விலையேறப்பெற்றவர்
“என் பொக்கிஷம். . .” டால்கினின் லார்ட் ஆப் த ரிங்ஸ் என்கிற தொடர்கதைகளில் வருகிற “கொலும்” கதாபாத்திரம் சொல்லும் வசனம் இது. மூன்றுபாக திரைப்படமாகவும் இக்கதை எடுக்கப்பட்டுள்ளது. மெலிந்து உடலுடன், “சக்தி தரும் அரிய மோதிரத்தின்மேல்” கொள்ளை ஆசைகொண்டு அலைகிற கொலும் என்கிற குள்ளனை, இன்று பேராசைக்கும், தீராதவெறிக்கும், பித்துப்பிடித்த நிலைக்கும் மிகச்சரியான ஓர் அடையாளமாகக் காட்டலாம்.
“கொலும்” கதாபாத்திரம் சிக்கலானதும்கூட. மோதிரத்தின் மேலான விருப்பும்-வெறுப்பும், தன் மேலான விருப்பும்-வெறுப்பும் அதை பாடாய்ப்படுத்தும். “கொலுமின்” இந்த மனக்குமுறல்கள் போலத்தான் இன்று நம் ஒவ்வொருவருடைய மனவேட்கைகளும் உள்ளன. ஏதாவது ஒரு காரியத்தின்மேல் குறியாக இருப்போம் அல்லது “அதிகமாக” வேண்டுமென்கிற வேண்டாத ஏக்கம் இருக்கும். நாம் “பொக்கிஷமாகக்” கருதுகிற அந்தக் காரியங்கள் கிடைத்தால்தான் நமக்கு நிம்மதியே வரும். உண்மை என்னவென்றால், நமக்கு மனதிருப்தியைத் தருமென நாம் நினைக்கிற அந்தக் காரியங்கள்தாமே முன்பைவிட வெறுமையான உணர்வை உண்டாக்கிடும்.
ஆனால் இதைவிட மேலான ஒரு வாழ்க்கையும் இருக்கிறது. சங்கீதம் 16இல் தாவீது சொல்வதுபோல, நம் இருதயங்களின் ஏக்கங்கள் நம்மை இளைக்கச்செய்துவிடும்போல மிரட்டும்போது, மனநிம்மதி கிடைக்காமல் திண்டாடும்போது (வசனம் 4), தேவனிடம் அடைக்கலம் உண்டு என்கிற ஞாபகம் வரவேண்டும் (வச. 1), ஒவ்வொரு நற்காரியமும் அவரிடமிருந்து வருகிறது என்கிற ஞாபகம் வரவேண்டும் (வச. 2.)
அவற்றைப் பார்க்கும்போது மனநிம்மதி உண்டாகிறது என்பது தவறானது, பார்க்கும் நற்காரியங்களில் தேவ அழகு தெரிகிறது என்பதற்காகப் பார்க்கவேண்டும். (வசனம் 8). அப்போது மெய்யான மனரம்மியத்தை அனுபவிக்கலாம். தேவனுடைய சமுகத்தில் “பரிபூரண ஆனந்தம்” கிடைக்கும், “ஜீவ மார்க்கத்தில்” இன்றும் என்றென்றும் அவரோடு நடக்கலாம் (வச.11).

கண்ணியில் சிக்கிவிடாதீர்கள்
வட கரோலினாவில் எங்களுடைய வீட்டிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் மணல்பாங்கான ஒரு சிறு ஈரநிலப்பகுதியில்தான் வீனஸ் என்கிற பூச்சுண்ணி தாவரத்தை முதன்முதலாகக் கண்டுபிடித்தார்கள். ஊனுண்ணியான இந்தத் தாவரத்தைப் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும்.
