எல்லோரையும் விட வலிமை மிக்கவர்
இக்குவாசு நீர்வீழ்ச்சி பிரேசிலுக்கும் அர்ஜென்டினாவுக்கும் இடையே உள்ள எல்லையில் உள்ளது. அது 2.7 கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்து காணப்படும்; இக்குவாசு ஆற்றில் 275 நீர்வீழ்ச்சிகள் கூடிய வியக்கத்தக்க அழகிய நீர் வீழ்ச்சியாகும். பிரேசில் பக்கம் விழும் நீர் வீழ்ச்சியின் அருகில் உள்ள சுவற்றில், “திரளான தண்ணீர்களின் இரைச்சலைப் பார்க்கிலும், சமுத்திரத்தின் வலிமையான அலைகளைப் பார்க்கிலும், கர்த்தர் உன்னதத்திலே வல்லமை உள்ளவர்” (சங். 93:4) என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளன. அந்த வசனத்திற்கு கீழாக “நமது அனைத்து துன்பங்களையும் விட தேவன் மேலானவர்” என்ற வார்த்தைகள் காணப்பட்டன.
இராஜாக்கள் அரசாண்ட அந்தக் காலத்தில் தேவனே எல்லோரையும் ஆழக்கூடிய முதன்மையான உயர்சிறப்புடைய இராஜாவென்று சங்கீதம் 93யை எழுதியவர் அறிந்திருந்தார். “கர்த்தர் ராஜரீகம் பண்ணுகிறார். உமது சிங்காசனம் பூர்வ முதல் உறுதியானது; நீர் அனாதியாய் இருக்கிறீர்” (வச. 1,2) என்று எழுதினார். வெள்ளங்களோ, அலைகளோ எவ்வளவு உயரமாக எழும்பினாலும், தேவன் அவற்றைவிட பெரியவராக இருக்கிறார்.
நீர் வீழ்ச்சியின் பேரோசை உண்மையில் மிகக் கம்பீரமான ஓசையாக இருக்கும். ஆனால் அளவிற்கு மீறிய வேகத்தில் நீர் வீழ்ச்சியை நோக்கி வரும் நீரோட்டத்தில் இருப்பது மிக ஆபத்தானது. ஒருவேளை இன்று உங்களுடைய நிலைமை அதைப்போலவே ஆபத்தில் இருக்கலாம். சரீரப் பிரகாரமான பிரச்சனைகள், அல்லது பொருளாதாரரீதியில் ஏற்பட்ட நஷ்டங்கள் அல்லது உறவுகளில் ஏற்பட்ட முறிவுகள் போன்றவை மிகவும் பெரிதாக அச்சமூட்டுபவைகளாக இருப்பதினால், நீங்கள் நீர்வீழ்ச்சியின் மேலிருந்து கீழே விழும் அனுபவத்தை பெற்றுக் கொண்டிருக்கலாம். அப்படிப்பட்ட சமயங்களில் ஒரு கிறிஸ்தவராக பாதுகாப்பு அருளக்கூடிய ஒருவர் உண்டு. “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும், நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவர்.” ஒருவர் உண்டு, அவரே நமது கர்த்தராவார் (எபே. 3:20). ஏனெனில் அவர் நமது அனைத்துத் துன்பங்களைவிட மேலானவர்.
குறிக்கப்பட்ட விவரங்களுக்கு மேலாக
என்னுடைய ஊரிலிருந்த ஒரு ஆலயத்தில் தேவனுடைய அன்பும் கிருபையும் அனைவருக்கும் உண்டு என்பதை விளக்கத்தக்கதான மிகவும் சிறப்பான வரவேற்பு அட்டையைப் பயன்படுத்தினார்கள். “நீங்கள் ஒரு பரிசுத்தவானோ, ஒரு பாவியோ, தோல்வி அடைந்தவரோ, வெற்றி பெற்றவரோ, குடிகாரரோ? மேலும் மாய்மாலக்காரர்கள், ஏமாற்றுபவர்கள், பயங்கரமானவர்கள், தகுதியற்றவர்கள் பாவத்தில் போராடும், பலத்தரப்பட்ட மக்களில் யாராக இருந்தாலும் உங்களை இங்கே வரும்படி அன்புடன் வரவேற்கிறோம்”,
என்ற வாசகங்கள் அந்த அட்டையில் இருந்தன. “ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் ஆராதனை வேளையில் சபையார் அனைவரும் இந்த அட்டையிலுள்ள வாசகங்களை சத்தமாக வாசிப்போம்” என்று அந்த சபைப் போதர்களில் ஒருவர் என்னிடம் கூறினார்.
