பினாட்டா (Pinata) இல்லாத ஒரு மெக்சிகோ (Mexico) நாட்டுக் கொண்டாட்டத்தை காண முடியாது. மிட்டாய்களும் சிறு பரிசுப் பொருட்களும் நிறைந்த  அட்டைப்பெட்டி அல்லது மண்பாண்டத்தை பினாட்டா என்பர். சிறு பிள்ளைகள் ஒரு பிரம்பால் அதை அடித்து உடைத்து உள்ளிருக்கும் பொருட்களை எடுத்து மகிழ்வார்கள்.

16ஆம் நூற்றாண்டில் மெக்ஸிகோவின் பூர்வக்குடிமக்களுக்கு பாடம் கற்றுத்தர பினாட்டாக்களை துறவிகள் பயன்படுத்தினார்கள். ஏழு கொடிய பாவங்களுக்கு அடையாளமாக ஏழு நட்சத்திர வடிவங்களை உடைய பினாட்டாக்களை உடைத்து, அதில் உள்ள பரிசுகளை எடுத்துக்கொள்வார்கள். விசுவாசத்தை கைவிடாமல் தீமையை எதிர்த்துப் போராடி வென்றதற்கு அடையாளமாக இதைச் செய்தார்கள்.

ஆனால், தீமையை நம் சுய பெலத்தினாலே போராடி வென்றுவிட முடியாது. நம்முடைய முயற்சிகளைப் பார்த்து இரக்கம் பாராட்டும்படி தேவன் காத்திருக்கவில்லை. “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்… இது தேவனுடைய ஈவு” என்று எபேசியர் புத்தகம் கூறுகிறது (வச. 2:8). நாம் பாவத்தை அடித்து உதைக்க தேவையில்லை; கிறிஸ்து அதை செய்து முடித்து விட்டார்.

பினாட்டாவிலிருந்து விழும் மிட்டாய்களுக்காக சிறு பிள்ளைகள் சண்டைப்போட்டுக் கொள்வார்கள். ஆனால் இயேசுவை விசுவாசிக்கும் பொழுது, தேவனுடைய பரிசுகள் நம் எல்லோருக்கும் கொடுக்கப் படுகின்றன. தேவன் “ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்” (எபே. 1:3). நமக்கு பாவ மன்னிப்பு, மீட்பு, புத்திர சுவீகாரம், புது வாழ்வு, மகிழ்ச்சி, அன்பு மற்றும் அநேக ஆசீர்வாதங்கள் உண்டு. நாம் விசுவாசத்திலே பெலமுள்ளவர்களாய் காணப்பட்டதால் இந்த ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை நாம் பெற்றுக்கொள்ளவில்லை; மாறாக இயேசுவை விசுவாசித்ததினால் பெற்றுக்கொண்டோம். ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைக் கிருபையினால் மாத்திரமே பெற்றுக்கொள்கிறோம்; ஏனெனில் கிருபையின்றி அவைகளை நாம் பெற்றுக்கொள்ளத் தகுதியற்றவர்கள்!