வீனஸ் பூச்சுண்ணி தாவரங்கள் பார்ப்பதற்கு விரிந்த ஒரு பூ போலத் தெரியும். ஆனால் அது ஒரு கண்ணியமைப்பு. மணமிக்க தேன் போன்ற திரவம் அதனுள்ளே சுரக்கும். பூச்சிகள் அதற்குள்ளாக ஊர்ந்துசெல்லும்போது அதன் வெளிப்புற விளிம்போரங்களில் உள்ள சென்சார்கள் தூண்டப்படும், பொறியின் கதவுகள் ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் இறுக மூடிக்கொள்ளும். இரை உள்ளே மாட்டிக்கொள்ளும். அந்தப் பொறியானது இரையை மேலும் இறுக்கி, நொதி திரவங்களை வெளியிட்டு, அந்த இரையை கொஞ்சம் கொஞ்சமாக உணவாக்கிவிடும். அந்த மணல்பாங்கான பகுதியில் கிடைக்காத ஊட்டச்சத்தை இவ்வாறு பெற்றுக்கொள்ளும்.
நாம் எதிர்பாராத நேரத்தில் நம்மைச் சிக்கவைக்கும் வேறொரு பொறி பற்றி வேதாகமம் கூறுகிறது. அப்போஸ்தலனாகிய பவுல் தன் சீடனான தீமோத்தேயுவுக்குச் சொல்லும் புத்திமதியில் அதைக் காணமுடிகிறது: “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.” மேலும், “சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்” (1 தீமோ. 6:9-10).
பணமும் பொருட்களும் சந்தோஷத்திற்கு உத்தரவாதமளிப்பது போலத் தோன்றலாம், ஆனால் வாழ்க்கையில் அவற்றிற்கு முதலிடம் கொடுத்துவிட்டால், அது பொறியில் கால்வைப்பதற்கு சமமாகும். இயேசுவின் மூலம் தேவன் நமக்குச் செய்திருக்கிற நன்மையை மட்டுமே எண்ணி, நன்றியும் தாழ்மையும் நிறைந்த இருதயங்களோடு வாழும்போது இந்தப் பொறியிலிருந்து தப்பலாம். ஏனென்றால், “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.”
தேவன் தருகிற மனரம்மியத்தை இந்த உலகத்தின் தற்காலிக பொருட்களால் தரவே முடியாது. அவரோடு நாம் உறவு வைத்தால்தான் மெய்யான, நிலையான மனநிம்மதியைக் காணமுடியும்.

உயிருள்ள வண்ணத்தில்
சேவியர் மெக்கூரியின் பத்தாவது பிறந்த நாளை முன்னிட்டு, அவனுடைய அத்தை செலினா கண்ணாடி ஒன்றை பரிசாக அனுப்பியிருந்தார். கண்ணாடியை முகத்தில் மாட்டியதுமே அவன் அழுதுவிட்டான். பிறவிலேயே அவனுக்கு நிறக்குருடு இருந்தது. இதுவரையிலும் பார்த்த எல்லாமே சாம்பல், வெள்ளை, கருப்பு நிறங்களில் தான் தெரிந்திருந்தன. ஆனால் அவனுடைய அத்தை அனுப்பியிருந்தது என்குரோமா கண்ணாடிகள்; அதனால் தன் வாழ்நாளிலேயே முதன்முதலாக அவன் நிறங்களைப் பார்க்கமுடிந்தது. தன்னைச் சுற்றிலுமிருந்த ஒவ்வொரு அழகையும் கண்டு அவன் மகிழ்ச்சியில் திளைத்தபடியால், ஏதோ அற்புதம் நிகழ்ந்துவிட்டது போல அவனுடைய குடும்பத்தாரும் உணர்ந்தார்கள்.
தேவனிடமிருந்து வண்ணவண்ண ஒளிக்கதிர்கள் பளிச்சிட்ட காட்சியின் அழகைக் கண்டபோது, அப்போஸ்தலனாகிய யோவான் திக்குமுக்காடிப் போனார் (வெளி. 1:17). உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை அவருடைய முழுமகிமையில் காண்கிற பாக்கியம் யோவானுக்கு சற்று கிடைத்தது. “வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார். வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச்சுற்றி ஒரு வானவில்லிருந்தது; அதுபார்வைக்கு மரகதம்போல தோன்றிற்று … அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்கள் ... புறப்பட்டன” (வெளி. 4:2-5).
