Archives: பிப்ரவரி 2017

“ஒருவேளை” உலகம்

2002ஆம் ஆண்டு ஒரு கார் விபத்தில் எங்களுடைய 17 வயது மகள் மெலிசாவை (Melissa) பறிகொடுத்தோம். இத்தனை ஆண்டுகள் கழித்தும், “ஒருவேளை” என்னும் உலகத்திற்குள் நான் அநேக முறை கடந்து செல்வதை காண்கிறேன். துக்கத்தில் இருக்கும்பொழுது அந்த ஜூன் மாதத்தின் துயரமான மாலை பொழுதில் நடந்த சம்பவங்களை ஒவ்வொன்றாய் நினைத்துப் பார்த்து “ஒருவேளை” அச்சம்பவங்கள் மாறி அமைந்திருந்தால் மெலிசா பத்திரமாக வீடு திரும்பி இருப்பாளே என நினைக்கத் தோன்றுகிறது.

இந்த “ஒருவேளை” என்னும் உலகத்தில் வாழ்வது நிஜத்தில் ஒருவருக்கும் நல்லதல்ல. ஏனெனில் அது நம்பிக்கையற்ற, யூகங்கள் நிறைந்த, குற்ற உணர்வை தூண்டும் வருத்தங்கள் நிறைந்த ஓர் உலகம். நமது துக்கம் உண்மையாகயிருப்பினும், நெடுநாளாய் நீடித்திருப்பினும், “இவ்வேளை” என்னும் உலகத்தில் நாம் வாழ்ந்தால் நம்முடைய வாழ்வு சிறப்பாக இருக்கும். அதன் மூலம் தேவன் கனமடைவார்.

இந்த “இவ்வேளை” என்னும் உலகத்திலே நம்பிக்கையையும், ஆறுதலையும், உற்சாகத்தையும் நாம் காணமுடியும். மெலிசா இயேசுவை நேசித்ததாலே அவள் “அதிக நன்மையான” (பிலி. 1:23) இடத்திலே இருக்கிறாள் என்கிற நிச்சயமான நம்பிக்கை நமக்கு உண்டு (1 தெச. 4:13). நமக்கோ சகலவிதமான ஆறுதலை அளிக்கும் (2 கொரி. 1:3) தேவப்பிரசன்னம் உண்டு. ஆபத்துக் காலத்தில் தேவன் நமக்கு “அநுகூலமான துணையாக” (சங். 46:1) இருப்பார். மேலும் அநேகந்தரம் உடன் விசுவாசிகளின் ஆறுதலும் நமக்கு உண்டு.

நாம் அனைவரும் இவ்வாழ்வின் சோதனைகளை தவிர்க்கவே விரும்புகிறோம். ஆனாலும் கடினமான காலங்களை எதிர்கொள்ளும்பொழுது, ‘இவ்வேளை’ என்னும் உலகத்தில் தேவன் மேல் நம்பிக்கை வைத்து அவரை விசுவாசிக்கும்பொழுது பெரும் உதவிகளைப் பெறுவோம்.

தொடர்ந்து முன்னேறிச் செல்

‘வியப்பூட்டும் பந்தயம்’ என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நிஜத்தில் நடக்கும் காரியங்களைத் தொகுத்து வழங்கும் அந்நிகழ்ச்சியில், பத்து ஜோடிகளை வெளிநாடு ஒன்றிற்கு அனுப்பி வைக்கின்றனர். அங்கு ஒரு பந்தயத்தை எதிர்கொள்ளும் அவர்கள், ரயில், பேருந்து, டாக்ஸி, பைக் போன்றவற்றில் பயணித்தும், நடந்தும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு முன்னேறிச் செல்கின்றனர். ஒவ்வொரு இடத்திலும் அவர்கள் செல்ல வேண்டிய அடுத்த இடத்திற்கான வழிமுறைகளைப் பெற்று சவால்களை எதிர்கொண்டு பந்தயத்தில் தொடர்ந்து செல்கின்றனர். இறுதி இடத்தை முதலாவது சென்றடைவதே இந்தப் பந்தயத்தின் இலக்கு. முதலாவதாக சென்றடையும் ஜோடிக்கு 10 லட்சம் டாலர்கள் பரிசுத் தொகை வழங்கப்படும்.

கிறிஸ்தவ வாழ்க்கையை ஒரு பந்தயத்தோடு ஒப்பிடும் அப்போஸ்தலனாகிய பவுல், தான் இன்னும் இலக்கை அடையவில்லை என்று கூறுகிறார். “சகோதரரே, அதைப் பிடித்துக் கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” என்று கூறியுள்ளார் (பிலி. 3:13-14). அவர் தன்னுடைய கடந்த கால தோல்விகளை எண்ணிப்பார்த்து அவை தன்னைக் குற்ற உணர்வினால் துவண்டு போக அனுமதிக்கவும் இல்லை, தன்னுடைய நிகழ்கால வெற்றிகள் தன்னை மெத்தனமாக இருக்கவும் அனுமதிக்கவில்லை. தான் இன்னும் அதிகமதிகமாய் இயேசுவைப் போல மாறும் இலக்கை நோக்கி அவர் தொடர்ந்து முன்னேறிச் சென்றுகொண்டிருந்தார்.

