2002ஆம் ஆண்டு ஒரு கார் விபத்தில் எங்களுடைய 17 வயது மகள் மெலிசாவை (Melissa) பறிகொடுத்தோம். இத்தனை ஆண்டுகள் கழித்தும், “ஒருவேளை” என்னும் உலகத்திற்குள் நான் அநேக முறை கடந்து செல்வதை காண்கிறேன். துக்கத்தில் இருக்கும்பொழுது அந்த ஜூன் மாதத்தின் துயரமான மாலை பொழுதில் நடந்த சம்பவங்களை ஒவ்வொன்றாய் நினைத்துப் பார்த்து “ஒருவேளை” அச்சம்பவங்கள் மாறி அமைந்திருந்தால் மெலிசா பத்திரமாக வீடு திரும்பி இருப்பாளே என நினைக்கத் தோன்றுகிறது.

இந்த “ஒருவேளை” என்னும் உலகத்தில் வாழ்வது நிஜத்தில் ஒருவருக்கும் நல்லதல்ல. ஏனெனில் அது நம்பிக்கையற்ற, யூகங்கள் நிறைந்த, குற்ற உணர்வை தூண்டும் வருத்தங்கள் நிறைந்த ஓர் உலகம். நமது துக்கம் உண்மையாகயிருப்பினும், நெடுநாளாய் நீடித்திருப்பினும், “இவ்வேளை” என்னும் உலகத்தில் நாம் வாழ்ந்தால் நம்முடைய வாழ்வு சிறப்பாக இருக்கும். அதன் மூலம் தேவன் கனமடைவார்.

இந்த “இவ்வேளை” என்னும் உலகத்திலே நம்பிக்கையையும், ஆறுதலையும், உற்சாகத்தையும் நாம் காணமுடியும். மெலிசா இயேசுவை நேசித்ததாலே அவள் “அதிக நன்மையான” (பிலி. 1:23) இடத்திலே இருக்கிறாள் என்கிற நிச்சயமான நம்பிக்கை நமக்கு உண்டு (1 தெச. 4:13). நமக்கோ சகலவிதமான ஆறுதலை அளிக்கும் (2 கொரி. 1:3) தேவப்பிரசன்னம் உண்டு. ஆபத்துக் காலத்தில் தேவன் நமக்கு “அநுகூலமான துணையாக” (சங். 46:1) இருப்பார். மேலும் அநேகந்தரம் உடன் விசுவாசிகளின் ஆறுதலும் நமக்கு உண்டு.

நாம் அனைவரும் இவ்வாழ்வின் சோதனைகளை தவிர்க்கவே விரும்புகிறோம். ஆனாலும் கடினமான காலங்களை எதிர்கொள்ளும்பொழுது, ‘இவ்வேளை’ என்னும் உலகத்தில் தேவன் மேல் நம்பிக்கை வைத்து அவரை விசுவாசிக்கும்பொழுது பெரும் உதவிகளைப் பெறுவோம்.