Archives: பிப்ரவரி 2017

பினாட்டாவைக் காட்டிலும் சிறந்தது

பினாட்டா (Pinata) இல்லாத ஒரு மெக்சிகோ (Mexico) நாட்டுக் கொண்டாட்டத்தை காண முடியாது. மிட்டாய்களும் சிறு பரிசுப் பொருட்களும் நிறைந்த  அட்டைப்பெட்டி அல்லது மண்பாண்டத்தை பினாட்டா என்பர். சிறு பிள்ளைகள் ஒரு பிரம்பால் அதை அடித்து உடைத்து உள்ளிருக்கும் பொருட்களை எடுத்து மகிழ்வார்கள்.

16ஆம் நூற்றாண்டில் மெக்ஸிகோவின் பூர்வக்குடிமக்களுக்கு பாடம் கற்றுத்தர பினாட்டாக்களை துறவிகள் பயன்படுத்தினார்கள். ஏழு கொடிய பாவங்களுக்கு அடையாளமாக ஏழு நட்சத்திர வடிவங்களை உடைய பினாட்டாக்களை உடைத்து, அதில் உள்ள பரிசுகளை எடுத்துக்கொள்வார்கள். விசுவாசத்தை கைவிடாமல் தீமையை எதிர்த்துப் போராடி வென்றதற்கு அடையாளமாக இதைச் செய்தார்கள்.

ஆனால், தீமையை நம் சுய பெலத்தினாலே போராடி வென்றுவிட முடியாது. நம்முடைய முயற்சிகளைப் பார்த்து இரக்கம் பாராட்டும்படி தேவன் காத்திருக்கவில்லை. “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்படடீர்கள்... இது தேவனுடைய ஈவு” என்று எபேசியர் புத்தகம் கூறுகிறது (வச. 2:8). நாம் பாவத்தை அடித்து உதைக்க தேவையில்லை; கிறிஸ்து அதை செய்து முடித்து விட்டார்.

பினாட்டாவிலிருந்து விழும் மிட்டாய்களுக்காக சிறு பிள்ளைகள் சண்டைப்போட்டுக் கொள்வார்கள். ஆனால் இயேசுவை விசுவாசிக்கும் பொழுது, தேவனுடைய பரிசுகள் நம் எல்லோருக்கும் கொடுக்கப் படுகின்றன. தேவன் “ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்” (எபே. 1:3). நமக்கு பாவ மன்னிப்பு, மீட்பு, புத்திர சுவீகாரம், புது வாழ்வு, மகிழ்ச்சி, அன்பு மற்றும் அநேக ஆசீர்வாதங்கள் உண்டு. நாம் விசுவாசத்திலே பெலமுள்ளவர்களாய் காணப்பட்டதால் இந்த ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை நாம் பெற்றுக்கொள்ளவில்லை; மாறாக இயேசுவை விசுவாசித்ததினால் பெற்றுக்கொண்டோம். ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைக் கிருபையினால் மாத்திரமே பெற்றுக்கொள்கிறோம்; ஏனெனில் கிருபையின்றி அவைகளை நாம் பெற்றுக்கொள்ளத் தகுதியற்றவர்கள்!

கலங்கரை விளக்கம்

ருவாண்டா நாட்டிலுள்ள ‘கலங்கரை விளக்கம்’ என்னும் ஒரு ஊழிய மையம் இருப்பதே மீட்பிற்கு அடையாளமாக உள்ளது. 1994ஆம் ஆண்டு நடந்த இனப்படுகொலையின் பொழுது அந்நாட்டு அதிபருக்கு சொந்தமான ஒரு மாளிகை இப்பொழுது அந்த மையம் இருக்கும் இடத்தில் இருந்தது. அக்கலவரத்திற்கு பின்பு இப்புதிய கட்டடம் பிரகாசமான நம்பிக்கையளிக்கும் கலங்கரை விளக்கமாக கிறிஸ்தவர்களால் கட்டப்பட்டுள்ளது. புதிய தலைமுறை கிறிஸ்தவத் தலைவர்களை உருவாக்கும் நோக்கத்தோடு ஒரு வேதாகமக் கல்வி நிறுவனம் அக்கட்டடத்தில் உள்ளது. அதோடு கூட ஒரு தங்கும் விடுதி, உணவகம் மற்றும் அச்சமுதாய மக்களுக்கு தேவையான இதர சேவைகளும் அங்கு உள்ளன. சாம்பலில் இருந்து ஒரு புதிய வாழ்வு தோன்றியுள்ளது. இந்த ‘கலங்கரை விளக்கத்தை’ கட்டினவர்கள் இயேசுவையே தங்களுடைய நம்பிக்கைக்கும், மீட்பிற்கும் ஆதாரமாகக் காண்கிறார்கள்.

