ஆஸ்திரேலியா தேசத்தின், பெர்த் (Perth) நகரில், நிக்கோலஸ் டெய்லர் (Nicholas Taylor) ஓர் ரயிலில் ஏற முயன்றார். அப்பொழுது அவருடைய கால் பிளாட்பாரத்திற்கும் ரயில் பெட்டிக்கும் இடையில் மாட்டிக் கொண்டது. ரயில் நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் அவரை விடுவிக்க முடியவில்லை. அதைப்பார்த்த மக்கள் உதவ முன்வந்தனர். கிட்டத்தட்ட 50 பயணிகள் ஒன்றாக சேர்ந்து ரயிலைத் தள்ள முயன்றனர். அனைவரும் சேர்ந்து முழு பலத்துடன் ‘ஒன்று, இரண்டு, மூன்று’ எனக் கூறி ரயிலை நகர்த்தினர். அப்பொழுது அவரது கால் விடுபட்டது.

அப்போஸ்தலனாகிய பவுலும், ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்யும் கிறிஸ்தவர்களின் பலத்தை நன்கு அறிந்திருந்தார். அப்படி செயல்பட எல்லா சபை மக்களையும் உற்சாகப்படுத்தி கடிதங்கள் அனுப்பினார். ரோம விசுவாசிகளிடம் கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று போதித்தார். “நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப் படுத்தும்படிக்கு, பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தை உள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக” (ரோம. 15:5-6) என்றான்.

பிற விசுவாசிகளோடு நாம் ஒன்றுபட்டு நல்ல ஐக்கியத்துடன் வாழ்ந்து வந்தால், தேவனுடைய வல்லமையை நாம் எளிதாக உலகிற்கு பிரசங்கிக்க முடியும். அதுவே உலகத்தின் உபத்திரவத்தை தாங்கும் பெலத்தை நமக்கு தரும். பிலிப்பியர்கள் அவர்களது விசுவாசத்திற்காக ஓர் விலைகிரயத்தை செலுத்துவார்கள் என்பதை நன்கு அறிந்திருந்த பவுல், அவர்களை ஒன்றாய் செயல்பட உற்சாகபடுத்தினார். “நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமாவினாலே சுவிஷேசத்தின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றிலும் மருளாதிருக்கிறீர்களென்று” (பிலி. 1:27) அறிவேன் என்றான்.

சாத்தானுக்கு எப்பொழுதும் பிரித்து ஆள்வது பிடிக்கும், ஆனால் அவன் தந்திரங்களை நாம் தேவனுடைய உதவியோடு முறியடிக்கலாம். “சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாய் இருங்கள்” (எபே. 4:3).