ருவாண்டா நாட்டிலுள்ள ‘கலங்கரை விளக்கம்’ என்னும் ஒரு ஊழிய மையம் இருப்பதே மீட்பிற்கு அடையாளமாக உள்ளது. 1994ஆம் ஆண்டு நடந்த இனப்படுகொலையின் பொழுது அந்நாட்டு அதிபருக்கு சொந்தமான ஒரு மாளிகை இப்பொழுது அந்த மையம் இருக்கும் இடத்தில் இருந்தது. அக்கலவரத்திற்கு பின்பு இப்புதிய கட்டடம் பிரகாசமான நம்பிக்கையளிக்கும் கலங்கரை விளக்கமாக கிறிஸ்தவர்களால் கட்டப்பட்டுள்ளது. புதிய தலைமுறை கிறிஸ்தவத் தலைவர்களை உருவாக்கும் நோக்கத்தோடு ஒரு வேதாகமக் கல்வி நிறுவனம் அக்கட்டடத்தில் உள்ளது. அதோடு கூட ஒரு தங்கும் விடுதி, உணவகம் மற்றும் அச்சமுதாய மக்களுக்கு தேவையான இதர சேவைகளும் அங்கு உள்ளன. சாம்பலில் இருந்து ஒரு புதிய வாழ்வு தோன்றியுள்ளது. இந்த ‘கலங்கரை விளக்கத்தை’ கட்டினவர்கள் இயேசுவையே தங்களுடைய நம்பிக்கைக்கும், மீட்பிற்கும் ஆதாரமாகக் காண்கிறார்கள்.

ஒரு ஓய்வுநாளன்று நாசரேத்திலுள்ள ஒரு ஜெபாலயத்திற்கு இயேசு சென்ற பொழுது, அவர் ஏசாயா புத்தகத்திலிருந்து வாசித்து தேவனுடைய கிருபையை பிரசித்ததிப்படுத்த அபிஷேகம் பண்ணப்பட்டவர் அவரே என அறிவித்தார் (லூக். 4:14-21). அவரே இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டவும் மீட்பையும், மன்னிப்பையும் அருளவும் வந்தார். இயேசு கிறிஸ்துவில் நாம் சாம்பலுக்கு பதில் சிங்காரத்தை காண முடியும் (ஏசா. 61:3).

ருவாண்டா நாட்டு இனப்படுகொலையின் பொழுது, பழங்குடியினர் மத்தியிலே ஏற்பட்ட சண்டையின் விளைவால் நடந்த அட்டூழியங்கள் மனதை உறைய வைக்கக் கூடிய பயங்கரமான சம்பவங்கள். அதில் 5 லட்சத்திற்கும் மேலானோர் உயிரிழந்தனர். இதைக்குறித்து நமக்கு ஒன்றும் கூறத் தெரியவில்லை. ஆனால் இப்பூலோகத்திலோ அல்லது பரலோகத்திலோ இக்கொடுமைகளுக்கு ஈடு செய்ய கர்த்தரால் கூடும். நம்முடைய அழுகைக்குப் பதில் ஆனந்த தைலத்தை அளிப்பவர், காரிருள் போன்ற சூழ்நிலைகளின் மத்தியிலும் நமக்கு நம்பிக்கை அளிக்கிறார்.