ரான் மற்றும் நான்சியின் திருமணமானது, நாளுக்கு நாள் வேகமாக முறிந்து கொண்டே வந்தது. அவளுக்கு ஒரு தவறான தொடர்பு இருந்தது. ஆனால் சில காலத்திற்கு பிறகு இந்தப் பாவத்தை தேவனுக்கு முன்பாக ஒத்துக் கொண்டாள். தேவன் அவளை என்ன செய்யச் சொல்கிறார் என்பதை அவள் நன்கு அறிந்திருந்தாள். ஆனால் அது அவளுக்குக் கடினமாக இருந்தது. உண்மையை அவள் ரானிடம் பகிர்ந்து கொண்டாள். விவாகரத்தினை செய்வதற்கு பதிலாக, ரான் அவளுக்குத் தன்னோடு உண்மையாக மனந்திரும்பி வாழ தன் மனமாற்றத்தை நிரூபிக்க அவளுக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளித்தார். அற்புதமான முறையிலே தேவன் அவர்களின் திருமணத்தை சரிசெய்தார்.

ரானின் நடவடிக்கையானது பாவிகளான நம்மைப் போன்றவர்களின் மேல் தேவன் வைத்த அன்பிற்கும், மன்னிப்பிற்கும் அடையாளமாக இருக்கிறது. தீர்க்கதரிசியான ஓசியா இதை நன்கு அறிந்திருந்தார். அவர் தவறான வாழ்க்கை வாழ்ந்த உண்மையில்லாத ஒரு பெண்ணை மணந்துகொள்ளும்படி தேவனால் கட்டளையிடப்படுகிறார். அதன் விளைவாக இஸ்ரவேலர்கள் தனக்கு விரோதமாக எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தினார் (ஓசியா 1) அதைவிட மிகக் கடினமான காரியம், ஓசியாவின் மனைவி அவனைவிட்டு பிரிந்து போனபின்பு, தேவன் மறுபடியும் அவளை ஓசியாவிடம் திரும்பி வரும்படி சொன்னதுதான். அவர், விபச்சாரியான ஒரு ஸ்திரீயை சேர்த்துக்கொள் (ஓசியா 3:1) என்று கூறுகிறார். அவர்களுடைய எல்லா கீழ்படியாமைக்கு மத்தியிலும் தேவன் இஸ்ரவேல் ஜனங்களோடு ஒரு நெருக்கமான உறவினை வைத்துக் கொள்ள விரும்புகிறார். எவ்வாறு ஓசியா தன் உண்மையில்லாத மனைவியை நேசித்தாரோ, தேடிச்சென்றாரோ, தியாகம் செய்தாரோ அதைப்போல தேவன் தம் ஜனத்தை நேசித்தார். அவருடைய நீதியான கோபாக்கினையும், அவருடைய வைராக்கியமும் அவருடைய மிகப்பெரிய அன்பினால் ஆட்கொள்ளப்பட்டது.

இதே தேவன் நம்மை அவருக்கு அருகில் வரும்படி விரும்புகிறார். விசுவாசத்தோடு நாம் அவருக்கு அருகில் வருவோமானால், அவருக்குள் நாம் முழுமையடைகிறோம் என்பதை நாம் விசுவாசிக்க முடியும்.