‘வியப்பூட்டும் பந்தயம்’ என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நிஜத்தில் நடக்கும் காரியங்களைத் தொகுத்து வழங்கும் அந்நிகழ்ச்சியில், பத்து ஜோடிகளை வெளிநாடு ஒன்றிற்கு அனுப்பி வைக்கின்றனர். அங்கு ஒரு பந்தயத்தை எதிர்கொள்ளும் அவர்கள், ரயில், பேருந்து, டாக்ஸி, பைக் போன்றவற்றில் பயணித்தும், நடந்தும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு முன்னேறிச் செல்கின்றனர். ஒவ்வொரு இடத்திலும் அவர்கள் செல்ல வேண்டிய அடுத்த இடத்திற்கான வழிமுறைகளைப் பெற்று சவால்களை எதிர்கொண்டு பந்தயத்தில் தொடர்ந்து செல்கின்றனர். இறுதி இடத்தை முதலாவது சென்றடைவதே இந்தப் பந்தயத்தின் இலக்கு. முதலாவதாக சென்றடையும் ஜோடிக்கு 10 லட்சம் டாலர்கள் பரிசுத் தொகை வழங்கப்படும்.

கிறிஸ்தவ வாழ்க்கையை ஒரு பந்தயத்தோடு ஒப்பிடும் அப்போஸ்தலனாகிய பவுல், தான் இன்னும் இலக்கை அடையவில்லை என்று கூறுகிறார். “சகோதரரே, அதைப் பிடித்துக் கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” என்று கூறியுள்ளார் (பிலி. 3:13-14). அவர் தன்னுடைய கடந்த கால தோல்விகளை எண்ணிப்பார்த்து அவை தன்னைக் குற்ற உணர்வினால் துவண்டு போக அனுமதிக்கவும் இல்லை, தன்னுடைய நிகழ்கால வெற்றிகள் தன்னை மெத்தனமாக இருக்கவும் அனுமதிக்கவில்லை. தான் இன்னும் அதிகமதிகமாய் இயேசுவைப் போல மாறும் இலக்கை நோக்கி அவர் தொடர்ந்து முன்னேறிச் சென்றுகொண்டிருந்தார்.

நாமும் இப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம். நம்முடைய கடந்த காலத் தோல்விகளையோ வெற்றிகளையோ பொருட்படுத்தாது இயேசுவைப் போல மாற வேண்டும் என்கிற இறுதி இலக்கை நோக்கி, தொடர்ந்து முன்னேறிச் செல்வோமாக. நாம் உலகப்பிரகாரமான பரிசுப்பொருளுக்காக ஓடவில்லை. மாறாக, நித்தியத்திற்கும் அவரில் மகிழ்ந்திருக்கும் நிகரற்ற பரிசைப் பெறவே ஓடுகிறோம்.