இன்றைய வேதாகமப் பகுதி
பிறருடைய கவனத்தை ஈர்க்க கெரி (Kerri) மிகவும் சிரமப்பட்டாள். மற்றவர்கள் அவளது செயல்களை ரசித்து பாராட்ட வேண்டும் என்றும் விரும்பி, எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பதுபோல தன்னைக் காட்டிக் கொண்டாள். சமுதாயத்தில் சிலருக்கு அவள் உதவுவதை பார்த்துப் பலர் பாராட்டினர். ஆனால் மனந்திறக்கும் சில சமயங்களில் “நான் தேவனை நேசிக்கிறேன், ஆனால் என் வாழ்க்கை வெறும் முன் தோற்றமே” என கெரி தன்னுடைய உண்மையான நிலையை ஒத்துக்கொள்வாள். அவளது பாதுகாப்பின்மை தான் இதற்கெல்லாம் காரணம். பிறரது பாராட்டுதலுக்காக அவள் நல்லவளாகத் தன்னை எப்போதும் காண்பித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் அப்படிச் செய்வதினால் அதிகமாக உழைத்து மனதளவில் பலவீனமடைந்து கொண்டிருந்தாள்.
இப்படித்தான் நாமும் சில நேரங்களில் செயல்படுகிறோம். ஏனெனில் எப்பொழுதும் நாம் சரியான உள் நோக்கத்துடன் செயல்படுவதில்லை. நிச்சயமாக நாம் தேவனையும், பிறரையும் நேசிக்கின்றோம். அதில் சந்தேகமில்லை. ஆனால் நாம் வாழும் கிறிஸ்தவ வாழ்க்கையில், நாம் செய்யும் பல காரியங்களை பிறருடைய நல் மதிப்பையும் மரியாதையையும் பெறவே செய்கிறோம்.
மற்றவர்கள் காணும்படியாக நாம் கொடுப்பது, ஜெபிப்பது, உபவாசிப்பது (மத். 6:1-6) குறித்து மலைப்பிரசங்கத்தில் இயேசு, “நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதாக”, “அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு”, “நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக” (வச. 3,6,17) என போதித்தார்.
இந்நாட்களில் உதவி செய்வதை பகிரங்கப்படுத்துகின்றனர். ஆனால் பெயரைக் கூடச் சொல்லாமல் செய்யும் வேலைகள் தேவன் நம்மைக்குறித்து வைத்திருக்கும் எண்ணத்தில் தங்கி இளைப்பாறக் கற்றுக்கொள்ள உதவும். அவரது சாயலில் நம்மை படைத்தார். நம்மை அந்த அளவிற்கு விலையேறப்பெற்றவர்களாய்க் கருதியதினால் தான் அவரது ஒரே பேறன குமாரனை நமக்களித்து அவரது அன்பை நமக்கு வெளிப்படுத்துகின்றார்.
பன்னிரெண்டாவது மனிதன்
டெக்ஸாஸ் ஏ&எம் பல்கலைகழகத்தில் உள்ள கால் பந்தாட்ட மைதானத்தில் ஒரு பெரிய அறிவிப்பு பலகை இருக்கும். “பன்னிரெண்டாவது மனிதனின் வீடு” என்று அதில் எழுதியிருக்கும். ஒவ்வொரு அணியிலும் பதினொரு போட்டியாளர்கள் உண்டு. அந்த பல்கலைகழகத்தில் படிக்கும் மற்ற மாணவர்கள் சார்பாக அவர்களது அணியை உற்சாகப் படுத்தும் விதத்தில் அந்த மைதானத்தில் நின்று கொண்டு போட்டி முடியும் வரை உற்சாக படுத்துவான். அவன் தான் அந்த பன்னிரெண்டாவது மனிதர். இந்த வழக்கம் 1922 ஆம் ஆண்டு தோன்றியது. அப்படி விளையாடும்பொழுது ஆட்டக்காரர் யாரேனும் காயமடைந்ததால் அவருக்குப் பதிலாக ஒரு விளையாட்டு அனுப்ப அந்த அணியின் பயிற்சியாளர் ஓர் மாணவனை தயார் நிலையில் அங்கு நிற்க வைத்தார். அவன் விழையாட்டுக்குள் ஒருபொழுதும் பங்கு கொள்ள அவசியம் ஏற்படாத பொழுதும் போட்டி முடியும் வரை அங்கு நின்று கொண்டிருந்தார். அவனது பிரசன்னம் அந்த அணியை மிகவும் உற்சாகப்படுத்தி பலப்படுத்தியது.