முன்னொரு காலத்தில் எசேக்கியேல் இதைப் போன்றதொரு தரிசனத்தைக் கண்டார். "நீலரத்தினம் போல விளங்கும் ஒரு சிங்காசனத்தின் சாயலும்" அதன் மீது உட்கார்ந்திருந்தவர் "அக்கினிமயமான சொகுசாவின் நிறமாக இருந்ததையும், அவரைச் சுற்றிலும் மகிமையின் பிரகாசமாக இருந்ததையும் கண்டார்.
உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை ஒரு நாளில் நாம் முகமுகமாகச் சந்திக்கப்போகிறோம். அப்போது நாம் காணப்போகிற மிக அற்புதமான காட்சியை இந்தத் தரிசனங்கள் சற்றே நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. தேவனுடைய சிருஷ்டிப்பில் இப்போது வெளிப்படுகிற தேவ அழகைக் கண்டு நாம் கொண்டாடலாம், இனி வெளிப்படயிருக்கும் மகிமையைக் காண்கிற ஆவலோடு வாழலாம்.

தேவனுக்கு அழகானவர்கள்
டெனிஸ் என்கிற இளம்பெண், தன் ஆண் நண்பனுடன் பழகத் துவங்கிய சமயத்தில் தன்னை ஒல்லியாகவைக்கவும், ஸ்டைலாக உடையணியவும் அதிக சிரத்தை எடுத்துக்கொள்வாள். அப்போதுதான் அவனுக்கு தன்னை அதிகமாகப் பிடிக்குமென நினைத்தாள். அப்படித்தானே மகளிர் பத்திரிகைகளும் விளம்பரப்படுத்துகின்றன. ஆனால் உண்மையில் அவன் என்ன நினைத்தான் என்பதை பின்னர்தான் அவள் கண்டுபிடித்தாள். அதாவது, “நீ ஒல்லியாக இல்லாமல், உடைகளில் அதிக கவனம் செலுத்தாமல் இருந்த நாட்களிலும்கூட உன்னை எனக்கு அதிகமாகப் பிடித்திருந்தது” என்று சொன்னான்.
அழகு என்பது “மனதுசார்ந்த” ஒன்று என்பதை டெனிஸ் அப்போது உணர்ந்தாள். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை வைத்துதான் பெரும்பாலும் அழகை மதிப்பிடுகிறோம். வெளிப்புற அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து, உள்ளான அழகின் முக்கியத்துவத்தை மறந்துவிடுகிறோம். ஆனால் தேவன் எப்போதும் நம்மை தம்முடைய அழகான, பிரியமான பிள்ளைகளாகவே பார்க்கிறார். தேவன் இந்த உலகத்தைச் சிருஷ்டித்தபோது, அற்புதமான ஒன்றை இறுதியில் படைத்தார். அது வேறு எதுவுமல்ல, நாம்தான். அவர் சிருஷ்டித்த எல்லாமே நன்றாயிருந்தன, ஆனால் நம்மை தம்முடைய சாயலில் சிருஷ்டித்தார், அதுதான் கூடுதல் சிறப்பு (ஆதி. 1:27).
தேவன் நம்மை அழகானவர்களாகப் பார்க்கிறார்! இயற்கையின் மகத்துவங்களை மனிதர்களோடு ஒப்பிடும்போது சங்கீதக்காரனால் பிரமிக்காமல் இருக்கமுடியவில்லை. “மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்” என்று கேட்கிறார் (சங். 8:4). ஆனாலும் மற்ற அனைத்தையும்விட நமக்கே அதிக மகிமையையும் கனத்தையும் கொடுக்க தேவன் தீர்மானித்தார் (வச. 5.).
