத்ததுண்டு. ஆனால், தேவன் அப்படி வேலை செய்பவரல்ல. நாம் எப்பொழுது அவரிடம் உதவிக்காகத் திரும்புகிறோமோ அப்பொழுது தேவன் எந்த தயக்கமுமின்றி தம் கையை நீட்டுகின்றார்.
நம் வாழ்வின் குழப்பங்களோடு நாம் போராடிக் கொண்டிருக்கும் போது, அந்தப் புயலின் மத்தியில் தேவன் நம்மோடிருக்கிறார் என்பதைக் காண மறந்து விடுகிறோம். இயேசு பேதுருவிடம், “அற்ப விசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய்?” என்றார் (வச. 31). நாம் எந்தப் பிரச்சனை வழியே சென்று கொண்டிருந்தாலும் சரி, தேவன் அங்கிருக்கின்றார், தேவன் இங்கிருக்கின்றார், நம் அருகிலிருக்கின்றார். இப்பொழுதும் தம் கைகளை நீட்டி நம்மைக் காப்பாற்ற ஆயத்தமாயிருக்கிறார்.
இருதயத்தின் பசி
சிறு சிறு வேலைகளுக்காக, நான் என் கணவனோடு காரில் சென்றுகொண்டிருந்த போது, இமெயில்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அத்தெருவில், எங்களின் வலப்பக்கம், நாங்கள் சற்றே கடந்த ஒரு டோனட் கடையின் விளம்பரம் என் போனில் வந்தது. உடனே என் வயிறு பசியினால் கூப்பிட ஆரம்பித்தது. வியாபாரிகள் தங்கள் பொருட்களை மக்கள் வாங்கும் படி அவர்களை வசப்படுத்த தொழில்துறை எவ்வளவு உதவுகிறது என நான் வியந்தேன்.
நான் இமெயில் பார்ப்பதை நிறுத்திவிட்டு, தேவன் என்னை அவரருகில் இழுத்துக் கொள்ள எவ்வளவு ஆவலாயிருக்கிறார் என்பதைத் குறித்து ஆழ்ந்து சிந்திக்கலானேன். நான் எங்கிருக்கிறேன், என்னுடைய திட்டங்களை நிறைவேற்ற எப்படி ஆர்வமுள்ளவனாயிருக்கிறேன் என்பதை தேவன் அறிவார். என்னுடைய வயிறு அந்த டோனட்டை அடையவேண்டுமென கூப்பிட்டது போல, என்னுடைய இருதயம் தேவன் மீதுள்ள தாகத்தால் கூப்பிடுகிறதா?
யோவான் 6ல், இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த அற்புதத்தைக் கண்ட சீஷர்கள், இயேசுவிடம் மிக ஆவலாக, “ஆண்டவரே, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்குத் தர வேண்டும்” (வச. 33-34) என்கின்றனர். வசனம் 35ல் இயேசு அவர்களை நோக்கி, ‘ ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்” என்றார். இயேசுவோடு நாம் எப்பொழுதும் தொடர்பில் இருந்தால் அது நம் அனுதின வாழ்விற்கும் தொடர்ந்து ஊட்டத்தைக் கொடுக்கிறது என்பது ஆச்சரியத்தைக் கொடுக்கிறதல்லவா!
என் உடலின் தேவையை அந்த டோனட் கடையின் விளம்பரம் குறிவைத்தது போல, என்னுடைய இருதயத்தின் நிலையை எப்பொழுதும் அறிந்திருக்கின்ற தேவன், என்னுடைய எல்லாகாரியங்களிலும் அவர் எனக்குத் தேவை என்பதையுணர்ந்து, அவராலே மட்டும் தரக் கூடியவற்றை நான் பெற்றுக் கொள்ளும்படி என்னை அழைக்கின்றார்.
கர்த்தர் பேசுகின்றார்
யோபு புத்தகத்தில் வருகின்ற ஒவ்வொரு உரையாடலும், இவ்வுலகில் ஏன் வேதனைகள் வருகின்றன என்பதைக் குறித்தேயிருப்பதைக் காணலாம். ஆனால், இந்த உரையாடல்கள் எவ்விதத்திலும் யோபுவிற்கு உதவவில்லை. யோபு இருந்தது சந்தேக நெருக்கடியிலல்ல, அது உறவின் நெருக்கடி. அவனால், தேவன் மீது நம்பிக்கையாயிருக்க முடியுமா? எல்லாவற்றிற்கும் மேலாக யோபுவின் தேவை ஒன்றே, தேவன் அவனுக்கு தரிசனமாகி, அவனுடைய இந்த பரிதாப நிலைக்கு காரணமென்ன என்பதை விளக்குமாறு கேட்கின்றான். தேவனை முகமுகமாய் சந்திக்க விரும்பினான்.
இறுதியாக யோபுவின் வேண்டுதல் கேட்கப்பட்டது. யோபுவின் நண்பன் எலிகூ, தேவன் யோபுவைச் சந்திக்க அவனுக்கு எந்தத் தகுதியுமில்லை என விளக்கமளித்த போது, அதற்கு மாறாக தேவன் யோபுவிற்கு தரிசனமாகிறார் (யோ. 38:1).