அதிகமாக உபத்திரவப்பட்டும் தேவனிடத்தில் விசுவாசமாய் இருந்த விசுவாச வீரர்களைப் பற்றி எபிரெயர் 11ஆம் அதிகாரம் கூறுகிறது. “ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்” (வச. 1) என்று அவர்களைக் குறித்து 12ஆம் அதிகாரம் இப்படியாக துவக்குகிறது.
நம்முடைய விசுவாசப் பயணத்தில் நாம் தனியாகப் பயணிக்கவில்லை. நமக்கு முன்சென்ற சாதாரண மக்களும், பரிசுத்தவான்களும், தேவனிடத்தில் விசுவாசத்துடன் நடந்து சென்ற ஒவ்வொருவரின் வாழ்க்கையும் நமக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அவர்கள் இப்பொழுது பரலோகத்தில் இருந்து நம்மைப் பலப்படுத்தி வருகின்றனர். நாம் வாழ்க்கை எனும் மைதானத்தில் இருக்கும் பொழுது, அவர்கள் தான் நமக்கு பக்கபலமாய் நின்று கொண்டிருக்கும் நம்முடைய ஆவிக்குரிய 12ஆவது மனிதர்.
“விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற” (12:1), இயேசுவின் மேல் நம் கண்களை பதிய வைக்கும் பொழுது, அவரை பின்பற்றினவர்களினால் நாம் இப்பொழுது உற்சாகப்படுத்தப் படுகிறோம்.
நான் ஒரு பொருட்டா?
சிறப்பு அங்காடியில் (Super Market) பொருட்களை வாங்கிவிட்டு பணம் செலுத்துவதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்தபொழுது, நொறுக்குத் தீனியைப் பார்த்துக் கொண்டிருந்த மொட்டைத் தலையுடன் மூக்குத்தி அணிந்த சில இளைஞர்களை கவனித்தேன். மேலும் அலுவலகத்தில் பணிபுரியும் வாலிபன் ஒருவன் இறைச்சித் துண்டு, கீரை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு வாங்குவதையும், வயதான பெண்மணி ஸ்டராபெரி மற்றும் ‘பீச்’ பழங்களை (Peaches) வாங்குவதையும் பார்த்து கொண்டிருந்தேன். இவர்களை எல்லாம் தேவன் அறிந்திருக்கிறாரா? இவர்களுடைய பெயர்கள் அவருக்குத் தெரியுமா? உண்மையிலேயே இவர்கள் எல்லோரும் அவருக்கு முக்கியமானவர்களா? என்றெல்லாம் என் மனதில் கேள்விகள் எழுந்தது.
எல்லாவற்றையும் படைத்தவர் தான் மனிதனையும் படைத்தார். நாம் ஒவ்வொருவரும் அவருடைய தனிப்பட்ட அன்பையும், கவனத்தையும் பெற்றுக் கொள்ளப் பாத்திரவான்களாகப் படைக்கப்பட்டிருக்கிறோம். மனிதனாகப் பிறந்து தேவன் தம்முடைய அற்புதமான அன்பை இஸ்ரேல் மலைகளின் மத்தியில் வாசம் செய்து வெளிப்படுத்தினார். பின்னர் முற்றிலுமாக அதை சிலுவையில் நமக்கு காண்பித்தார்.