இந்த உண்மையை உணரும்போது தேவனை ஏன் துதிக்கவேண்டும் என்று புரிகிறது, ஒரு நிச்சயம் கிடைக்கிறது (வச. 9). மற்றவர்கள் நம்மைப்பற்றி என்னவும் நினைக்கட்டும், ஏன் நாமும்கூட நம்மைப்பற்றி எதுவேண்டுமானாலும் நினைக்கலாம், ஆனால் ஒன்றை மட்டும் மறவாதிருங்கள்; நாம் தேவனுக்கு அழகானவர்கள்.

குமாரனைப் பின்பற்றுகிறவர்கள்
சூரியகாந்தி, உலகம் முழுவதிலும் காணப்படுகிறது; எங்கும் எளிதில் முளைக்கக்கூடியது. சாலையோரங்களிலும், பறவை தீவனங்கள் விழுகிற இடங்களிலும், வயல்களிலும், புல்வெளிகளிலும், புல்தரைகளிலும் சூரியகாந்தி முளைக்கிறது; சூரியகாந்தி பூக்களில் தேனீக்கள் மூலம் மகரந்தசேர்க்கை நடைபெறுகிறது. ஆனால் சூரியகாந்தி விவசாயத்திற்கு நல்ல மண் அவசியம். “கரிம பொருள் அல்லது குப்பையுரத்துடன் கூடிய” நன்கு வடிகட்டப்பட்ட, சற்று அமிலத்தன்மையுள்ள, சத்துநிறைந்த மண்ணில், விவசாயம் செய்யும்போது சூரியகாந்தி ருசிமிக்க விதைகளையும், சுத்தமான எண்ணெயையும், வயலில் கடினமாகப் பாடுபடுகிறவர்களுக்கு நல்ல வருமானத்தையும் கொடுப்பதாக இதழ் கூறுகிறது.
நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கும் “நல்ல நிலம்” அவசியமாகும். லூக்கா 8:15. விதைவிதைக்க புறப்பட்ட ஒருவன் பற்றி இயேசு ஓர் உவமை கூறினார். தேவ வார்த்தையானது பாறையான இடங்களிலும் அல்லது முள்ளான இடங்களிலும்கூட முளைக்கக்கூடியது (வச. 6-7). ஆனால் “வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே நல்ல நிலத்தில் அதாவது வேத வார்த்தையை, கேட்டு அதைப் பற்றிக்கொள்கிறவர்களில்தான் அது நிலைத்து பெரிய அறுவடைகொடுக்குமென்று அப்போது சொன்னார். (வச. 15).
இளம் சூரியகாந்தி செடிகள் பொறுமையாக வளரக்கூடியவை. பகலில் சூரியன் நகர்கிற திசை நோக்கி அவை திரும்பிக்கொண்டே இருக்கும். அந்தப் பண்பு ஒளிநாட்டம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் விளைந்த சூரியகாந்தி இவ்வாறு திரும்புவதில்லை. அவை எப்போதும் கிழக்கு நோக்கியே இருக்கும், அவ்வாறு பூவின் மேற்பரப்பை வெப்பமாக வைத்திருக்கும், மகரந்தசேர்க்கைக்கு உதவுகிற தேனீக்களை தன்பக்கமாக அதிகமாத ஈர்ப்பதற்கு அது உதவும். அதன்விளைவாக அதிகமான மகசூல் கிடைக்கும்.
சூரியகாந்தியை விவசாயம் செய்து, பராமரிக்கிறவர்கள் போல நாமும் தேவ வார்த்தை பெலன்கொடுக்கிற விதத்தில் நிலத்தை நாம் பண்படுத்தலாம், அதற்கு அவருடைய வார்த்தையைப் பற்றிப் பிடிக்கவேண்டும், அவருடைய குமாரனைப் பின்பற்றவேண்டும். அப்போது நம்மை முதிர்ச்சியடையச் செய்வதற்கேற்ற நல்ல இருதயத்தையும் நேர்மையையும் தேவ வார்த்தையானது நம்மில் உருவாக்கும். அது அன்றாடம் நடக்கிற ஒரு செயல்முறை. நாம் குமாரனைப் பின்பற்றி, வளருவோமாக.