Archives: ஜனவரி 2017

உங்கள் சுமைகளை இறக்கி வையுங்கள்

ஒருவன் கிராமப்புற சாலையிலே தன்னுடைய சரக்கு வண்டியை ஓட்டி கொண்டு வந்த பொழுது, பெரிய சுமையை சுமந்து வந்த ஒரு பெண்ணைக் கண்டான். வண்டியை நிறுத்தி அவளை அதில் ஏற்றிக்கொண்டான். அப்பெண் நன்றி தெரிவித்துவிட்டு வண்டியின் பின் பகுதியில் ஏறிக்கொண்டாள். சற்று நேரம் கழித்து திரும்பி பார்த்த பொழுது அவன் கண்ட காட்சி அவனை வியப்பில் ஆழ்த்தியது. அப்பெண் வண்டியில் அமர்ந்திருந்தாலும் அவளுடைய சுமையை அவள் இன்னமும் சுமந்து கொண்டிருந்தாள். ஆச்சரியத்துடன், “தயவுசெய்து உங்கள் சுமையை வண்டியிலே இறக்கி வையுங்கள். இந்த சரக்கு வண்டியினால் உங்களையும், உங்கள் சுமையையும் தாராளமாய் கொண்டு செல்ல முடியும். அதனால் கவலையில்லாமல் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்” என்று கெஞ்சினான்.

நம்முடைய வாழ்க்கையின் போரட்ட பாதையிலே பயம், கவலை மற்றும் பதற்றம் ஆகிய சுமையை நாம் என்ன செய்கிறோம்? சில சமயம் கிறிஸ்துவுக்குள் இளைப்பாறுவதை விடுத்து, நானும் அப்பெண்ணைப் போலவே நடந்துகொள்கிறேன். “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத். 11:28) என இயேசு கூறியுள்ளார். ஆனாலும் அவரிடம் இறக்கி வைக்க வேண்டிய பாரங்களை நானே சுமந்து கொண்டிருப்பதை உணர்ந்திருக்கிறேன்.

நம்முடைய பாரங்களை ஜெபத்திலே தேவனிடம் கொண்டுவரும் பொழுது, அவற்றை நாம் இறக்கி வைக்கிறோம். “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” என்று அப்போஸ்தலனாகிய பேதுரு கூறுகிறார் (1 பேது. 5:7). அவர் நம்மை விசாரிக்கிறவராய் இருக்கிறபடியினால் அவர் மேல் நாம் நம்பிக்கை வைக்கும் பொழுது கவலையின்றி இளைப்பாறக் கற்றுக் கொள்ளுவோம். நம்மை அழுத்தி சோர்வுறச் செய்யும் பாரங்களை நாம் கஷ்டப்பட்டு சுமப்பதற்கு பதிலாக, தேவனே அதை சுமக்கும்படி அவரிடம் கொடுத்துவிடலாம்.

நம் தேவைகளின் ஆதாரம்

2010ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முழு உலகத்தின் கவனமும், சிலி (Chile) தேசத்தின் கோபியாபோ (Copiapo) என்னும் இடத்திலுள்ள சுரங்க குழியின் மீதே இருந்தது. ஏனெனில் பூமியின் மேற்பரப்பிலிருந்து 2300 அடி ஆழத்தில், 33 சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கித்தவித்துக் கொண்டிருந்தார்கள். பூமிக்கடியில் இருளிலே அகப்பட்டுக்கொண்டிருந்த அவர்களுக்கு எப்பொழுது உதவி வரும் என்று தெரியாது. பதினேழு நாட்கள் காத்திருப்பிற்குப் பின் துளை போடும் சத்தத்தை கேட்டார்கள். மீட்புக் குழுவினர் சுரங்கக் குழியின் சுரங்கப்பாதையின் மேற்பகுதியில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று சிறு துளைகள் போட்டு, உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளை அனுப்ப வழி உண்டாக்கினார். அச்சுரங்க தொழிலாளிகள் பூமியின் மேற்பரப்பிலிருந்து மீட்புக் குழுவினர் அனுப்பும் பொருட்களை கொண்டு பிழைத்திருக்க அம்மூன்று வழிகளையே சார்ந்திருந்தனர். 69ஆம் நாள் அக்குழியிலிருந்த கடைசி சுரங்கத் தொழிலாளியும் மீட்கப்பட்டான்.

இவ்வுலகில் நம்மையும் தாண்டி உள்ள வளத்தையும் ஆதாரத்தையும் ஒதுக்கிவிட்டு, நம்மால் வாழ இயலாது. அண்டசராசரங்களையும் படைத்த சிருஷ்டி கர்த்தாவே நம் தேவை அனைத்தையும் சந்திக்கிறவர். அச்சுரங்க தொழிலாளிகளின் தேவைகளை சந்திக்க உதவிய அத்துளைகள் போல, நம்முடைய தேவை அனைத்தையும் சந்திக்கும் தேவனோடு நம்மை இணைப்பது நம்முடைய ஜெபங்களே.

“எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” (மத். 6:11) என்று ஜெபிக்கும்படி இயேசு உற்சாகப்படுத்துகிறார். அடிப்படை தேவையான ஆகாரத்திற்காக ஜெபிக்க கூறுவதின் மூலம் நம்முடைய அன்றாட வாழ்வின் அனைத்து தேவைகளையும் அவர் நமக்கு அளிக்க விரும்புவதை விளங்கிக் கொள்ளலாம். அதாவது, சரீரப்பிரகாரமான தேவைகள் மட்டுமின்றி சுகம், தைரியம், ஞானம் மற்றும் ஆறுதல் ஆகிய அனைத்தையும் அளிக்க விரும்புகிறார்.

ஜெபத்தின் மூலம் எக்கணமும் அவரை அணுகமுடியும். மேலும் நாம் கேட்கும் முன்னமே நம்முடைய தேவைகள் அனைத்தையும் அவர் அறிந்திருக்கின்றார் (வச. 8). நீங்கள் எவ்வகையான தேவையோடு இன்று போராடிக் கொண்டிருக்கிறீர்கள்? “தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும்... கர்த்தர் சமீபமாயிருக்கிறார்” (சங். 145:18).

கொண்டாட வேண்டிய ஒருவர்

இயேசுவினுடைய பிறப்பை சித்தரிக்கும் காட்சிகளில் மேய்ப்பர்கள் இயேசுவை மாட்டுத் தொழுவத்தில் கண்ட அதே வேளையில், கிழக்கத்திய ஞானிகளும் பெத்தலகேமிலே இயேசுவைக் கண்டது போல விவரிக்கப்பட்டிருக்கும். மத்தேயு சுவிசேஷத்தில் மாத்திரமே சாஸ்திரிகள் சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதில் ஞானிகளின் வருகை சிறிது காலம் கழித்தே நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவர்கள் இயேசுவை மாட்டுத் தொழுவத்திலன்றி ஒரு வீட்டிலேயே கண்டார்கள். “அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்” என்று மத்தேயு 2:11 கூறுகிறது.

புதிய வருடத்திற்குள் பிரவேசித்திருக்கும் நமக்கு, கிழக்கத்திய ஞானிகள் சிறிது காலம் கழித்து இயேசுவுக்கு செலுத்திய கனமும், துதியும் அவர் எப்பொழுதும் போற்றுதலுக்கும் ஆராதனைக்கும் உரியவர் என்பதை நினைவுபடுத்துகிறது. நம்முடைய விடுமுறை நாட்களெல்லாம் முடிந்து, சகஜ வாழ்க்கைக்கு நாம் திரும்பிய பின்பும், நம்முடைய கொண்டாட்டங்களுக்கு உரியவர் இப்பொழுதும் நம்மோடு உண்டு.

எல்லா காலக்கட்டத்திலும் “நம்மோடிருக்கும் தேவன்” இம்மானுவேலாகிய இயேசு கிறிஸ்துவே (மத். 1:23). “சகல நாட்களிலும்” அவர் நம்மோடு இருப்பதாக வாக்கு பண்ணியுள்ளார் (மத். 28:20). அவர் எப்பொழுதும் நம்மோடு இருப்பதினால், நம்முடைய இருதயங்களில் ஒவ்வொரு நாளும் அவரை துதித்து, ஆராதித்து இனி வரும் வருடங்களிலும் அவர் நமக்கு உண்மையுள்ளவராய் இருப்பார் என நம்பிக்கை கொள்வோமாக. கிழக்கத்திய ஞானிகள் அவரை தேடிக் கண்டடைந்தது போல நாமும் நாம் இருக்கும் இடத்திலேயே நம்முடைய இருதயங்களில் அவரைத் தேடி ஆராதிப்போமாக.

தேவன் சொல்வதைக் கேட்பது

“நீ எங்கு இருக்கிறாய்?” என்று நான் என் மகனைக் கண்டிப்பான தொனியில் சத்தமாக அவன் பெயரை சொல்லி கூப்பிடும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அவனை கூப்பிடும் பொழுது அவன் மிகவும் சந்தோஷமடைவான். அவன் ஏதாவது சேட்டை செய்து விட்டு என்னிடமிருந்து மறைந்துகொள்ள நினைக்கும்பொழுது, நான் அப்படிக் கூப்பிடுவேன். என் மகன் எவ்விதத்திலும் கஷ்டப்படக்கூடாது என்கிற அக்கறையினால் என் சத்தத்திற்கு அவன் செவிசாய்க்க வேண்டும், கவனித்து கேட்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.