இயேசு பூமிக்கு ஓர் சாதாரண ஊழியக்காரரைப் போல் வந்தார். எந்த ஒரு சூழ்நிலையில் இருக்கும் எளிய மனிதனையும் அவர் கனப்படுத்தினார். அவரது பலத்த கரம் சிறுமைப்பட்ட எளியவரையும் அணைத்துக் கொண்டது. அவரது கரத்தில் ஒவ்வொருவருடைய பெயர்களும் எழுதப்பட்டிருக்கிறது. அதை அவர் தம் தழும்புகளினாலும், காயங்களினாலும், எழுதியுள்ளார். அப்படிபட்ட விலை செலுத்தி தேவன் நம்மில் அன்பு கூர்ந்தார்.
யோபு மற்றும் பிரசங்கி புத்தகங்களில் எழுதப்பட்டது போல நான் சுய-பரிதாபத்தால் வாடும் பொழுதும், தனிமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் பொழுதும் நான் சுவிஷேச புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ள இயேசுவைப்பற்றிய செய்திகளை படித்து தியானிப்பேன். பிரசங்கி புத்தகத்தில் சொன்னது போல “சூரியனுக்குக் கீழே” (பிர. 1:3) வசிக்கும் மனிதனின் வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இல்லை என்ற முடிவிற்கு வந்தால், தேவன் பூமிக்கு வந்த முக்கியமான நோக்கத்தையே நான் அறியவில்லை என்பதைக் காண்பிக்கின்றது. நான் முக்கியத்துவம் பெற்றவனா? நான் விசேஷித்தவனா? என்ற கேள்விகளுக்கு ஒரே பதில் உண்டு. இயேசுதான் அதற்கு பதில்.
இப்பொழுது அனைத்தும் ஒன்றாக
ஆஸ்திரேலியா தேசத்தின், பெர்த் (Perth) நகரில், நிக்கோலஸ் டெய்லர் (Nicholas Taylor) ஓர் ரயிலில் ஏற முயன்றார். அப்பொழுது அவருடைய கால் பிளாட்பாரத்திற்கும் ரயில் பெட்டிக்கும் இடையில் மாட்டிக் கொண்டது. ரயில் நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் அவரை விடுவிக்க முடியவில்லை. அதைப்பார்த்த மக்கள் உதவ முன்வந்தனர். கிட்டத்தட்ட 50 பயணிகள் ஒன்றாக சேர்ந்து ரயிலைத் தள்ள முயன்றனர். அனைவரும் சேர்ந்து முழு பலத்துடன் ‘ஒன்று, இரண்டு, மூன்று’ எனக் கூறி ரயிலை நகர்த்தினர். அப்பொழுது அவரது கால் விடுபட்டது.
அப்போஸ்தலனாகிய பவுலும், ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்யும் கிறிஸ்தவர்களின் பலத்தை நன்கு அறிந்திருந்தார். அப்படி செயல்பட எல்லா சபை மக்களையும் உற்சாகப்படுத்தி கடிதங்கள் அனுப்பினார். ரோம விசுவாசிகளிடம் கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று போதித்தார். “நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப் படுத்தும்படிக்கு, பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தை உள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக” (ரோம. 15:5-6) என்றான்.
பிற விசுவாசிகளோடு நாம் ஒன்றுபட்டு நல்ல ஐக்கியத்துடன் வாழ்ந்து வந்தால், தேவனுடைய வல்லமையை நாம் எளிதாக உலகிற்கு பிரசங்கிக்க முடியும். அதுவே உலகத்தின் உபத்திரவத்தை தாங்கும் பெலத்தை நமக்கு தரும். பிலிப்பியர்கள் அவர்களது விசுவாசத்திற்காக ஓர் விலைகிரயத்தை செலுத்துவார்கள் என்பதை நன்கு அறிந்திருந்த பவுல், அவர்களை ஒன்றாய் செயல்பட உற்சாகபடுத்தினார். “நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமாவினாலே சுவிஷேசத்தின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றிலும் மருளாதிருக்கிறீர்களென்று” (பிலி. 1:27) அறிவேன் என்றான்.