ஒரு ஓய்வுநாளன்று நாசரேத்திலுள்ள ஒரு ஜெபாலயத்திற்கு இயேசு சென்ற பொழுது, அவர் ஏசாயா புத்தகத்திலிருந்து வாசித்து தேவனுடைய கிருபையை பிரசித்ததிப்படுத்த அபிஷேகம் பண்ணப்பட்டவர் அவரே என அறிவித்தார் (லூக். 4:14-21). அவரே இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டவும் மீட்பையும், மன்னிப்பையும் அருளவும் வந்தார். இயேசு கிறிஸ்துவில் நாம் சாம்பலுக்கு பதில் சிங்காரத்தை காண முடியும் (ஏசா. 61:3).

ருவாண்டா நாட்டு இனப்படுகொலையின் பொழுது, பழங்குடியினர் மத்தியிலே ஏற்பட்ட சண்டையின் விளைவால் நடந்த அட்டூழியங்கள் மனதை உறைய வைக்கக் கூடிய பயங்கரமான சம்பவங்கள். அதில் 5 லட்சத்திற்கும் மேலானோர் உயிரிழந்தனர். இதைக்குறித்து நமக்கு ஒன்றும் கூறத் தெரியவில்லை. ஆனால் இப்பூலோகத்திலோ அல்லது பரலோகத்திலோ இக்கொடுமைகளுக்கு ஈடு செய்ய கர்த்தரால் கூடும். நம்முடைய அழுகைக்குப் பதில் ஆனந்த தைலத்தை அளிப்பவர், காரிருள் போன்ற சூழ்நிலைகளின் மத்தியிலும் நமக்கு நம்பிக்கை அளிக்கிறார்.

நாளைய தினத்தை இன்று பார்ப்பது

மேகங்களற்ற நீல நிற வானத்தை கூர்ந்து பார்ப்பது எனக்குப் பிடிக்கும். நம்முடைய சிருஷ்டிகரின் மகிமையான படைப்புகளில் ஓர் அழகிய பகுதி இந்த வானம். இது நம்முடைய சந்தோஷத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வானத்தைக் கண்டு விமான ஓட்டிகள் எவ்வளவாய் மகிழ்ந்திருப்பார்கள்! அவர்கள் பறப்பதற்கு ஏற்ற சிறந்த வான்வெளியை பல அடைமொழிகளைக் கொண்டு விவரிப்பார்கள். அதில் எனக்கு மிகவும் பிடித்தது, “நாளைய தினத்தை நீ இன்றே பார்ப்பது.”

“நாளைய தினத்தை இன்றே பார்ப்பது” என்பது நமது பார்வைக்கு அப்பாற்பட்டது. சொல்லப் போனால் இன்று நம்மை நோக்கி வரும் காரியங்களைக்கூட சில சமயங்களில் நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. “நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப் போலிருக்கிறதே” என்று வேதாகமம் கூறுகிறது (யாக். 4:14).

