பிறருடைய கவனத்தை ஈர்க்க கெரி (Kerri) மிகவும் சிரமப்பட்டாள். மற்றவர்கள் அவளது செயல்களை ரசித்து பாராட்ட வேண்டும் என்றும் விரும்பி, எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பதுபோல தன்னைக் காட்டிக் கொண்டாள். சமுதாயத்தில் சிலருக்கு அவள் உதவுவதை பார்த்துப் பலர் பாராட்டினர். ஆனால் மனந்திறக்கும் சில சமயங்களில் “நான் தேவனை நேசிக்கிறேன், ஆனால் என் வாழ்க்கை வெறும் முன் தோற்றமே” என கெரி தன்னுடைய உண்மையான நிலையை ஒத்துக்கொள்வாள். அவளது பாதுகாப்பின்மை தான் இதற்கெல்லாம் காரணம். பிறரது பாராட்டுதலுக்காக அவள் நல்லவளாகத் தன்னை எப்போதும் காண்பித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் அப்படிச் செய்வதினால் அதிகமாக உழைத்து மனதளவில் பலவீனமடைந்து கொண்டிருந்தாள்.

இப்படித்தான் நாமும் சில நேரங்களில் செயல்படுகிறோம். ஏனெனில் எப்பொழுதும் நாம் சரியான உள் நோக்கத்துடன் செயல்படுவதில்லை. நிச்சயமாக நாம் தேவனையும், பிறரையும் நேசிக்கின்றோம். அதில் சந்தேகமில்லை. ஆனால் நாம் வாழும் கிறிஸ்தவ வாழ்க்கையில், நாம் செய்யும் பல காரியங்களை பிறருடைய நல் மதிப்பையும் மரியாதையையும் பெறவே செய்கிறோம்.

மற்றவர்கள் காணும்படியாக நாம் கொடுப்பது, ஜெபிப்பது, உபவாசிப்பது (மத். 6:1-6) குறித்து மலைப்பிரசங்கத்தில் இயேசு, “நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதாக”, “அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு”, “நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக” (வச. 3,6,17) என போதித்தார்.

இந்நாட்களில் உதவி செய்வதை பகிரங்கப்படுத்துகின்றனர். ஆனால் பெயரைக் கூடச் சொல்லாமல் செய்யும் வேலைகள் தேவன் நம்மைக்குறித்து வைத்திருக்கும் எண்ணத்தில் தங்கி இளைப்பாறக் கற்றுக்கொள்ள உதவும். அவரது சாயலில் நம்மை படைத்தார். நம்மை அந்த அளவிற்கு விலையேறப்பெற்றவர்களாய்க் கருதியதினால் தான் அவரது ஒரே பேறன குமாரனை நமக்களித்து அவரது அன்பை நமக்கு வெளிப்படுத்துகின்றார்.