ஆதாமும், ஏவாளும் ஏதேன் தோட்டத்திலே தேவனுடைய சத்தத்தை கேட்டு பழக்கப்பட்டவர்கள். ஆனாலும், தேவனுக்கு கீழ்ப்படியாமல் அவர்களுக்கு தடைசெய்யப்பட்டிருந்த கனியை அவர்கள் புசித்த பிறகு, தேவனுடைய சத்தத்தை கேட்டவுடன் அவர்கள் மறைந்து கொண்டார்கள் (ஆதி. 3:9). தேவன் சொன்ன கட்டளையை தாங்கள் மீறினதினால் தவறு செய்து விட்டதை உணர்ந்த அவர்கள் தேவனைக் காண பயந்தார்கள் (வச. 11).

பின்பு, ஆதாமையும், ஏவாளையும் தோட்டத்திலே கண்ட பொழுது, தேவனது வார்த்தைகள் அவர்களுடைய தவறை உணர்த்தி கண்டித்தது (வச. 13-19) மாத்திரமன்றி, அவர்களுக்கு இரக்கம் பாராட்டி, மனுகுலத்தை மீட்கும் இரட்சகரை வாக்கு பண்ணி அவர்களுக்கு நம்பிக்கை அளித்தார் (வச. 15).

தேவன் நம்மை தேட வேண்டிய அவசியமில்லை. நாம் எங்கு இருக்கிறோம் என்பதையும், எதை மறைக்க முயற்சிக்கிறோம் என்பதையும் அவர் நன்கு அறிவார். ஆனால், அன்புள்ள பரம பிதாவாக நம்முடைய இருதயத்தோடு பேசி மன்னிப்பையும், மீட்பையும் அளிக்கவே விரும்புகிறார். நாம் அவருடைய சத்தத்தை கேட்டு கவனித்து, அதற்கு செவி சாய்க்க வேண்டும் என்று அவர் வாஞ்சிக்கிறார்.

பெருகிய அன்பு

காரெனின் (Karen) சபையிலே உள்ள ஒரு பெண்மணிக்கு அமியோடிரேபிக் லேட்டரல் ஸெலேராசிஸ் (Amyotrophic lateral sclerosis) என்னும் வியாதி கண்டறியப்பட்ட பொழுது, எல்லாம் மோசமாக காட்சியளித்தது. இந்த கொடூரமான வியாதி நரம்பு மண்டலத்தையும், சதைகளையும் பாதித்து, இறுதியாக பக்கவாதத்தை விளைவிக்கும். வீட்டிலேயே வைத்து மருத்துவ வசதி அளிக்கும் அளவிற்கு அவர்கள் மருத்துவக் காப்பீடு செய்யவில்லை. ஆனால் அவளுடைய கணவருக்கோ அவர்களை மருத்துவமனையில் சேர்த்து விட்டு வர மனமில்லை.

ஒரு நர்ஸாக காரென் தன்னுடைய திறமையை கொண்டு உதவும்படியாக அப்பெண்ணின் வீட்டிற்கு செல்ல ஆரம்பித்தாள். ஆனால், தன்னுடைய குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, அப்பெண்ணிற்கும் உதவி செய்வதின் சிரமத்தை விரைவாகவே உணர்ந்தாள். ஆகவே, சபையிலுள்ள மற்றவர்களுக்கு அப்பெண்ணை கவனித்து கொள்ள வேண்டிய வழிமுறைகளை கற்றுத்தர ஆரம்பித்தாள். அவ்வியாதியின் ஏழாண்டு காலக்கட்டத்தில், காரென், 31 தன்னார்வ உதவியாளர்களை பயிற்றுவித்தாள். அவர்கள் அக்குடும்பத்தை அன்பாலும், ஜெபத்தாலும், நடைமுறை உதவிகளினாலும் சூழ்ந்து கொண்டனர்.

“தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூர வேண்டும்” (1 யோவா. 4:21) என்று சீஷனாகிய யோவான் கூறுகிறார். அப்படிப் பட்டதான அன்பை வெளிக்காட்டும் ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டாக காரென் விளங்குகிறாள். தன்னுடைய திறமையோடும், இரக்கத்தோடும் கஷ்டப்படுகிற தன்னுடைய தோழிக்காக உதவும்படியாக குடும்பமாகிய சபையை ஒன்றுதிரட்ட நோக்கம் கொண்டாள். தேவையோடு இருந்த ஒருவர் மேலிருந்த அவளுடைய அன்பு, மற்றவர்களும் உதவியில் பங்குகொண்ட பொழுது பெருகியது.