ஆனால் வரையறைக்குட்பட்ட நம்முடைய பார்வை விரக்தியை உண்டாக்கத் தேவையில்லை. மாறாக நாம் மகிழ்ந்திருக்கலாம். ஏனெனில் நம்முடைய எதிர்காலத்தை முற்றும் காண்கிற தேவன் மேல் நாம் விசுவாசம் வைத்துள்ளோம். அதின் ஒவ்வொரு நாளிலும் நாம் எதிர்கொள்ள போகும் சவால்களையும் அதன் தேவைகளையும் அவர் அறிந்திருக்கிறபடியால், நாம் கலங்கத் தேவையில்லை. இதை அப்போஸ்தலனாகிய பவுல் நன்கு அறிந்துள்ளார். ஆகவேதான், “நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்”
(2 கொரி. 5:6) என்று நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளினால் அவர் நம்மை உற்சாகப்படுத்துகிறார்.

இன்றைய தினத்தையும், நாம் காணாத எதிர்காலத்தையும் நம்பிக்கையோடு தேவனுடைய கரத்தில் ஒப்புக்கொடுக்கும்பொழுது, நம் வாழ்வை எதிர்நோக்கி வரும் எக்காரியங்களைக் குறித்தும் நாம் கவலைப்படத் தேவையில்லை. நாம் தேவனோடு நடக்கிறோம். நமக்கு முன் இருப்பவைகளை அவர் அறிந்திருக்கிறார். அவற்றைக் கையாள அவர் பெலமுள்ளவராய், ஞானம் உள்ளவராய் இருக்கிறார்.

குப்பைமேட்டு மேதை

1965ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) பட்டணத்தில் வாட்ஸ் என்னும் பகுதியில் நடந்த கலவரத்திலிருந்து சுமார் மூன்று டன் உடைந்த பொருட்களை சேகரித்த நோவா புரிஃபாய் (Noah Purifoy), அதை வைத்து கலைப்பொருட்களை உருவாக்கினார். உடைந்த சைக்கிள் சக்கரங்கள், பந்துகள், பழைய டயர்கள், சேதமடைந்த தொலைக்காட்சி பெட்டிகள் என இனி பயன்படாத பொருட்களை வைத்து தன் சக ஊழியருடன் சேர்ந்து பல சிற்பங்களை செய்தார். இன்றைய நவநாகரிக சமுதாயத்தில் மனிதர்கள் உதவாப்பொருட்கள் போல நடத்தப் படுகிறார்கள் என்னும் வலிமையான கருத்தை தன்னுடைய சிற்பங்கள் மூலம் வெளிப்படுத்தினார். திரு. புரிஃபாய். அவர்களை ஒரு பத்திரிக்கையாளர் “குப்பைமேட்டு மேதை” என குறிப்பிட்டார்.

இயேசு வாழ்ந்த காலக்கட்டத்தில், வியாதியஸ்தர்களையும், சரீரப்பிரச்சனைகள் உள்ளவர்களையும்,பலரும் பாவிகள் எனக் கருதினர். அவர்களுடைய பாவங்களுக்காக தேவன் அவர்களை தண்டிப்பதாகக் கருதினர். அவர்களை அச்சமுதாயம் புறக்கணித்து உதாசீனப்படுத்தியது. ஆனால் இயேசுவும், அவருடைய சீஷர்களும் ஒரு குருடனை எதிர்கொண்ட பொழுது, இயேசு அவனுடைய நிலை பாவத்தின் விளைவினால் அல்லவென்றும் மாறாக தேவனுடைய மகிமையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்திற்காகவே என்று கூறினார். “நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்,” என்றார் (யோவா. 9:5). இயேசு கூறியபடி அந்த குருடன் செய்த பொழுது பார்வை பெற்றான்.

இதைக்குறித்து மதத் தலைவர்கள் அவனை விசாரித்த பொழுது, அவன் மிகச் சாதாரணமாக, “நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்” (வச. 25) என்றான்.

இன்றும் நம் உலகின் மகிப்பெரிய “குப்பைமேட்டு மேதை” இயேசுதான். நாம் எல்லோரும் பாவத்தினால் சேதமடைந்திருக்கிறோம். ஆனால் அவர் நம்முடைய உடைந்துபோன வாழ்க்கையை எடுத்து வனைந்து, புது சிருஷ்டிகளாக நம்மை மாற்றிவிடுகிறார்.