“நீ எங்கு இருக்கிறாய்?” என்று நான் என் மகனைக் கண்டிப்பான தொனியில் சத்தமாக அவன் பெயரை சொல்லி கூப்பிடும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அவனை கூப்பிடும் பொழுது அவன் மிகவும் சந்தோஷமடைவான். அவன் ஏதாவது சேட்டை செய்து விட்டு என்னிடமிருந்து மறைந்துகொள்ள நினைக்கும்பொழுது, நான் அப்படிக் கூப்பிடுவேன். என் மகன் எவ்விதத்திலும் கஷ்டப்படக்கூடாது என்கிற அக்கறையினால் என் சத்தத்திற்கு அவன் செவிசாய்க்க வேண்டும், கவனித்து கேட்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.

ஆதாமும், ஏவாளும் ஏதேன் தோட்டத்திலே தேவனுடைய சத்தத்தை கேட்டு பழக்கப்பட்டவர்கள். ஆனாலும், தேவனுக்கு கீழ்ப்படியாமல் அவர்களுக்கு தடைசெய்யப்பட்டிருந்த கனியை அவர்கள் புசித்த பிறகு, தேவனுடைய சத்தத்தை கேட்டவுடன் அவர்கள் மறைந்து கொண்டார்கள் (ஆதி. 3:9). தேவன் சொன்ன கட்டளையை தாங்கள் மீறினதினால் தவறு செய்து விட்டதை உணர்ந்த அவர்கள் தேவனைக் காண பயந்தார்கள் (வச. 11).

பின்பு, ஆதாமையும், ஏவாளையும் தோட்டத்திலே கண்ட பொழுது, தேவனது வார்த்தைகள் அவர்களுடைய தவறை உணர்த்தி கண்டித்தது (வச. 13-19) மாத்திரமன்றி, அவர்களுக்கு இரக்கம் பாராட்டி, மனுகுலத்தை மீட்கும் இரட்சகரை வாக்கு பண்ணி அவர்களுக்கு நம்பிக்கை அளித்தார் (வச. 15).

தேவன் நம்மை தேட வேண்டிய அவசியமில்லை. நாம் எங்கு இருக்கிறோம் என்பதையும், எதை மறைக்க முயற்சிக்கிறோம் என்பதையும் அவர் நன்கு அறிவார். ஆனால், அன்புள்ள பரம பிதாவாக நம்முடைய இருதயத்தோடு பேசி மன்னிப்பையும், மீட்பையும் அளிக்கவே விரும்புகிறார். நாம் அவருடைய சத்தத்தை கேட்டு கவனித்து, அதற்கு செவி சாய்க்க வேண்டும் என்று அவர் வாஞ்சிக்கிறார்.