தேவன் கேட்பவற்றிற்குப் பதிலளிக்க யோபுவோ, அவனுடைய நண்பர்களோ, வேறு எவருமே தயாராக இல்லை. யோபு தேவனிடம் கேட்கும்படி ஒரு பெரிய பட்டியல் நிறைய கேள்விகளை வைத்திருந்தான். ஆனால் யோபு அல்ல தேவனே கேள்விகளைக் கேட்கின்றார். “இப்போதும் புருஷனைப் போல், இடைக்கட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன், நீ எனக்கு உத்தரவு சொல்லு” (வச. 3) என ஆரம்பிக்கின்றார். யோபுவின் வேதனைகளையும், பிரச்சனைகளையும் குறித்த உரையாடலைக் கொண்டிருந்த முப்பத்தைந்து அதிகாரங்களையும் தள்ளிவிட்ட, கர்த்தர் அற்புதமான இவ்வுலகைக் குறித்த ஒரு கெம்பீரமான கவிதைக்குள் வழிநடத்துகின்றார்.
அனைத்தையும் படைத்த தேவனுக்கும் குறுகிப்போன யோபுவைப் போன்ற மனிதனுக்குமுள்ள மிகப்பெரிய வேறுபாட்டை, தேவனுடைய வார்த்தைகள் வரையறுக்கின்றன. என்னுடைய கேள்விகளுக்கு விடையளிக்க யாரேனும் உளரோ? என்ற யோபுவின் மிகப் பெரிய கேள்விக்கு தெள்ளத் தெளிவான பதிலை தேவனுடைய பிரசன்னம் தருகிறது. யோபுவே பதிலளிக்கின்றான், “நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன்” என்கின்றான் (42:3)
நீர்ச்சுழிகளில் படகுசவாரி
படகு சவாரி வழிகாட்டி எங்கள் குழுவினரோடு வந்து, நதியின் அக்கரை வரை பாதுகாப்பாய் வழிநடத்தினார். நாங்களனைவரும் உயிர்காப்பு உடைகளைப் போட்டுக் கொள்ளவும் துடுப்புகளை இறுகப் பற்றிக் கொள்ளுமாறும் கூறினார். நாங்கள் படகில் ஏறியதும் படகு சமநிலையில் இருக்கும்படி நாங்கள் ஒவ்வொருவரும் அமர வேண்டிய இடத்தையும் காட்டினார். அது நாங்கள் சுழல்களின் வழியே செல்லும் போது படகிற்கு நிலைப்புத் தன்மையைத் தருமெனக் கூறினார். இந்த நீர் வழிப் பயணத்தில் ஏற்படும் பரபரப்பான சூழல்களை எடுத்துக் கூறி, விரிவான வழிமுறைகளை நாங்கள் கவனமாகக் கேட்கும்படி கூறினார். நாங்கள் அவற்றைச் சரியாகக் கடைபிடித்தால், எங்கள் படகை வெற்றியாக அந்தக் கொந்தளிக்கும் வெண் நீரின் வழியே ஓட்டிச் செல்ல முடியும் என தெரிவித்தார். அத்தோடு நாங்கள் செல்லும் வழியில் பயங்கர வேளைகளையும் சந்திக்க நேரும், ஆனாலும் எங்கள் பயணம் பரவசமூட்டுவதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் என உறுதியாகக் கூறினார்.
நம்முடைய வாழ்க்கையும் சில வேளைகளில், கொந்தளிக்கும் வெண் நீர் படகு பயணம் போலவே அமைகிறது. அதுவும் நாம் எதிர்பார்ப்பதையும் விட அதிகமான சுழல் நீரோட்டங்களைக் கொண்டதாக அமைகிறது. நாம் மோசமான விளைவுகளைக் கண்டு பயப்படும் போது, ஏசாயா தீர்க்கன் மூலம் தேவன், இஸ்ரவேலருக்குக் கொடுத்த வாக்குத்தத்தம், நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி நம்மை வழிநடத்த உதவுகிறது. “நீ ஆறுகளைக் கடக்கும்போது. அவைகள் உன்மேல் புரளுவதில்லை” (ஏசா. 43:2) என்பது தேவனுடைய வாக்குத்தத்தம். இஸ்ரவேலர் தங்கள் பாவத்தின் விளைவாக, பிறநாட்டினரால் அடிமைகளாகப் பிடிக்கப்பட்டபோது தேவன் அவர்களைத் தள்ளினார் என்ற பயம் அவர்களை மேற் கொண்டது. ஆனால், தேவன் அவர்களோடு இருப்பதாக வாக்கையும், உறுதியையும் கொடுக்கின்றார். ஏனெனில், தேவன் அவர்களை நேசிக்கின்றார் (வச. 2,4).
கடினமான தண்ணீரைக் கடக்கும்போது தேவன் நம்மைக் கைவிடுவதில்லை. சுழல்களையும், ஆழ்ந்த பயத்தையும், வேதனைதரும் சோதனைகளையும் நாம் கடக்கும் போது, தேவன் நம் வழிகாட்டியாக நம்மோடு வருகிறார் என நம்புவோம், ஏனெனில், அவர் நம்மை நேசிக்கின்றார். நம்மோடிருப்பதாக வாக்களித்துள்ளார்.