ஒருவன் கிராமப்புற சாலையிலே தன்னுடைய சரக்கு வண்டியை ஓட்டி கொண்டு வந்த பொழுது, பெரிய சுமையை சுமந்து வந்த ஒரு பெண்ணைக் கண்டான். வண்டியை நிறுத்தி அவளை அதில் ஏற்றிக்கொண்டான். அப்பெண் நன்றி தெரிவித்துவிட்டு வண்டியின் பின் பகுதியில் ஏறிக்கொண்டாள். சற்று நேரம் கழித்து திரும்பி பார்த்த பொழுது அவன் கண்ட காட்சி அவனை வியப்பில் ஆழ்த்தியது. அப்பெண் வண்டியில் அமர்ந்திருந்தாலும் அவளுடைய சுமையை அவள் இன்னமும் சுமந்து கொண்டிருந்தாள். ஆச்சரியத்துடன், “தயவுசெய்து உங்கள் சுமையை வண்டியிலே இறக்கி வையுங்கள். இந்த சரக்கு வண்டியினால் உங்களையும், உங்கள் சுமையையும் தாராளமாய் கொண்டு செல்ல முடியும். அதனால் கவலையில்லாமல் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்” என்று கெஞ்சினான்.

நம்முடைய வாழ்க்கையின் போரட்ட பாதையிலே பயம், கவலை மற்றும் பதற்றம் ஆகிய சுமையை நாம் என்ன செய்கிறோம்? சில சமயம் கிறிஸ்துவுக்குள் இளைப்பாறுவதை விடுத்து, நானும் அப்பெண்ணைப் போலவே நடந்துகொள்கிறேன். “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத். 11:28) என இயேசு கூறியுள்ளார். ஆனாலும் அவரிடம் இறக்கி வைக்க வேண்டிய பாரங்களை நானே சுமந்து கொண்டிருப்பதை உணர்ந்திருக்கிறேன்.

நம்முடைய பாரங்களை ஜெபத்திலே தேவனிடம் கொண்டுவரும் பொழுது, அவற்றை நாம் இறக்கி வைக்கிறோம். “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” என்று அப்போஸ்தலனாகிய பேதுரு கூறுகிறார் (1 பேது. 5:7). அவர் நம்மை விசாரிக்கிறவராய் இருக்கிறபடியினால் அவர் மேல் நாம் நம்பிக்கை வைக்கும் பொழுது கவலையின்றி இளைப்பாறக் கற்றுக் கொள்ளுவோம். நம்மை அழுத்தி சோர்வுறச் செய்யும் பாரங்களை நாம் கஷ்டப்பட்டு சுமப்பதற்கு பதிலாக, தேவனே அதை சுமக்கும்படி அவரிடம் கொடுத்துவிடலாம்.