சாத்தானுக்கு எப்பொழுதும் பிரித்து ஆள்வது பிடிக்கும், ஆனால் அவன் தந்திரங்களை நாம் தேவனுடைய உதவியோடு முறியடிக்கலாம். “சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாய் இருங்கள்” (எபே. 4:3).
நன்றாக கூர்ந்து கவனியுங்கள்
சபையிலே பிரசங்கம் செய்து கொண்டிருந்த போதகரையே உற்றுக் கவனிக்கும் விதமாக நான் உட்கார்ந்து கொண்டிருந்தேன். நான் உட்கார்ந்திருக்கும் விதத்தைப் பார்த்தால் அவர் சொல்வதை எல்லாம் நன்றாக கவனிப்பது போல் இருக்கும். அப்பொழுது தீடீரென எல்லோரும் கைதட்டிச் சிரித்தனர். ஆச்சரியத்துடன் நான் அங்கும் இங்கும் பார்த்தேன். அந்தப் பிரசங்கியார் நகைச்சுவையாக எதையோ கூறியிருக்க வேண்டும். ஆனால் அது எனக்குப் புரியவில்லை. ஏனெனில் நான் அவர் சொல்வதைக் கவனிக்கவேயில்லை. பார்ப்பதற்கு நன்றாகக் கவனிப்பதுபோல் காட்சியளித்தாலும், உண்மையில் என் மனம் அங்கில்லை.
இதைப்போலத் தான் நாமும் பல நேரங்களில் காது கொடுப்போம்; ஆனால் கேட்கமாட்டோம். கண்களினால் பார்ப்போம்; காண மாட்டோம், வெளியரங்கமாய் ஓர் இடத்தில் இருப்போம்; ஆனால் மனதோ வேறொரு இடத்தில் இருக்கும். இப்படியே வாழ்ந்து வந்தால், நாம் பல முக்கியமான செய்திகளை அறிந்து கொள்ளாமல் போய் விடுவோம்.
தேவனுடைய கட்டளைகளை யூத ஜனங்களின் முன்பாக எஸ்றா படித்தார். “சகல ஜனங்களும் நியாயப்பிரமாண புஸ்தகத்திற்குக் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள்” (நெ. 8:3). வாசித்ததின் அர்த்தத்தை விளக்கிய பொழுது, அவர்கள் புரிந்து கொண்டார்கள் (வச. 8). அதன் விளைவாக மனந்திரும்பி வாழ்வில் எழுப்புதல் அடைந்தனர். இது போலவே சமாரியாவில் பிலிப்பு மூலமாக எழுப்புதல் ஏற்பட்டது (அப். 8:1). எருசலேம் விசுவாசிகள் உபத்திரவப்பட்டபொழுது, பிலிப்பு சமாரிய மக்களை நோக்கி சென்றார். அந்த ஜனங்கள் அவர் செய்த அற்புத அடையாளங்களை மட்டும் பார்க்கவில்லை, “அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டுக் கவனித்தார்கள்” (வச. 6). அதனால் “அந்தப் பட்டணத்திலே மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று” (வச. 8).
ஊரைச் சுற்றும் வாலிபன்போல் நம் மனம் செயல்படும் பொழுது, நாம் நம் பக்கத்தில் இருக்கும் பல முக்கியமான நல்ல விஷயங்களை அறிந்து கொள்ளத்தவறிவிடுகிறோம். பரலோக பிதாவைப் பற்றி நாம் கேட்கும் பொழுது அளவில்லாத மகிழ்ச்சியையும், அதிசயத்தையும் உணர்கிறோம். இதை அனுபவிக்காமல் தடுக்கும் கவனச்சிதைவை தவிர்த்து அவரை அறிந்து கொள்ளும் ஜீவ வார்த்தைகளை நாம் அதிகக் கவனத்துடன் கேட்க வேண்டும்.