நாமும் இப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம். நம்முடைய கடந்த காலத் தோல்விகளையோ வெற்றிகளையோ பொருட்படுத்தாது இயேசுவைப் போல மாற வேண்டும் என்கிற இறுதி இலக்கை நோக்கி, தொடர்ந்து முன்னேறிச் செல்வோமாக. நாம் உலகப்பிரகாரமான பரிசுப்பொருளுக்காக ஓடவில்லை. மாறாக, நித்தியத்திற்கும் அவரில் மகிழ்ந்திருக்கும் நிகரற்ற பரிசைப் பெறவே ஓடுகிறோம்.

பரிபூரண கிருபை

இயேசு போதித்த பரிபூரணமான குறிக்கோள்களும் பரிபூரண கிருபையும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக தோன்றலாம்.

ஆனால் தேவன் எதிர்பார்க்கும் பூரண நிலையை இயேசு ஒருபோதும் குறைத்துக்கொள்ளவே இல்லை. “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்” (மத். 5:48) என, மிகுந்த ஆஸ்தியுடைய வாலிபனுக்கு இயேசு பதில் கூறினார். மேலும் நியாயப்பிரமாண வல்லுநர் ஒருவர் நியாயப்பிரமாணத்திலே பிரதான கட்டளை எது என்று கேட்டதற்கு, “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக (22:37). இந்த கற்பனைகளையும் ஒருவனும் முழுமையாய் நிறைவேற்றினதில்லை.

ஆனாலும் அதே இயேசு நமக்கு பரிபூரண கிருபையை கனிவாக அளித்துள்ளார். ஒரு விபச்சாரியை மன்னித்தார், சிலுவையில் தொங்கின திருடனை மன்னித்தார், தன்னை மறுதலித்த சீஷனை மன்னித்தார் மேலும் கிறிஸ்தவர்களை உபத்திரவப்படுத்துவதிலே கீர்த்தி பெற்ற சவுலையும் மன்னித்தார். அனைத்தையும் உள்ளடக்கிய பரிபூரணமான கிருபை இயேசுவை சிலுவையில் அறைந்தவர்களுக்கும் தன் கரம் நீட்டுகிறது: “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்றார் (லூக். 23:34). இயேசு கடைசியாகப் பேசின வார்த்தைகளில் இதுவும் ஒன்று.

பல வருடங்களாக இயேசுவின் பூரணமான கற்பனைகளை எண்ணும்பொழுது, என்னைத் தகுதியற்றவனாகவே உணர்ந்தேன். அப்பொழுது அவருடைய கிருபையை குறித்துக் கருதவேயில்லை. ஆனால் இந்த இரட்டைச் செய்தியை புரிந்து கொண்ட பிறகு, இக்கிருபையின் சத்தியம் இயேசுவின் வாழ்க்கை மற்றும் போதனைகள் முழுவதும், பெருங்காற்று போல சீறி பாய்ந்து செல்வதை கண்டுகொண்டேன்.

நம்பிக்கை இழந்தவர்கள், தேவையுள்ளவர்கள், நொறுங்குண்டவர்கள், சுயபெலத்தினால் காரியங்களை நிறைவேற்ற முடியாதவர்கள் என இவர்கள் அனைவருக்கும் கிருபை உண்டு. நம் அனைவருக்கும் கிருபை உண்டு.

விரைவாய்ப் பரவும் நற்செய்தி

பாஸ்டனில் (Boston) உள்ள வடகிழக்கு பல்கலைக்கழகத்தில் 1800களில் இருந்த சமூக ஊடக வலையமைப்பாகிய செய்தித்தாள்களின் மூலம் செய்திகள் காட்டுத்தீ போல் எவ்வாறு பரவியது என்பதை ‘வைரல் செய்தி திட்டப்பணி’ மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அன்றைய தொழில் துறை காலகட்டத்தில் ஏதேனும் ஒரு கட்டுரை சுமார் ஐம்பது முறை அல்லது அதற்கும் மேலாக அச்சிடப்பட்டால் அதை வைரல் என்று கருதினர். ஸ்மித்சோனியன்; (Smithsonion) பத்திரிக்கையில் எழுத்தாளராக இருக்கும் பிரிட் பீட்டர்சன்
(Brit Peterson) இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றினவர்களில் தங்கள் விசுவாசத்திற்காக மரண தண்டனை அடைந்தவர்கள் எவரென விவரிக்கும் கட்டுரைச் செய்தி குறைந்தது 110 வெவ்வேறு பதிப்பகங்களில் 19ஆம் நூற்றாண்டின் காலகட்டத்தில் வெளிவந்தது என்பதை அறிந்து கொண்டார்.