நாம் யாரென்று கூறும் விளக்கங்களை நாம் எத்தனை முறை ஏற்றுக் கொள்ளுகிறோம்? நாம் மிக எளிதாக பிறரைக் குற்றப்படுத்தி விடுகிறோம். தேவ கிருபையானது, நமது சொந்த அறிவுத் திறமையின்படி இல்லாமல், தேவனுடைய அன்பில் வேர் கொண்டுள்ளதால் நம்மீது கூறப்படும் அனைத்து தேவையற்ற விளக்கங்களும் அர்த்தமற்றதாகிவிடுகிறது. நம்மை நாமே மிகவும் சிறந்தவர்களாகவோ, மிகவும் மோசமானவர்களாகவோ, திறமைசாலிகளாகவோ, திறமையற்றவர்களாகவோ கருதிக் கொண்டாலும், நாம் அவர் மூலமாக நித்திய ஜீவனை இலவசமான ஈவாக பெற்றுக் கொள்ளலாம். “நாம் பெலனற்றவர்களாக இருக்கும் போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரர்களுக்காக மரித்தார்” (ரோம. 5:6) என்று பவுல் அப்போஸ்தலன் ரோமாபுரியிலுள்ள விசுவாசிகளுக்கு நினைப்பூட்டுகிறார்.
நமது சொந்த பெலனினால் நாம் நம்மை மாற்றி அமைத்து கொள்ளவேண்டுமென்று கர்த்தர் விரும்பவில்லை. நாம் இருக்கும் வண்ணமாகவே அவரிடம் வந்து, அவர் அருளும் நம்பிக்கை, சுகம், விடுதலையைப் பெற்றுக் கொள்ளுபடி அவர் நம்மை அழைக்கிறார். “நாம் பாவிகளாய் இருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளக்கப்பண்ணுகிறார்” (வச. 8). நாம் இருக்கும் வண்ணமாகவே நம்மை ஏற்றுக்கொள்ள தேவன் ஆயத்தமாக உள்ளார்.
தகப்பனாரைப் போலவே
ஒரு குழந்தை அதன் பெற்றோரைப் பார்த்து, அவர்களைப் போலவே அனைத்து செயல்களையும் செய்ய பார்ப்பது அதிக மகிழ்ச்சி அளிக்கும் காரியமாகும். காரில் குழந்தைகள் ஆசனத்தில், பெல்ட் மாட்டப்பட்டு அமர்ந்திருக்கும் சிறுவன், அவனது கற்பனையில் காரின் ஸ்டீயரிங்கை இயக்குவதுபோல எண்ணிக்கொண்டே, காரை ஓட்டுகிற தனது தகப்பனார் என்ன செய்கிறார் என்று இடையிடையே உன்னிப்பாகக் கவனித்து செயல்படுவதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம்.
நான் சிறுவனாக இருந்தபொழுது அவ்வாறு செய்ததை இப்பொழுது நினைவுகூருகிறேன். என் தகப்பனார் செய்ததுபோலவே, நானும் செய்தது எனக்கு அதிக மகிழ்ச்சியை அளித்தது. நான் அவரைப் போலவே செயல்பட்டதைப் பார்த்த என் தகப்பனார் என்னைவிட அதிகம் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்பது நிச்சயம்.