தெசலோனிக்காவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய கடிதத்தில், அவர்கள் துணிவோடும் மகிழ்ச்சியோடும் இயேசுவுக்கு சாட்சிகளாய் இருப்பதைக் குறித்துப் பாராட்டினார். “உங்களிடத்திலிருந்து கர்த்தருடைய வசனம் மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் தொனித்ததுமல்லாமல்.... தேவனைப்பற்றின உங்கள் விசுவாசம் எங்கும் பிரசித்தமாயிற்று” (1 தெச. 1:8). இயேசு கிறிஸ்துவினால் மறுரூபமடைந்த அம்மக்கள் மூலம் அவரைப்பற்றின நற்செய்தி வேகமாகப் பரவியது. கஷ்டங்கள் மற்றும் உபத்திரவங்களுக்கு மத்தியிலும் கூட அவர்களால் அமைதியாக இருக்க முடியவில்லை.

கர்த்தரை அறிந்த நாம் அனைவரும் கிறிஸ்துவில் உண்டான பாவமன்னிப்பையும் நித்திய வாழ்வையும் அன்பான இருதயங்கள், உதவி செய்யும் கரங்கள் மற்றும் நேர்மையான வார்த்தைகள் மூலம் மற்றவர்களுக்கு தெரிவிக்க முடியும். இயேசுவை பற்றின நற்செய்தி நம்முடைய வாழ்வை மட்டுமன்றி நாம் சந்திக்கும் நபர்களின் வாழ்வையும் மறுரூபமாக்குகிறது.

ஆகவே இன்று நம்மிடமிருந்து நற்செய்தி அனைவரும் கேட்கும்படி ஒலிக்கட்டும்!

ஆற்றோரம் உள்ள மரம்

இது நம்மை பொறாமை கொள்ள வைக்கும் ஒரு மரம். ஆற்றோரத்திலே வளர்வதால், வானிலை அறிக்கைகளைப்பற்றியோ, வறண்ட தட்பவெப்ப நிலையைப்பற்றியோ, நிலையற்ற எதிர்காலத்தைப் பற்றியோ அது கவலைப்படத் தேவையில்லை. ஆற்றோரத்திலிருந்து தேவையான தண்ணீரையும், போஷாக்கையும் பெறுவதால் சூரியனை நோக்கி தன் கிளைகளை விரித்து உயரே வளர்ந்தும் நன்று வேர்விட்டு பூமியை இறுக பிடித்தும் தன்னுடைய இலைகளினால் காற்றைச் சுத்தம் செய்தும் வெயிலின் உஷ்ணத்தினால் தவிக்கும் அநேகருக்கு நிழல் தந்து இளைப்பாறுதல் அளிக்கிறது.

இதற்கு எதிர்மறையாக, தீர்க்கதரிசி எரேமியா ஒரு செடியை சுட்டிக் காட்டுகிறார் (எரே. 17:6). மழையில்லாமல் சுட்டெரிக்கும் வெயிலினால் பூமி வறண்டு அவ்வறட்சியினால் அச்செடி துவண்டு, இலை உதிர்ந்து கனி கொடுக்காமலும் ஒருவனுக்கும் நிழல் தர முடியாமலும் காணப்படுகிறது.

எரேமியா தீர்க்கதரிசி ஒரு செழிப்பான மரத்தோடு, வறண்டு போன ஒரு செடியை ஏன் ஒப்பிட்டார்? தன் ஜனங்கள் எகிப்தின் அடிமைத்தனதிலிருந்து அற்புதவிதமாக மீட்கப்பட்ட நாள் முதல் அவர்களுக்கு நடந்த எல்லாவற்றையும் அவர்கள் நினைவுகூர்ந்து பார்க்க வேண்டும் என விரும்பினார். நாற்பது வருடங்கள் வனாந்திரத்திலே இருந்தபொழுதும், அவர்கள் ஆற்றோரத்திலே வளர்ந்த மரம் போல செழித்திருந்தார்கள் (2:4-6). இருப்பினும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திலே காணப்பட்ட செழிப்பினால் அவர்களுடைய முந்தய நாட்களை மறந்து போனார்கள். தங்கள் சுயத்தின் மீதும் தங்களுக்கென்று அவர்களே ஏற்படுத்தின தேவர்கள் மீதும் நம்பிக்கை வைத்து (வச. 7-8) உதவியை நாடி எகிப்திற்கே திரும்பிச் செல்லதுணிந்தார்கள் (42:14).

ஆகவே, எரேமியாவின் மூலம் தன்னை மறந்துபோன இஸ்ரவேல் ஜனங்களை அன்பாய் உணர்த்துவது போல, நாமும் தேவன் மீது விசுவாசமும் நம்பிக்கையும் வைத்து அவ்வறண்ட செடிபோல் இல்லாமல் அச்செழிப்பான மரம்போல இருக்கும்படி நம்மையும் உணர்த்துகிறார்.