இழந்து போனவர்களைத் தேடி, தேவையானவர்களுக்கு உதவியளித்து, வியாதியஸ்தர்களுக்கு சுகம் அருளி, பிதா செய்ததையே அவரது அன்பின் குமாரனும் செய்ததைப் பார்த்த தேவனும், அதைப் போலவே மகிழ்ச்சியடைந்திருப்பார் என்று எண்ணுகிறேன். “பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளை செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்” (யோவா. 5:19) என்று இயேசு கூறினார்.
“பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, கிறிஸ்து… நம்மில் அன்பு கூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்து கொள்ளுங்கள்” என்று (எபே. 5:1,2) நாமும் அவ்வாறே செய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் இயேசுவைப் போலவே தொடர்ந்து வளரும்பொழுது, பிதா நேசிப்பது போலவே நாமும் நேசிக்கவும், அவர் மன்னித்ததுபோல மன்னிக்கவும், அவர் இரங்குவதுபோல இரங்கவும், அவருக்கு பிடித்தமான வழியில் வாழவும் செய்ய முயற்சிப்போம். ஆவியின் வல்லமையினால், அவரது செயல்களைப்போலவே நாமும் செய்வது மிக மிக மகிழ்ச்சியான காரியமாகும். ஏனெனில் அதன் பலன் பிதாவின் அன்பும், கனிவும் நிறைந்த புன்சிரிப்பாகும்.
ஆழமான வேர்கள்
செம்மரங்களின் மூன்று வகைகளில் ஒன்றான சிக்கோயாமரம் உலகத்திலுள்ள அனைத்து மரங்களிலும், மிகவும் பெரியதும், எந்த விதமான சூழ்நிலைகளையும் தாங்க கூடியதுமான மர வகையாகும். அது 300 அடி உயரத்திற்கு வளரக் கூடியதாகவும், 1.1 மில்லியன் டன் எடையுள்ளதாகவும், 3000 ஆண்டுகள் உயிர் வாழக்கூடியதாகவும் இருக்கும். அதனுடைய பெரிய உருவத்திற்கும், நீண்ட ஆயுசு நாட்களுக்கான காரணம், பூமிக்கு கீழுள்ள அந்த மரத்தின் வேர்ப்பாகமே ஆகும். ஒன்றோடொன்று பின்னிய அந்த மரத்தின் வேர்கள் ஒர் ஏக்கருக்கும்மேல் பரவியிருப்பதால், நம்ப இயலாத உயரமும், ஆச்சரியப்படத்தக்கதான எடையையும் உடைய அந்த மரத்தைத் தாங்கி, பூமியிலே இறுக்கமாக ஊன்றுகின்றது.
யூத தேசத்தின் சரித்திரம், அவர்களது மதம், அவர்களது எதிர்பார்ப்பு இவைகளெல்லாம் இயேசுவின் வாழ்க்கையைப்பற்றி மறைமுகமாக கூறுகின்றன. அவற்றை ஒரு செம்மரத்தின் பரந்து விரிந்த ஆழமான வேர்களோடு ஒப்பிடும்பொழுது, அது மிகவும் சிறியதாகவே உள்ளது. ஒரு முறை யூத மதத் தலைவரிடம், அவர்கள் நேசித்து வாசித்த வேத வசனங்கள் தன்னைப்பற்றி பற்றித்தான் கூறுகிறதென்று இயேசு கூறினார் (யோவா. 5:3). நாசரேத்திலுள்ள ஜெப ஆலயத்தில் அவர் ஏசாயா புத்தகத்தின் சுருளைத் திறந்து இஸ்ரவேலின் மேசியாவைப்பற்றிய விபரங்களை வாசித்து, “உங்கள் காதுகள் கேட்க இந்த வேத வாக்கியம் இன்றையத் தினம் நிறைவேறிற்று என்றார்” (லூக். 4:21).
இயேசு அவர் பாடுபடவும், மரிக்கவும், உயிர்த்தெழவும் வேண்டும் என்பதை மோசே, தீர்க்கத்தரிசிகள், இஸ்ரவேலின் பாடல்கள் அனைத்தும் தெளிவாக கூறியுள்ளதை சீஷர்கள் புரிந்து கொள்ளத்தக்கதாக அவரது உயிர்த்தெழுதலுக்குப் பின்பு அவர்களுக்கு விளக்கிக் கூறினார் (வச. 24,46).
யூத சரித்திரத்திலும் அந்த தேசத்தின் வேதத்திலும், இயேசுவின் வாழ்க்கைச் சரித்திரம் ஆழமாக வேர்விட்டு பதிந்துள்ளதைப் பார்க்கும் பொழுது, அது மிகவும் சிறந்ததாகவும், மகிமை பொருந்தியதாயும் உள்ளது. அதோடுகூட நமது சொந்த வாழ்க்கைக்கும், இயேசு எவ்வளவு அதிகமாகத் தேவை என்ற உண்மையை உணரும் பொழுதும் அது சிறந்ததாக உள்ளது.
நீங்கள் ஆயத்தமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா?
நான் உயர் நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பொழுது, இரண்டு ஆண்டுகளாக ஒரு துரித உணவு விடுதியில் பணி செய்து கொண்டிருந்தேன். அந்த வேலையில் சில காரியங்கள் மிகவும் கடினமானவைகளாக இருக்கும். உதாரணமாக வாடிக்கையாளர்களின் ரொட்டித் துண்டுகள் மேல் மற்ற பணியாட்கள் தெரியாமல் வைத்த பாலாடை கட்டிக்காக (Chese) என்னைக் கடினமான வார்த்தைகளால் கடிந்து கொள்வார்கள். நான் அந்தப் பணியை விட்டபின், எனது பல்கலைக்கழகத்தில் ஒரு கணினி மையத்தில் பணிக்குச் சேர விண்ணப்பித்தேன். என்னை பணியில் அமர்த்தினவர்கள் எனது கணினி திறமைகளைவிட, நான் துரித உணவு விடுதியில் பெற்ற அனுபவங்களுக்குதான் முக்கியத்துவம் கொடுத்தார்கள். அதாவது மக்களை எவ்வாறு கையாளுவது என்று நான் அறிந்திருக்கிறேனா என்பதை அறிய விரும்பினார்கள். துரித உணவு விடுதியில் இருந்த மோசமான சூழ்நிலைகளில் நான் பெற்ற அனுபவங்கள் சிறந்த ஒரு பணிக்கு என்னை ஆயத்தப்படுத்தியது.
நாம் மோசமான சூழ்நிலைகள் என்று கருதும் சூழ்நிலைகளின் வழியாக வாலிபனான தாவீது உறுதியுடன் செயல்பட்டான். கோலியாத் அவனை எதிர்த்துப் போராட இஸ்ரவேல் மக்களிடம் சவால் விட்டபொழுது, அவனை எதிர்க்க யாரும் முன் வரவில்லை. தாவீது மட்டும்தான் முன் வந்தான். கோலியாத்திற்கு எதிராக போராட தாவீதை அனுப்புவதற்கு சவுலுக்கு விருப்பமில்லை. ஆனால், தாவீது, அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த பொழுது ஒரு முறை ஒரு சிங்கமும், ஒரு கரடியும் ஓர் ஆட்டை கவ்விக் கொண்டு சென்ற பொழுது, அவைகளை எதிர்த்துப் போராடி, கொன்று போட்டதை சவுலிடம் விளக்கிக் கூறினான் (1 சாமு. 17:34-36). “பின்னும் தாவீது; என்னை சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்த பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் (வச. 37) என்று திட நம்பிக்கையோடு கூறினான்.
ஒரு மேய்ப்பனாக இருந்தபொழுது தாவீது மதிக்கப்படவில்லை. ஆனால், அவன் மேய்ப்பனாக இருந்தபொழுது பெற்ற அனுபவங்கள் கோலியாத்தை எதிர்த்துப் போராடவும் முடிவில் இஸ்ரவேலில் மிகப் பெரிய அரசனாகவும் ஆவதற்கு அவனை ஆயத்தப்படுத்தியது. நாம் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கலாம்; ஆனால், அவைகளின்மூலமாக தேவன் நம்மை மிகச் சிறந்த காரியத்திற்கு ஆயத்தப்படுத்தலாம்.